23.10.2008.
கிழக்கில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் மீளக் கொண்டு வந்துள்ளதாக அரசாங்கம் கூறுவதை கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் கேலிக்குள்ளாக்குவதாக உள்ளது.
கடந்த ஆகஸ்டில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிடச் சென்ற பிபிசியின் சந்தேசியவைச் சேர்ந்த தக்ஷிலா ஜயசேன தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா பிரிவின் ஆதரவாளர் அல்லது உறுப்பினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
செப்டம்பரில் தினகரன் பத்திரிகையின் பிராந்தியச் செய்தியாளரான ராதிகா தேவகுமார் அவரது வீட்டிலிருந்தவேளை துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிப் படுகாயமடைந்தார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஊடக ஒருங்கிணைப்பாளராக சிறிது காலம் ராதிகா பணியாற்றியிருந்தார்.
கடந்தவாரம் தமிழ் அலை பத்திரிகையின் உரிமை தொடர்பாக கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினர் ஆயுத ரீதியாக மோதிக்கொண்டதன் காரணமாக மட்டக்களப்பில் பதற்றம் ஏற்பட்டது என பிபிஸி குறிப்பிட்டுள்ளது.
இது ஆரம்பத்தில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. கருணா வெளிநாட்டுக்குச் சென்றதன் பின்னர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் குழுவினர் அதனைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர் எனப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் இருந்த தமிழ் அலை பத்திரிகை பின்னர் கருணாவின் ஆயுதக்குழுவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 2002இல் கொள்ளையிடப்பட்ட தினக்கதிர் பத்திரிகையின் அச்சுசாதனங்களின் உதவியுடனேயே தமிழ் அலை அச்சிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில்; கருணா புலிகளின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 2002 ஓகஸ்ட் 8ஆம் திகதி சுதந்திர ஊடகம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் 1.2 மில்லியன் பெறுமதியான கணனிகள் அச்சியந்திரங்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் மின்சார உபகரணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டிருந்தது.
கருணா மற்றும் பிள்ளையானினால் கட்டவிழ்த்துவிடப்படும்ட இந்த வன்முறையானது குறிப்பாக ஊடகங்களுக்கெதிரான இந்த வன்முறையானது அவர்கள் புலிகளில் இருந்த போதும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் அவர்கள் அரசாங்கத்துடன் இருக்கும் போதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு தரப்புமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிராகவே செயற்பட்டு வருகிறார்கள். இந்நடவடிக்கைகள் இப்பிராந்தியத்தில் சுதந்தரமான ஊடக கலாசாரம் உருவாக உதவப்போவதில்லை.
கருணா பி;ள்ளையான் தரப்பினரிடையேயான பிரச்சினைகளை வன்முறையற்ற வழிகளில் தீர்ப்பதற்கான திறமையின்மை மற்றும் இயலாமை காரணமாக இப்பிராந்தியத்தில் ஜனநாயக நடைமுறைகள் வலுவற்ற நிலையில் சீர்குலையும் வகையில் உள்ளன. இது இப்பிராந்தியத்தில் ஊடகவியலாளர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடமையாற்ற முடியுமா என்கிற ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.
சுதந்திர ஊடக இயக்கம் இவ்வாறான ஊடகங்கள் மீதான ஆயுதக்குழுக்களின் வன்முறைகளை கடுமையாகக் கண்டிக்கிறது. கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழுக்கள் வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக வழிமுறைகளைப் பேணும்படியும் சட்டவாட்சியை கைக்கொள்ளுமாறும் விமர்சனபூர்வமான ஊடகத்திற்கு இடமளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறது.
THANKS: