சுன்னாகத்தில் ஆரம்பித்து குடாநாடு முழுவதையும் குடி நீரற்ற, விவசாயத்திற்குப் பயன்பாடற்ற நிலமாக மாற்றும் இலங்கை பேரினவாத அதிகாரவர்க்கத்தின் திட்டத்திற்கு எதிராக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். லண்டனில் பறை- விடுதலைக்கான குரல் அமைப்பினர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கையில் போராட்டங்கள் ஆரம்பித்தன. சுன்னாகத்தில் கழிவு எண்ணையைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் கழிவு எண்ணையை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றுகின்றனர்.
மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்ட எம்.ரி.டி வோக்கேஸ் என்ற நிறுவனம் இலங்கையில் இந்த அழிவை நடத்திவருகிறது. இதனால் சுன்னாகம் அனல் மின்னிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர் நஞ்சாக்கப்பட்டுள்ளது. பலர் குடி நீருக்காக தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லாக்கட்டுவன், உரும்பிராய், ஊரெழு போன்ற பிரதேசங்களில் திராட்சைப் பயிர்ச்செய்கை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. நீரை அருந்தியவர்கள் 11 பேருக்கு இதுவரை புற்று நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரதேசமும் மக்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவதை வாக்குப் பொறுக்கும் கட்சிகள் கண்டுகொள்வதில்லை. மக்களை அணிதிரட்டவும் அவர்ளைப் போராட்டத்திற்குத் தயார்செய்யவும் அரசியல் கட்சிகள் தயாரற்ற நிலையில் மக்கள் சுயமாகப் போராடிவருகின்றனர்.
யாழ்ப்பாணக் குடா நாட்டின் நீர் நில வளங்களை அழித்து மக்களின் உயிரைப் பணயம் வைத்து அவர்களின் பணத்தைக் கொள்ளையிடும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் நண்பரான நிர்ஜ் தேவா என்பவர். இலங்கை ஆட்சி மாற்றத்தின் பின்புலத்தில் செயற்பட்ட நிர்ஜ் தேவா பிரித்தானிய ஆளும் பழமைவாதக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்.
ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. சுற்றுச்சூழலைத் தெரிந்துகொண்டே மாசுபடுத்தல் என்பது கிரிமினல் குற்றமாகும் என்று பிரித்தானியச் சட்டங்கள் கூறும் போது நிர்ஜ் தேவா இலங்கை ஆளும் கட்சியுடன் இணைந்து வடக்கின் ஒருபகுதியை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
ஆக, இலங்கையின் ஆளும் கட்சியின் ஆதரவுடன் இந்த அழிப்புத் தொடரும். இலங்கையிலும் பிரித்தானியாவிலும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவதனூடாகவே அழிவுகளை மட்டுப்படுத்தலாம்.
தொடர்பான பதிவுகள்:
தண்ணீர் உயிர்வாழ்வின் ஆதாரம். மின்சாரம் இன்றி வாழ முடியும். தண்ணீர் இன்றி உயிர் பிழைக்க முடியுமா? கணனிகளும் குளிர்சாதன பெட்டிகளும் தொலைபேசிகளும் தொலைக் காட்சி பெட்டிகளும் மின் விசிறிகளும் இரண்டாம்பட்சமானவையே.
Northern Power Com. Pvt Ltd ஆனது மகிந்த ஆட்சியின்போது சுண்ணாகத்தில் மின் உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்திருந்தது. கழிவு எண்ணெய்கள் நிலத்தில் விடுவதை மக்கள் அறியாதவாறு தடுக்க, மின் நிலையத்திற்கு இராணுவப் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. 2012ஆம் ஆண்டிலேயே இந்த கழிவு எண்ணெயகள் யாழ் குடாப் பிராந்தியத்தை நிரந்தரமாகப் பாதிக்கும் என எச்சரிக்கை செய்து Water Resources and Drainage Board Chairman Hettiarachchi Environmental Authority Director General இற்கு உமனடி நடவடிக்கைகளை எடுக்கக் கோரியிருந்தார். ஆனால் அந்தக் கொம்பனி முன்னைய அரசுடன் தொடர்பானதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று இளவாலை முதல் அளவெட்டி, தெல்லிப்பழை, கட்டுவன், மல்லாம், ஏழாலை, சுண்ணதகம், ஊரெழு, இணுவில், ஈஞ்சடி வைரவகோயில்(சுதுமலை எல்லை) வரை கிணறுகளில் கழிவு எண்ணெய்கள் கலந்து மனித, மிருக, தாவர பாவனைக்கு உதவாததாக மாறிவருகிறது. சிங்கள தேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மாத்திரம் தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்துகின்றனர். தமிழ் மக்கள் வாக்களித்து இவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்துள்ளனர்! என்ன செய்வது? யாழ் குடா மக்கள் நிரந்தரமாக இடம் பெயரவேண்டியதுதான்! மக்கள்தானே எல்லாவற்றையும் நிர்ணயிக்கின்றனர்! வாழ்க ஜனநாயகம்!