சோசலிச யதார்த்தவாதமும் இலக்கியக் கோட்பாடும் : கோரி சோல் மொர்சன் -தமிழாக்கம் ஏ.ஜே.கனகரட்னா

சோசலிச யதார்த்தவாதம் பற்றிய பெரும்பாலான கருத்துப்பரிமாற்றல்கள் ஆய்வுகளை விட புலம்பல்களையே ஒத்திருக்கின்றன. – புரியக்கூடிய காரணங்களினால் – அவை வழக்கமாகப் புரட்சிக்கு முற்பட்ட பாரம்பரியம் கழிந்ததையிட்டு ஒப்பாரி வைக்கின்றன; எழுத்தாளர்களுக்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்ட விதத்தையும் இலக்கியத்திற்கு ‘நலம் அடிக்க’ப்பட்ட கொடூர முறைகளையும் கடிந்து கொள்கின்றன. உயர்பள்ளிக்கூட பாடவிதானத்திலிருந்து டொஸ்டொவெஸ்கியை அகற்றிவிட்டு ஒரு வாடீவிவ்ற்கு ஸ்டாலின் பரிசு வழங்கும் அரசாங்கக் கொள்கைகளைக் கண்டிக்கின்றன. நானும் வாடீவ்வைவிட டொஸ்டொவெஸ்கியையே விரும்புகிறேன்; இலக்கியம் ஆற்ற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிற சமூகப் பணிகளை சோவியத் யூனியனில் இலக்கியம் ஆற்றவில்லை என நான் கருதுகின்றேன்.
இது சொல்லியாகிவிட்டதும், சோசலிச யதார்த்த வாதத்தைப் பற்றி கையறு நிலைப்பாங்கில் மட்டும் தான் எழுதலாம் என நான் கருதவில்லையென்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். சோசலிச யதார்த்த வாதத்தை வெறுமனே துரதிர்ஷ்டவசமான அரசியல் விளைவாக அல்ல ஓர் இலக்கிய மெய்மையாகக் கருதி நோக்கும் ஆய்விற்கு இடம் இருக்கின்றது. இருக்க வேண்டும் – அதை நியாயப்படுத்தி சமாதானம் கூற முனைகிறோம் என்ற குற்றச் சாட்டிற்கு ஆளாகாமல்.

சோசலிச யதார்த்தவாதத்தையும் சோசலிச யதார்த்த வாத நாவலையும் பயன்மிக்க சில வழிவகைகளில் அணுகும் முறை பற்றிக் குறிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கம். பயன்மிக்க என்னும் போது, முழு மொத்தமாக இலக்கியத்தின் தன்மையையும் பணியையும் புரிந்து கொள்வதற்கு உதவும் பார்வையைச் சுட்டும். டொஸ்டொயெவ்ஸ்கியையும் டிக்கன்சையும் பாராட்டுவதற்கு மேற்கிலே வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அளவு கோல்களின்படி சோசலிச யதார்த்வாதம் சிறப்பற்றதாகக் கணிக்கப்படினும், தற்கால இலக்கியக் கோட்பாடு, இலக்கிய வரலாறு, ஒப்பியல் இலக்கியம் ஆகியதுறைகளில் காணப்படும் மிக முக்கிய பிரச்சினைகள் பற்றிச் சிந்திப்பதற்கு இது பயனுள்ளதாக அமையலாம்.

சோசலிச யதார்த்தவாத நாவலை வரையறை செய்ய விழையும் பெரும்பாலான முயற்சிகள், மேற்கத்திய அல்லது புரட்சிக்கு முற்பட்ட ரஷ்ய நாவல்களிலிருந்து அதை வேறுபடுத்திக் காட்டும் தன்மைகளைத் தொகுத்துத் தருபவையாக அமைகின்றன. இத்தகைய தனித்தன்மைகளின் தொகுப்புக்கள் வழக்கமாகப் பின்வருவனவற்றை அல்லது இவற்றில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கும்.

