ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் சி.ஐ.ஏ.யின் முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட எட்டாவது நபர் ஜோர்தானிய உளவு அமைப்பின் தலைவரென அமெரிக்கப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச் செய்தியை தெரிவித்துள்ள ஜோர்தானிய உத்தியோகபூர்வ செய்திச் சேவை, அத் தாக்குதலில் பலியானவர் உளவுத் துறை அமைப்பின் தலைவரான அலி பின் ஷெய்ட் என இனங்காணப்பட்டுள்ள அதேவேளை, ஆப்கானிலுள்ள ஜோர்ஜியப் படைகளுடன் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இத் தாக்குதல் குறித்து மேலதிக விபரங்கள் எதையும் இச் செய்திச் சேவை தெரிவிக்காத போதும் இவருடன் சேர்த்து ஏழு அமெரிக்க புலனாய்வு சேவை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இத் தகவல் அமெரிக்க மற்றும் ஜோர்தானிய படைகளுக்கு இடையில் நிலவும் நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.எனினும் கடந்த மூன்று தசாப்தங்களாக இரு நாடுகளுக்குமிடையில் சிறப்பான உறவு நிலவுகின்ற போதும் அண்மைக் காலமாக புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் நெருக்கம் அதிகரித்திருப்பதாக அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.