சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில் ஐ மு கூ அரசு தப்பியது. முலாயம், மாயாவதி, கருணாநிதி ஆகியோரின் அரசியல் முடிவுகள் மன்மோகனைக் காப்பாற்றியது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவால் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்தது.
வால்மார்ட், டெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்க முடியும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 109 வாக்குகளும் கிடைத்தன.
சமாஜவாதி கட்சி மக்களவையில் செய்தது போலவே மாநிலங்களவையிலும் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. அதே நேரத்தில் மக்களவையில் வெளிநடப்பு செய்த பகுஜன் சமாஜ் கட்சி, மாநிலங்களவையில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.