1. கதாபாத்திரங்களினது இரு பரிமாண உளவியற் பாங்கு. இதற்கு மாறாக மேற்கத்திய கதாபாத்திரங்கள் உளவியல் சிக்கல் மிக்கவர்களாகக் காட்சியளிக்கின்றனர். மேற்கத்திய நாவல்கள் ஆழுமைத் தேடலை விபரிப்பவையாக அமைய, சோவியத் நாவலில் கதாபாத்திரம் தனி ஆழுமை நிலையைத் தாண்டி மார்க்சிய லெனிசத்தில் தனக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் பங்குடன் ஒன்றிணையப் போராடுகின்றான்.

2. மேற்கத்தைய வாசகர்களின் நோக்கில் நாவலுக்கு ஒவ்வாத கருப்பொருளைக் கையாளல்: சோசலிச யதார்த்தவாத நாவலில் கதாபாத்திரங்களின் மோதலுக்கு காதல் காரணமாகயிராது: இயந்திரம் ஒன்றை அமைப்பதில் போட்டி திட்டங்கள் மோதலுக்கு வழிவகுக்கும்.

3. மேற்கத்தைய வாசகர்களின் நோக்கில் நாவலுக்கு ஒவ்வாத கருப்பொருளைக் கையாளல்: சோசலிச யதார்த்தவாத நாவலில் கதாபாத்திரங்களின் மோதலுக்கு காதல் காரணமாகயிராது: இயந்திரம் ஒன்றை அமைப்பதில் போட்டி திட்டங்கள் மோதலுக்கு வழிவகுக்கும்.

4. அரசியலைக் கருப்பொருளாக கையாளாத நாவல்களிலும் அரசியல் பிரசங்கங்கள் இடம் பெற்றிருக்கும்.

5. முரணுணர்வு (ஐரணி) இன்மையே மேற்கத்தைய வாசகர்களுக்கு அதிகம் அதிருப்தி அளிக்கின்றது.

6. ‘சுப’ முடிவு.

இத்தகைய வரையறை முறையில் பல சிக்கல்கள் உள்ளன. மேலே தரப்பட்டிருக்கும் தன்மைப் பட்டியல் எல்லா சோசலிச யதார்த்தவாத நாவல்களுக்கும் ஒரு சீராகப் பொருந்தும் என்பதற்கில்லை. எடுத்துக்காட்டாக, சொலொக்கொவ்வின் ‘அமைதியான டொன் நதி’ யையும் 1960 களில் தோன்றிய ‘புதிய எழுத்தாளர்’களையும் குறிப்பிடலாம். மேலும் சோவியத் புனைகதைகளிலிருந்து பெறப்பட்ட இப்பட்டியல் ஏனைய சோசலிச நாடுகளின் இலக்கியங்களுக்கும் முற்றாகப் பொருந்தும் என்பதற்குமில்லை. சோசலிச யதார்த்தவாதம் சர்வதேச தோற்றப்பாடேயன்றி ரஷ்யாவிற்கே உரிய ஒன்றல்ல. மேற்கத்தைய வாசகர்களுக்குச் சீன நாவல்களும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவையாகத் தோன்றலாம். ஆனால் சோவியத் புனைகதைகள் மீது சீனத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்வதால், இருநாட்டுப் புனைகதைகளுக்குமிடையே கணிசமான வேறுபாடுகளை அவ்வவ் நாட்டு வாசகர்கள் காண்கின்றனர் என்பதை ஊகிக்கலாம். எனவே, தனிச்சிறப்புகள் அல்லது தன்மைகளின் அடிப்படையிலே வரையறை செய்ய விழைவது ஒன்றில் அளவுக்கு மிஞ்சி அகன்றதாய் இருக்கும். (மேலே தரப்பட்டுள்ள பட்டியல் டால்ஸ்டாயின் பிந்திய படைப்புக்கள் பலவற்றிற்கும் பொருந்தும்) அல்லது மிகவும் குறுகியதாய் இருக்கும். (சோசலிச யதார்த்தவாத இலக்கியங்களின் பல்வேறுபட்ட தன்மையைக் கணக்கில் எடுத்தால்)

