ஜனவரி மாதம் முதல் 95 பணிப்பெண்கள் லெபனானில் உயிரிழந்துள்ளனர்:மனித உரிமைகள் கண்காணிப்பகம் .

27.08.2008.
லெபனானில் பணிப்பெண்களாக கடமையாற்றும் இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் எதியோப்பியாவைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் தமது எஜமானர்களிடம் இருந்து தப்ப முயல்வதுடன் தற்கொலை முற்சிகளில் ஈடுபட முயல்வதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளதாக இணையச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
லெபனானில் 200,000 பேர் வரை பெரும்பாலும் இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் எதியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் பணிப் பெண்களாக கடமையாற்றுகின்றனர்.கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 95 பணிப்பெண்கள் லெபனானில் உயிரிழந்துள்ளனர்.

இவற்றுள் 45 மரணங்கள் தற்கொலை முயற்சி காரணமாக ஏற்பட்டவையெனத் தூதரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை 24 மரணங்கள் தமது எஜமானர்களிடம் இருந்து தப்பிச் செல்லும் முகமாக கட்டிடங்களில் இருந்து குதித்தபோது ஏற்பட்டவையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஒரு பணிப்பெண்கள் வீதம் லெபனானில் உயிரிழப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் நடிம் ஹௌரி தெரிவித்துள்ளார்.

எனவே பணிப்பெண்களாகக் கடமையாற்றுவர்களிற்கான கொள்கைகளை லெபனான் திருத்த வேண்டுமெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.