தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கடற்கரை நாடான சிலியை இன்று தாக்கிய பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டில் பேரழிவை ஏற்பட்டுத்தியுள்ளது.
சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் மையங்கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சிலி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 53 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உருவான ஆழிப் பேரலை (சுனாமி) 9 அடி உயரத்திற்குக் கிளம்பி சிலி நாட்டைத் தாக்கியதாக பசுபிக் பெருங்கடலிலுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
ஆனால், ஆழிப்பேரலை 40 மீட்டர் உயரத்திற்கு எழும்பி தாக்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நேர் கிழக்காக சிலியின் கடலோரம் அமைந்துள்ள மாலே எனும் சிறு நகரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதோ அல்லது 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானில் ஏற்பட்டுள்ள அழிவு குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
சிலியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இற்றவரை 300 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின:
கடலுக்கடியில் நில நடுக்கம் ஏற்பட்டதால் உடனடியாக சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நில நடுக்கம் காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் சான்டியாகோ நகரத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. தொலைத்தொடர்பு வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சான்டியாகோவில் சமீபகாலமாக நில நடுக்கத்தை தாங்கும் வகையிலான கட்டடங்களே கட்டப்பட்டு வருகின்றன. இருப்பினும் பழைய கட்டடங்கள் மற்றும் பாலங்கள் போன்றவை இந்நில நடுக்கத்தால் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாயின.
தெருக்களில் இடிந்து விழுந்த கட்டடங்கள், சேதமடைந்த கார்கள் ஆகியவற்றுக்கிடையே மக்கள் கூட்டம், கூட்டமாக பாதுகாப்பான இடம் தேடி அலைந்தனர். மின் இணைப்புகள் அறுந்து விழுந்ததில் பல்வேறு இடங்களில் தீப்பற்றியது. நிலநடுக்கத்துக்கு இதுவரை 300 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
கடலுக்கடியில் அடுத்தடுத்து 11 முறை தொடர்ச்சியாக நில நடுக்கம் ஏற்பட்டது. இவற்றில் பல தடவை 6 அலகுக்கும் மேலான வீச்சு கொண்ட நில நடுக்கங்கள் ஏற்பட்டன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக உருவான உயரமான கடல் அலைகள், அருகிலுள்ள மக்கள் வசிக்கும் தீவுப் பகுதிக்குள் நுழைந்தது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உண்மை நிலவரம் குறித்து மக்களுக்கு தொடர்ந்து தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றது. அரசு பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என சிலி நாட்டின் அதிபர் மிஷேல் பேச்லட் கேட்டுக் கொண்டார்.
இந்த கடுமையான நில நடுக்கத்தினை அடுத்து தென் அமெரிக்க நாடுகள், ஹவாய் தீவு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான், பிலிப்பின்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளும் சுனாமி அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ராபின்சன் குரூசோ தீவில் சுனாமி
சான்டியாகோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ராபின்சன் குரூசோ தீவில் சுனாமி பேரலைகள் தாக்கின. சிலியிலிருந்து 700 கிலோமீட்டர் தூரத்தில் இந்த தீவு உள்ளது. சுனாமி பேரலைகள் தாக்கியதில் எந்த அளவுக்கு தீவில் சேதம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தென் அமெரிக்காவிலே அர்ஜென்ட்டீனா நாட்டுக்கு மேற்காக உள்ள ஒரு நாடு சிலி. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.
பசிபிக் எரிமலை வளையத்தில் உள்ள சிலி பல நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. இங்கு கடந்த காலங்களில் ஏற்ப்பட்ட நிலநடுக்கங்களை எடுத்துப்பார்த்தால் ஒவ்வொருமுறையும் உயிர்ப்பலியை எடுத்துள்ளது.
இதில் 1868 ஏற்ப்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், அரிகா (then Peru)வில் 25,000 மக்கள் பலியானார்கள்.
பின் 1906 ஏற்ப்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், நடு வால்பரெய்சோவில் 3,882 மக்கள் பலியானார்கள்.
அதன்பின் 1939 ஏற்ப்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், சில்லனில் 28,000 மக்கள் பலியானார்கள்.