சோசலிச யதார்த்தவாத நாவலைத் தனிச் சிறப்புக் கூறுகளின் அடிப்படையில் வரையறை செய்வதற்கு இதை விட முக்கியமான ஆட்சேபனை ஒன்று உண்டு. புதிய சோவியத் நாவலைப் படைத்தவர்களுக்கு மிகவும் முக்கியமாகப்பட்ட ஓர் அம்சத்தினை இந்த வரையறை புறக்கணிக்கிறது: அதாவது இன்னுமொரு இலக்கியக் குழாத்தின் உற்பத்திப் பொருளாக அதன் படைப்பாளிகள் அதனைக் கருதவில்லை. அதற்கு இணையான மேற்கத்திய வடிவங்களிலிருந்து முற்றிலும்வேறுபட்ட ஒருகலை வகையாகவே அதனைக் கருதினர். இந்தப் புதிய பாட்டாளி வர்க்க இலக்கியம் முந்திய பூர்சுவா வடிவங்கிளிலிருந்து தன்மையில் வேறுபட்டஒன்றாக விளங்குமென்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இதன் பயனாக பூர்சுவாக்களால் புனிதமாக்கப்பட்ட அழகியல், இலக்கிய அளவு கோல்கள் வரலாற்று வழிவந்தவையே தவிர எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் உலகளாவிய பொது அளவுகோல்கள் அல்ல என்ற உண்மை புலப்படும் எனக் கருதப்பட்டது. பண்பாட்டின் வரலாற்றை மார்க்சிய வாதிகள் எழுதவருங்கால பூர்சுவா வர்க்கத்தின் பங்களிப்பு படுமோசமாக மிகைப்படுத்தப் பட்டிருத்தல் அம்பலமாகுமென மாக்சிம் கார்க்கி திடமாக நம்பினார். குறிப்பாக இலக்கியத்துறையிலும். ஒவியக் கலையிலும் இந்த மிகைப்படுத்தல் நிகழ்ந்திருக்கின்றதென கார்க்கி சுட்டிக்காட்டினார். கலைகளினதும், பண்பாட்டினதும் இயல்புகளின் அடிப்படைகள் பற்றி மீள் சிந்தனையின் தேவை அப்பொழுது பரவலாக உணரப்பட்டது.

கலையை மீள்வரையறை செய்வதற்கு முனைந்தவர்கள் மர்க்சியவாதிகள் மட்டும் அல்லர் என்பது இங்கு வற்புறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். 1920களில் புரட்சி பல்வேறு சிந்தனையாளர்களுக்குப் பல்வேறு தரிசனங்களை அளித்தது. பாட்டாளி வர்க்கவாதம் பூர்சுவா சுவைப்பின் கன்னத்தில் விழுந்த அறைகளில் ஒன்று மட்டும்தான். மார்க்சியத்தைச் சாராத இலக்கிய இயக்கங்கள் சிலவற்றில் மாயாகோவ்ஸ்கியும் – சோசலிச யதார்த்தவாதம் என ஈற்றிலே வடிவெடுத்த போக்கினை உருவாக்க உதவிய முக்கியஸ்தர்களுள் இவரும் ஒருவர் – பங்கு பற்றியமை தற்செயல் நிகழ்வன்று. சோசலிச யதார்த்தவாதத்தைப் புரிவதற்கு உருவவாதம் மிக முக்கியமான இயக்கமாக எனக்குப் படுகின்றது.

