சோமாலியாவில் உள்ள கடற்கொள்ளையர்களை போன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்பாண மக்களிடம் கப்பம் பெற்று வருவதாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னாருக்கு சென்றால் ஈபிஆர்எல்எப் அமைப்பினர் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர். கிழக்கிற்கு சென்றால் அமைச்சர் கருணா செயற்பட்டு வருகிறார்.
600 காவற்துறையினரையும் அரந்தலாவ பகுதியில் பிக்குமாரை கொன்றவர்களுக்கு எதிராகவும் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் வெற்றிக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சோமவன்ச குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக நேற்று கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ராஜபக்ஷவினரின் ஏகாதிபத்திய வெறிமுடிவுக்கு கொண்டு வரவே எதிர்க்கட்சிகள் பொது இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டன.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கெம்பல் மைதானத்திற்கு கொண்டு வந்து சேர்த்தமைக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் நன்றி கூறவேண்டும் எனவும் சோமவன்ச கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றி சோமவன்ச, யாழ்ப்பாணத்தில் சில பிரச்சினைகள் காணப்பட்டாலும் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் வெற்றி உறுதியானது.
யாழ்ப்பாணத்திலும் காவற்துறையினர் வெயிலில் காய்கின்றனர் கொழும்பிலும் காவற்துறையினர் வெயிலில் காய்கின்றனர். அங்கும் சோதனைகள் இடம்பெறுகின்றன. இங்கும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதாவது மக்களை சுதந்திரமாக நடமாடவிட வேண்டும். ராஜபக்ஷவினரே அச்சம் கொண்டுள்ளனர். காவற்துறையினர் தற்போது மகிந்த ராஜபக்ஷவின் கட்அவுட்டுகளை காவல் காக்கின்றனர். ராஜபக்ஷவின் கட்அவுட்டுகளை பாதுகாக்க வேண்டாம் என நாம் காவற்துறையினரிடம் கேட்டுக்கொள்கிறோம்.
எவருக்கும் அஞ்சாமல் சுகவீன விடுமுறையில் செல்லுங்கள். எதிர்வரும் 26 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பணிக்கு திரும்புங்கள். அதுவும் முடியாவிட்டால் பணியில் இருந்த விலகிச் சென்று 26 ஆம் திகதியின் பின்னர் ஊதியத்துடன் பணியில் இணைந்து கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம். பொன்சேக்கா வெற்றிப் பெறுவார். ராஜபக்ஷவின் பின்புறத்தை கழுவ போகாதீர்கள். சுயகௌரவத்துடன் பணியாற்றுங்கள். ராஜபக்ஷவினர் களனி நாய்களை கொண்டே அரசியல் செய்கின்றனர். எதிர்வாதிகளை கொலை செய்வதா, வெட்டுவதா என்பதை இன்று அலரி மாளிகையில் தீர்மானிக்கின்றனர்.
அப்படி செய்து கொண்டு எதிர்க்கட்சியினர் வைராக்கிய அரசியலில் ஈடுபடுவதாக கூறுகின்றனர் எனவும் சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதேவேளை பொன்சேக்கா வெற்றிப் பெற்றப் பின்னர் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும். இடம்பெயர்ந்த மக்கள் பிரச்சினைகள் இன்றி வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படும். வடக்கு கிழக்கு மக்களுக்கு அதுவே தற்போதைய தேவையாக உள்ளது.
தேர்தல் ஆணையாளர் சட்டத்தை அமுல்படுத்துகிறார். ஆனால் காவற்துறை மா அதிபர் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை. காவற்துறை மா அதிபர் சரியாக தனது கடமைகளை செய்வதில்லை. அப்படியெனில் இதனை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?. நாட்டு மக்களினால் மாத்திரமே அதனை தடுத்து நிறுத்த முடியும். மக்கள் அவ்வாறு தடுத்து நிறுத்தாது போல் அனைவரும் அடிமைகளாக வாழ
நேரிடும் எனவும் சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.