தற்போது 8.8 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களில் பசிபிக் எரிமலை வளையத்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கங்களின் தரவுகள் கிழே தரப்பட்டுள்ளன, அவை:
1730 – 8.7 ரிக்டர் அளவு – நடு வால்பரெய்சோ
1835 – 8.2 ரிக்டர் அளவு – தென் நடு கான்செப்சியான், 500 மக்கள் பலி
1868 – 9.0 ரிக்டர் அளவு – அரிகா (then Peru), 25,000 மக்கள் பலி
1877 – 8.3 ரிக்டர் அளவு – வட டாரபக கடற்பகுதி, 34 மக்கள் பலி
1906 – 8.2 ரிக்டர் அளவு – நடு வால்பரெய்சோ, 3,882 மக்கள் பலி
1922 – 8.5 ரிக்டர் அளவு – சிலி அர்ஜெண்டினா எல்லை
1928 – 7.6 ரிக்டர் அளவு – டல்கா, 225 மக்கள் பலி
1939 – 7.8 ரிக்டர் அளவு – சில்லன், 28,000 மக்கள் பலி
1943 – 8.2 ரிக்டர் அளவு – near Illapel-Salamanca, 25 மக்கள் பலி
1960 – 7.9 ரிக்டர் அளவு – Arauco Peninsula
1960 – 9.5 ரிக்டர் அளவு – Valdivia, 1,655 மக்கள் பலி
1965 – 7.0 ரிக்டர் அளவு – Taltal, 1 மக்கள் பலி
1965 – 7.4 ரிக்டர் அளவு – La Ligua, 400 மக்கள் பலி
1971 – 7.5 ரிக்டர் அளவு – வால்பரெய்சோ பகுதி, 90 மக்கள் பலி
1985 – 7.8 ரிக்டர் அளவு – வால்பரெய்சோ கடற்பகுதி, 177 மக்கள் பலி
1998 – 7.1 ரிக்டர் அளவு – வடக்கு சிலியை ஒட்டிய கடற்பகுதி
2002 – 6.6 ரிக்டர் அளவு – சிலி அர்ஜெண்டினா எல்லை
2003 – 6.8 ரிக்டர் அளவு – நடு சிலியின் கடற்பகுதி
2004 – 6.6 ரிக்டர் அளவு – பயோ பயோக்கு அருகில், நடு சிலி
2005 – 7.8 ரிக்டர் அளவு – டாரபக, வடக்கு சிலி, 11 மக்கள் பலி
2007 – 7.7 ரிக்டர் அளவு – at Antofagasta, வடக்கு சிலி, 2 மக்கள் பலி
2007 – 6.7 ரிக்டர் அளவு – at Antofagasta
2008 – 6.3 ரிக்டர் அளவு – டாரபக
2009 – 6.5 ரிக்டர் அளவு – டாரபக கடற்பகுதி
தற்போது – 8.8 ரிக்டர் அளவு
மேலும் அறிய:
http://news.bbc.co.uk/2/hi/americas/8541347.stm
http://en.wikipedia.org/wiki/Chile
https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ci.html
இயற்கை சீற்றம் விரட்டுகிறது : உலகம் அழிவு நிலைக்கு வருவதாக வீதிகளில் கதறல்
சமீப காலமாக இயற்கை சீற்றம் மக்களை துரத்தி, துரத்தி கொன்று வருகிறது. நில நடுக்கம், மழை , சுனாமி தாக்குதல் என இந்த வகைகளுக்கு மக்கள் மீது என்ன கோபமோ ? உலகம் அழியும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தேன் என சிலியில் நில நடுக்கத்தில் உயிர் பிழைத்த பெண் ஒருவர் கூறியுள்ளார். சிலியில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தை அடுத்து இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) ஜப்பான், ஹெய்த்தி, மற்றும் அமெரிக்காவில் உள்ள குறி்ப்பிட்ட தீவுகளில் பெரும் சுனாமி தாக்குதல் நடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வட கிழக்கு தீவு பகுதிகள், மீன்பிடி பகுதிகள் ,முக்கிய சுற்றுலா நகரங்கள் ஆகியன இதில் பாதிப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது. இந்த கடல் பகுதியில் 3 மீட்டர் உயரத்திற்கு பெரும் அலை சீற்றம் இருக்கும். எனவே தாழ்வான பகுதி மற்றும் கடலோர பகுதிகள் மக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் மாற்று இடம் நோக்கி புறப்பட்டுள்ளனர். இங்கு கடந்த 1960 ல் நடந்த சுனாமி தாக்குதலில் 140 பேர் பலியாயினர். இதற்கு பின்னர் பெரும் பாதிப்பு இந்நாளில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. ஜப்பானில் கடந் 15 ஆண்டு கால வரலாற்றில் இது போன்ற எச்சரிக்கை விடப்பட்டதில்லை என ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இயற்கை