உருவவாதமும் சோசலிச யதார்த்தவாதமும் எதிரும் புதிருமாகப் பொதுவாகக் கருதப்படுவதால் இவை இரண்டுக்குமிடையே உள்ள பொது அம்சங்களை வற்புறுத்துதல் பயனுள்ளதாய் இருக்கும். கான்ட்ரின் காலத்திலிருந்து வளர்ந்த மேற்கத்தைய அழகியல் கோட்பாட்டுப் பாரம்பரியம் எவ்வாறு அமைந்திருப்பினும், கலை இலக்கியத்தின் வரையறை முடிந்த முடிபாக இராது ‘திறந்த’ பிரச்சினையாக உள்ளது என இரு சாராரும் நம்பினர். ஐரோப்பாவினதும் அதன் ஆய்வறிவு பாரம்பரியங்களினதும் பகுதியாக இருக்கும் அதே சமயம் ரஷ்யா அவற்றிற்கு வெளியே நிற்பதால் புதிய வரையறைகளை வகுப்பதற்கு ரஷ்யா தக்க நிலையில் உள்ளதாக இருசாரரும் கருதினர். இலக்கியத்தினதும், இலக்கிய அளவு கோல்களினதும், இலக்கிய மதீப்பீட்டுக் கொள்கைகளினதும் வாழையடி வாழையான வரையறைகள் இறைவனால் கையளிக்கப்பட்டவையோ உலகளாவியவையோ அல்ல. அவை சமுதாய, வரலாற்று அடிப்படை வாயிலாக எழுந்தவை என்பதை ரஷ்யா சுட்டிக்காட்ட வல்லது என்ற கருதுகோளும் இரு சாரார்க்கும் பொதுவானதாய் இருந்தது. உருவ வாதத்திற்கும், மார்க்சியத்திற்குமிடையே நிலவிய இந்தப் பொது அடிப்படைகளையே பக்தின், வொலசினோவ் போன்றோர் 1920களின் பிற்பகுதியிலும், 1930 களிலும் இணைக்க முயன்றனர். பிந்திய உருவ வாதத்திலும் சமூக இயலையும் உருவ வாதத்தையும் இவ்வாறு இணைக்கும் போக்கினை நாம் அவதானிக்கலாம்.

சோசலிச யதார்த்தவாதத்தின் வரையறை – குறிப்பாக இலக்கியத்தின் வரையறை – கிளம்பும் கோட்பாட்டுப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு இத்தகைய இணைப்புக்களே திறவுகோல்களாக அமைகின்றன. ஏனெனில் சோசலிச யதார்த்த வாதம் இதுவரை பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட பெரும்பாலான வரையறைகளோடு முரண்படுகின்றது. – அவ்வாறு முரண்படுவதே அதன் திட்டமிடப்பட்ட நோக்கமுமாகும். ‘இலக்கியக் கோட்பாடு’ என்ற நூலை எழுதிய நூலாசிரியர்களின் (வெலக், வொறன்) அணுகு முறையிலே சோசலிச யதார்த்தவாதம் இலக்கியமே அல்ல என்ற முடிவிற்கு வரலாம். இத்தகைய மதிப்பீடு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நிலவுகின்றது. திட்டவட்டமான புறச் செயலுக்கத் தூண்டும் (அல்லது அவ்வாறு தூண்டும் நோக்கோடு எழுதப்பட்ட) எதுவும் உண்மையான இலக்கியம் அல்ல என இந்த நூலாசிரியர்கள் போன்று கருதினால் சோசலிச யதார்த்த வாதம் இலக்கியம் அல்லத்தான். ஆனால் அதே அளவுகோலின் படி மத்திய காலக் கலையின் பெரும் பகுதியும், டால்ஸ்டாயின் பிந்திய படைப்புக்கள் பலவும் உண்மையான கலை, இலக்கியம்அல்ல என்று நிராகரிக்க வேண்டியதுதான். நவீன ஐரோப்பியக் கலையை அடிப்படையாக வைத்து பொதுப்படையாகக் கலையைப் பற்றி ஆதாரமற்ற கோட்பாடுகளை வகுக்க விழைவதை டால்ஸ்டாய் சாடினார் என்பது மனங் கொள்ளத்தக்கது. உலகத்தின் (ஐரோப்பாவினது அல்ல) கலையின் பெரும்பகுதி வெளிப்படையான சமய அல்லது சித்தாந்த அடிப்படையிலே திட்டவட்டமான புறச்செயலுக்குத் தூண்டி வந்திருக்கின்றது என்பதை டால்ஸ்டாயும், சோசலிச யதார்த்த வாதத்தை ஆதரிப்பவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். டால்ஸ்டாயுடைய வாதத்தையொத்த வாதங்கள் 1920களில் ரஷ்யாவிலே அடிக்கடி முன்வைக்கப்பட்டன. இந்தப் பகைப்புலத்திலேதான் பிந்திய உருவவாதிகள் சமூக இயல் சார்ந்த தமது இலக்கிய மாதிரிகளை வகுத்தனர். நவீன ஐரோப்பிய இலக்கியம் ஒர் இலக்கியமே தவிர இலக்கியம் அல்லது. (அதாவது ஐரோப்பிய இலக்கியம் உலகப் பொதுமை வாய்ந்த இலக்கியம் அல்ல) என்ற மெய்மையை இந்த மாதிரிகள் ஒப்புக் கொண்டிருந்தன.

