11.01.2009.
இது கருணை நிறைந்த ‘புத்தரின் தேசம்’ என சிங்கள பௌத்தர்கள் நம்புவதுடன் ஜனநாயக சோசலிச குடியரசு என அரசியலமைப்பில் பெயரிடப்பட்டுள்ள தேசமாகும். அதனால்
‘அறிவின் ஒளியில் புதிய வலுவுடன்
வெறுப்பும் வேறுபாடுகளும் இல்லாதொழிந்து
அன்பின் வலுவடைந்த தேசமாக
எல்லோரும் ஒருவராக அணிவகுத்துச்செல்ல
எம்மை முழுமையான சுதந்திரம் நோக்கி வழிநடத்து தாயே!’
எனத் தமது தேசிய கீதத்தையும் பெருமையுடன்
இசைக்கிறார்கள்.
எனினும் கருணையும் ஜனநாயகமும் நிறைந்த இந்த பௌத்த தேசத்தில் ஊடகங்கள் மாற்று கருத்துக்களை கொண்டிருக்க அனுமதியில்லை. ஆட்சியாளர்களின் சட்டங்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு உரிமையில்லை. மக்களுக்காக பேசும் உரிமையும் ஊடகங்களுக்கு இல்லை.
ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை இருப்பதாக சிலர் நினைத்தனர். தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சிலர் நினைத்தனர். நூதனமான ஒழுக்கம் நிறைந்த சமூகத்தில் உள்ள மக்களுக்கு, இந்த உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அனுபவிக்க உரிமை உள்ளது என நினைத்தனர்.
ஜனநாயகமும், கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் இவ்வாறான உரிமை இல்லை என தேசத்தை ஆளும் தேசப்பற்றுள்ள தரப்பினர் பகிரங்கமாவே தெரிவித்துள்ளனர்.
வடக்கில் இருந்த தமிழ் ஊடகங்களே முதலில் இந்த முகத்தில் அறையும் உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது முதலில் மிகவும் பகிரங்கமாகவும் கொடூரமாகவும் கற்பிக்கப்பட்டது.
அப்போது வடக்கில் இருந்து வந்த மாறுபட்ட குரல்களை வேறு இடங்களில் ஒலிக்கச் செய்ய கொழும்பு ஊடகங்கள் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் எழுந்த அந்த உரிமையின் குரலைக் கேட்பதற்கும் தெற்கில் உள்ள ஊடகங்கள் தயாராக இருக்கவில்லை.
சிலர் அவர்கள் பாடம் படிக்கட்டும் என்றே விட்டுவிட்டனர். எங்களுடன் இல்லாத அவர்கள் படித்த பாடம் எங்களுக்கு தேவையில்லையெனவும் கருதியிருந்தனர். அவர்கள் படித்த பாடங்களை எங்களுக்குச் சொல்ல அவர்கள் உரிமையற்றிருந்தார்கள். அவர்கள் அதைச் சொல்லியிருப்பின் இன்னும் சில காலம் வாழும் உரிமையை இழந்திருப்பார்கள். தற்போது தென் பகுதி ஊடகங்கள் அதனை அனுபவிக்க நேர்ந்துள்ளது.
எனினும் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க, அதனை கற்றறிந்தவர் பலர் இன்று எம்மிடத்தில் இல்லை. சிலர் மேலும் சில காலம் உயிர் வாழும் உரிமைக்காக, கற்றுக் கொடுக்கும் அந்த உரிமையை ரத்துச் செய்து கொண்டுள்ளனர். மேலும் சிலரின் உரிமைகள் அவர்களின் ஊடக நிறுவவனங்களுடன் தீப் பற்றி எரிந்து போனது. இந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ளவே சிரச ஊடக நிறுவனம் எரியூட்டப்பட்டது.
இந்த நிலையில் எவருக்கும் அடிபணியாத ஊடக செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு இது வெற்றி கொள்ள வேண்டிய சவாலாக இருந்தது. இதனை எதிர் கொள்ளும் போது, அவர் வார்த்தைகளை மறைத்து வைக்கவில்லை. இந்த சவாலை எதிர்கொள்ள அவர் தனக்கே உரித்தான பாணியை கைக்கொண்டிருந்தார். இதற்காக அவர் பாராட்டப்பட்டார். கௌரவிக்கப்பட்டார். அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் சவாலை வெற்றி கொள்ள முடியாது அவர் தனிமையானார்.
இது அடிக்கடி படித்துக் கற்றுக்கொள்ளும் பாடம் இல்லை. ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம். அதுவரையில்….
லங்காடிசன்ட் ஆசிரியர்.