இலங்கை அரசாங்கம் புலிகளை தோற்கடித்தமை குறித்து மக்கள் சீன இராணுவத்தின் பிரதி பிரதம அதிகாரி மாசியாவோ சியான் தமது திருப்தியை வெளியிட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது .
இலங்கையின் பிந்திய நிலைவரங்கள் குறித்து தான் அறிந்திருப்பதாக சிங்கப்பூரில் கடந்தவாரம் இடம்பெற்ற 8 ஆவது சங்கிரி பேச்சுவார்த்தையின் போது அவர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு மில்லியன் டொலர் சீனா வழங்கவுள்ளதாகவும் அத்துடன், மேலும் உதவி வழங்க விரும்புவதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், சமூக மேம்பாடு என்பவற்றுக்கு சீனா உதவியளிக்க முன்வந்திருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், அம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை மின் திட்டம், கலையரங்கு என்பவற்றின் அபிவிருத்திக்காக சீனா உதவியளித்திருப்பதையிட்டு அமைச்சர் போகொல்லாகம பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது இவ்வாறிருக்க சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 4 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு சீன அரசாங்கம் இடம் வழங்கியதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மக்கள் விடுதலை இராணுவத்தின் இராணுவ கல்வி நிலையத்தில் 39 இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் இந்த வருடம் அந்த எண்ணிக்கை 45 ஆக அதிகரிக்கப்படும் எனவும் மாசியாவோசியான் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.