அடிப்படைத் தன்மைகளிலே வேறுபடும் இலக்கியங்கள் எவ்வாறு சாத்தியமாகின்றன என்பதை விளக்குவதே பிந்திய உருவவாத இலக்கியமாதிரிகளின் ஒரு முக்கிய குறிக்கோளாய் இருந்தது. அவர்கள் அளித்த விளக்கங்களின் மைய எண்ணக்கரு இதுதான்: இலக்கியம் ஏனைய சமூக ஒழுங்கமைப்புக்களுடன் பின்னிப் பிணைந்து செயல்படும் ஓர் ஒழுங்கமைப்பே. இந்த ஏனைய சமூக ஒழுங்கமைப்புக்கள் காலத்திற்குக் காலமும், பண்பாட்டிற்குப் பண்பாடும் மாறுபடுவதாலும், இலக்கிய அமைப்பினதும் சமூக அமைப்பினதும் பின்னலான செயற்பாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் இலக்கிய அமைப்பு காலத்திற்குக் காலமும், பண்பாண்டிற்குப் பண்பாடும் மாறுபடும். இலக்கிய அளவுகோல்கள் சமூக, வரலாற்று அளவுகோல்கள் என்பது இந்த ஆய்விலிருந்து பெறப்படுகின்றது. எனவே இலக்கியத்தின் எல்லைகளை வரையறுப்பதும் இலக்கிய வகைகளைப் பகுப்பதும் சமூக, வரலாற்றுப் பணிகளே. எடுத்துக்காட்டாக வாழ்க்கைக் குறிப்புக்கள், நெருக்கமான பாங்கிலமைந்த கடிதங்கள் போன்றவை இலக்கிய வகைகளா என வினவுவது வரலாறு சார்ந்த கேள்வியே அன்றி, காலத்தை வென்ற அல்லது கடந்த வினா அல்ல. சிலவேளைகளில் அவை இலக்கிய அமைப்பின் பகுதியாகக் கணிக்கப்படுகின்றன; சில காலங்களில் அவ்வாறு அவை கருதப்படுவதில்லை. அவை இலக்கிய வகையைச் சார்ந்தவை எனக் கருதப்படும் போது அவற்றின் பிரசன்னம் முழு இலக்கிய அமைப்பினையும் மாற்றியமைக்கின்றது.