சீற்றம் எங்களை ஒரு பதம் பார்த்து விட்டது: நேற்று ( சனிக்கிழமை) சிலியில் நடந்த நில நடுக்கத்தில் 300 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளளன. இங்கு நில நடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் ஆங்காங்க அனைவரும் வீதிகளில் அலறல் சப்தத்துடன் ஓடியுள்ளனர். ரோட்டில் சென்ற கார்கள் ஆங்காங்கே கட்டட இடிபாடுகளில் சிக்கி லைட்டுகள் மட்டும் எரிந்த நிலையில் நின்று கொண்டிருக்கின்றன. இங்கு பாதிப்பில் இருந்து வீதிக்கு வந்த சிலி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்; நான் வீட்டில் இருந்தபோது மேலே தொங்கி கொண்டிருந்த விளக்கு, விசிறி பிய்ந்து விழுந்தன. சுவர்கள் கீறி வெடித்தன. இதனையடுத்து நான் வெளியே ஓடினேன். மொத்தத்தில் உலகம் அழிந்து முடிவுக்கு வந்து விட்டது என்பதை மட்டும் உணர முடிந்தது என்றார் பதட்டத்துடன். இந்நாட்டு அதிபர் மிக்சல் பக்லெட் கூறுகையில்; இயற்கை சீற்றம் எங்களை ஒரு பதம் பார்த்து விட்டது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து வீதியில் நிற்கின்றனர். தேவையான மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஹெய்த்தியில் சுனாமி எச்சரிக்கை: கடந்த மாதம் ஹெய்த்தியில் பெரும் பூகம்பம் நிலவியது. இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த சோகம் நீங்கும் முன்பாக இங்கு மழை கால துவங்கி விட்டது. கடந்த ஒரு வாரத்தில் பலத்த மழை பெய்து பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கிடக்கிறது.இங்கும் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் – ஸ்பெயினில் வெள்ளம் : ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயினின் வட� மற்கு பகுதியில் கடும் புயல் , மழை கடந்த 4 நாட்களாக பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இங்கு இயற்கையின் அமைதி திரும்பவில்லை. யாரும் சாலைகளில் நடக்கவோ, கார் ஓட்டவோ வேண்டாம் என உள்துறை அமைச்சகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்பு மீட்பு பணியில் 20 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கு கால்ஷீயா, பங்கியூ, காஸ்டிலயா லியான், கண்டாபிரியா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு இருக்கும் என அஞ்சப்படுகிறது. இது போன்று போர்ச்சுக்கலிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இங்கு 12 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது.
பாகிஸ்தானில் நில நடுக்கம்: இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலையில் பாகிஸ்தானில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. வடக்கு பகுதிகளில் இந்த தாக்கம் இருந்தது. 6.2 ரிக்டர் அளவாக நடுக்கம் பதிவாகியிருக்கிறது. முக்கிய நகரான இஸ்லாமாபாத்தும் சிறிய அளவில் பாதிக்ப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் இந்த தாக்கம் இருந்துள்ளது. இரு நாடுகளிலும் ஏற்பட்ட சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.
காஷ்மீரில் நடுக்கம்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரி்கடர் 5. 7 பதிவாகியிருக்கிறது. பாதிப்பு குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
ஓபாமா எச்ரிக்கை: அமெரிக்காவில் முக்கிய தீவுப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் அலட்சியப்படுத்தாமல் மாற்று இடங்களுக்கு செல்லுமாறு அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணுவத்தினர் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
– Dinamalar