சர்ச்சைக்குரிய ஊடகவியலாளரும், முன்னை நாள் புளட் இயக்க உறுப்பினருமான சிவராம் எட்டு ஆண்டுகளின் முன்னர் கொழும்பில் வைத்துக் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பான வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஊடகவியலாளர் குசல் பெரேரா நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். தர்மரத்தினம் சிவராம் கடத்திச்செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாக குசல் பெரேரா தெரிவித்தார். கறுப்பு நிற பஜிரோ வாகனத்தில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றதாகவும் அவர்களை அடையாளம் காணமுடியாமல் போனதாகவும் சாட்சியாளர் குசல் பெரேரா கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் தான் மது அருந்தியிருந்தபடியால் அருகிலிருந்த பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்யத் தயங்கியதாகவும் அரச சட்டத்தரணியின் குறுக்கு கேள்விக்கு பதிலளித்தபோது அவர் தெரிவித்தார்.சிவராம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டதாகவும் அவர் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கூறமுடியாது என்றும் குசல் கூறினார்.வழக்கின் மேலதிக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதான சந்தேகநபர் ஸ்ரீஸ்கந்தராஜா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புளட் இயக்கத்தின் தலைமைக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்ட சிவராம் பல படுகொலைகளோடு தொடர்புடையவர் என்ற சந்தேகங்களும் நிலவின.