இலக்கிய வரலாற்றை அமைப்புக்களினதும், பணிகளினதும் வாயிலாகத்தான் பிந்திய உருவவாதம் விளங்கிற்று. இலக்கியப் படைப்புக்களின் மாறுபடும் தன்மைகளைப்பற்றி யல்ல, ஓர் அமைப்பின் கூறுகளுக்கிடையே மாறுபடும் உறவுகளைப் பற்றியே பேசுதல் பொருத்தமானது என அவர்கள் வற்புறுத்தினர். இலக்கியப் பரிணாம வளர்ச்சி என்பது ஓர் அமைப்பிற்குப் பதிலாக இன்னொரு அமைப்பு இடம் பெறுதலேயாகும். இந்தப் ‘பதிலீடு’ அது நிகழும் காலப் பின்னணிக்கு ஏற்றவாறு மெதுவாக அல்லது சடுதியாக நிகழலாம். இதனால் உருவம் சார்ந்த கூறுகள் சடுதியாகவோ முற்றாகவோ மாற்றப்படுவதோ அகற்றப்படுவதோ இல்லை. உருவம் சார்ந்த இந்தக் கூறுகள் புதிய பணியை ஆற்றுகின்றன. எனவே தான் இலக்கியத் தோற்றப்பாடுகளை ஒப்பிடும் போது உருவங்களின் அடிப்படையில்மட்டுமல்ல, பணிகளின் அடிப்படையிலும் அதனைச் செய்தல் சாலவும் சிறந்தது.

இத்தகைய பிரச்சினைகளை நாம் வழக்கமாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதில்லை என்றால் அதற்குக் காரணம் ‘ஒப்பியல் இலக்கியம் என்பது நடைமுறையில் பெரும்பாலும் ஐரோப்பிய இலக்கியங்களின் ஒப்பீடாக அமைவதே. இவற்றிற்கிடையே அடிப்படைத்தன்மை வேறுபாடு அதிகம் இல்லை. ஆனால் நாம் உலக இலக்கிய (ஐரோப்பிய இலக்கியம் மட்டுமல்ல) மாணவர்களாக எம்மை ஆக்கிக் கொள்ள விரும்பின் பிந்திய உருவ வாதத்தின் மாதிரிகளை மையமாகக் கொள்ள வேண்டும். நாட்டார் இயலாளர் இவற்றை ஒத்த அணுகு முறைகளைக் கையாள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்மையின் அடிப்படையில் அல்லாது பணியின் வாயிலாக நோக்குவோமாயின் வௌவேறு சோசலிச நாடுகளிலேயுள்ள சோசலிச யதார்த்த வாதக் கலையின் அடிப்படை ஒற்றுமை புலப்படும். இலக்கியத்தின் வரையறை பொதுவான ஒன்றாக இருப்பதனால் இந்தஒற்றுமை காணப்படுகின்றது. அதே சமயம் இந்நாட்டு இலக்கியங்கள் தத்தமது சமூக அமைப்புக்களோடும், வரலாறுகளோடும் பின்னிப் பிணைந்து செயற்படுவதால் அவை வேறுபடுகின்றன.

பணியின் அடிப்படையில் சோசலிச யதார்த்த வாதத்தை வரையறுப்பது எளிதன்று. அவ்வாறு செய்வதாயின் பின்வருவனவற்றை வரையறுத்ததாக வேண்டும்.

1. முழுப் பண்பாட்டிலும், பொதுவாகக் கலைகளிலும் இலக்கிய அமைப்பு வகிக்கும் இடம்.
2. இலக்கிய அமைப்பிற்கும் அண்டைய அமைப்புக்களுக்குமிடையே உள்ள தொடர்புகள்.
3. ஓர் இலக்கியப் படைப்பு ஆற்ற வேண்டிய பல்வேறு பணிகளின் வரன்முறையும் இதில் அழகியல் பணியின் இடமும்.

இவற்றினை ஆராயும்போது எமது சமுதாயத்திலே புனைகதை ஆற்றும் பணியும், இப்புனைவுகளின் தன்மையுமே வேறொரு சமுதாயத்திலும் காணப்படுகின்றன என்ற கருதுகோளை நாம் கைவிட வேண்டும்.

சோசலிச யதார்த்த வாதத்தை விரிவாக வரையறுப்பது எனது நோக்கமன்று. சாத்தியப்படான புறப்படு நிலையைச் சுட்டுதலே எனது உத்தேசமாகும். சோசலிச யதார்த்தவாதம் என்ற இலக்கிய வகையையும் சோசலிச யதார்த்தவாத நாவல் என்ற நாவல் வகையையும் பொறுத்தவரை அழகியல் பணி மேலாதிக்கம் பெற்றிருக்கவில்லை. இது எமக்கு முரணாகப்படலாம். ஏனெனில் எமக்குப் பரிச்சயமான கலையில் அழகியல் பணியே மேலாதிக்கம் பெற்றிருக்கின்றது; அத்தகைய கலையிலிருந்தே எமது அழகியல் கோட்பாடுகளும் பெறப்பட்டுள்ளன. இந்தக் கோட்பாடுகள் ஒரு வட்டத்திற்குள் வளைந்து சுழல்வன. அவை கூறியதைத் திருப்பவும் கூறுவன என டால்ஸ்டாய் சுட்டிக் காட்டினார். அழகியல் கூறுகளை மேற்கத்தைய கலைப் பண்புகளுக்கு ஏற்றவாறு வகுத்துவிட்டு கலையை அழகியல் தன்மைக்கு ஏற்றவாறு வரையறுத்தல் இந்த ‘வட்டத் தன்மை’ யைப் புலப்படுத்துகின்றது. வேறு பண்பாடுகளுக்கு இந்த அளவுகோல்களைப் பொருத்தும் போது எமது வரையறைகள் தவறிவிடுகின்றன.

இந்தச் ‘செக்கு வட்டத்தில்’ இருந்து தப்பவேண்டுமென்றால் இரு வழிகளைக் கையாளலாம். ஒன்றில் அழகியல் என்பதை மீள்வரையறை செய்யலாம் அல்லது டால்ஸ்டாயைப் போன்று கலை என்றால் என்ன என்ற வினாவுக்கு விடைகாண விழையலாம். இந்த இரண்டாவது முயற்சியை மேற்கொள்ளும் போது பல்வேறு பண்பாடுகளிலே பல்வேறு காலகட்டங்களில் கலை என்பது பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளப்பட்டதைக் காணலாம். அழகியற் பணி எல்லாக் காலங்களிலும் மேலோங்கி இருந்ததில்லை. எடுத்துக்காட்டாக மத்திய காலப்பகுதியில் அழகியற்பணியைவிட சமயப் பணியே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. நவீன ஐரோப்பியக் கலையிலேகூட அழகியற்பணி முக்கியத்துவம் குன்றியிருந்த காலகட்டங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

சோசலிச யதார்த்த வாதத்தை வரையறுக்கும் போது அழகியற்பணி இரண்டாந்தரமானதா அல்லது அதிலும் முக்கியத்துவம் குறைந்ததா என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட நிர்மாண வேலைகளிலே ஈடுபட்ட தொழிலாளரை உற்சாகப்படுத்தும் பொருட்டு எழுதப்பட்ட பல சோசலிச யதார்த்த வாத நாவல்களைக் காண்கிறோம். மேற்கத்தைய கலையில் காணப்பட்ட ஓர் உடனடி பொருளாதாரப் பணியை இவற்றில் நாம் காண்கிறோம். அதனால் மேற்கத்தைய வாசகர்கள் இப் பொருளாதாரப் பணி இலக்கியத்துக்குக் குந்தகமானது எனக் கருதத் தலைப்படுகின்றனர். நவீன மேற்கத்திய இலக்கியத்தில் சமூக அரசியல் விமர்சனம் முக்கிய ஒரு பணியாகக் காணப்படுகின்றது. ஆனால் சோவியத் ஒன்றியத்திலே இலக்கியம் இந்தப் பணியை மிக மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே ஆற்றுகின்றது. எமக்குப் பரிச்சயமான ஓர் அம்சம் காணப்படாததால் நாம் வாசிப்பது இலக்கியம் அல்ல எனத் துணியத் தலைப்படுகின்றோம். எமது பண்பாட்டைப் பொறுத்தவரைகூட அரசியல் விமர்சனம் பொதிந்துள்ள கலை; ஒப்பீட்டு அடிப்படையில் அண்மைக்காலத்துத் தோற்றப்பாடே. எனவே அரசியல் கலைப் பாரம்பரியம் அற்ற பண்பாடுகள் சோசலிச யதார்த்த வாதத்தை நோக்குவதில் எம்மிலிருந்து வேறுபடுதல் சாத்தியமே. சுருங்கக் கூறின் சோவியத் இலக்கியத்தை இலக்கியத் தன்மையற்ற ஒன்றாக நாம் கருதுவதற்குக் காரணம் அழகியற்பணி இரண்டாந்தர மனாதாய் அங்கு கணிக்கப்படுவதோடு அங்கு இலக்கியம் ஆற்றும் பணிகளின் வரன்முறை அமைப்பு நவீன ஐரோப்பிய ஒழுங்கமைப்பிலிருந்து வேறுபடுவதாலேதான்.

நாவலை ஓர் இலக்கியவகை என்ற முறையில் வரையறுக்க முற்படும்போது அதன் சிறப்பியல்புகளை உளவியல் (நாவல் என்பது சுயத்தினைத் தேடும் முயற்சி) யதார்த்த, (அன்றாட வாழ்க்கையையும், அனுபவ விபரங்களையும் கையாளும் முதலாவது இலக்கிய வகையே நாவல்) பாங்கிலே காண்பது தான் வழக்கமாகியுள்ளது. நாவல் என்ற இலக்கிய வகையின் மையப் பண்புகளாக இவை பொதுவாகக் கருதப்படுகின்றன. சோசலிச யதார்த்தவாத நாவலுக்கு இந்த வரையறை பொருந்தாதெனக் குறிப்பிட விரும்புகின்றேன். நவீன பரிசோதனை நாவலாசிரியர்களும் (பிரெஞ்சுக்காரரும், அமெரிக்கரும்) மேற்குறிப்பிட்ட வரையறைமீது அதிருப்தி கொண்டு ‘புதியநாவலைப்’ பற்றிப் பேசுவதும் இங்கு குறிக்கற்பாலது. சோசலிச யதார்த்த வாத நாவல் யதார்த்தப் பாங்கானதோ உளவியல் பாங்கானதோ அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாவல் என்ற இலக்கிய வகையை ஆங்கில நாவலின் சாயலில் வரையறுக்க விழைவது ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் அளவு கோல்களை பொதுமைப்படுத்தி மையப் படுத்துவதேயன்றி உண்மையான வரையறையை வகுத்தலன்று. ஐரோப்பாவைச் சாராத நாடுகளிலே நாவல் என்ற இலக்கிய வகை இறக்குமதி செய்யப்பட்டதன் பயனாக இந்த மேற்கத்தைய இலக்கிய வகை கீழைத்தேசமயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நாவலைப் பற்றிய எமது கருத்துருவமும் பெரும்பாலும் மாறலாம். இந்தப் புதிய நெறி ஆய்வில் சோசலிச யதார்த்தவாதம் எமக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக உளவியலையோ அல்லது யதார்த்தக் கதைப் பின்னலையோ சாராது வாய்ப்பாட்டுப் பாங்கிலே கதைப்பின்னலைக் கொண்ட சோசலிச யதார்த்தவாத நாவல் ஐரோப்பாவிற்கு வெளியே நாவல் வடிவம் உள்வாங்கப்பட்ட விதத்தைப் புரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும்.