இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வு வழங்காது, அரசியல் சாசனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனூடாக நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு சிறுபான்மை மக்களின் அரசியல், கலாசாரம், பண்பாட்டு மரபுரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதி செய்யப்படும் என எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் வெற்றி பெற்றால் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படும்படுமென அரசாங்கம் மேற்கொள்ளும் பிரசாரங்களை நம்பி பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஜனநாயக ஆட்சி எவ்வாறு அமையவேண்டும் என்பதனை தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்வரும் நாட்களில் கற்பிப்போம் எனவும் அவர் கூறினார்.
சிறுபான்மை இன சமூகத்தைச் சார்ந்த பிரதி நிதிகளை நேற்று திங்கட்கிழமை ஜெனரல் சரத்பொன்சேகா தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜெனரல் சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி சகல இன மக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்கி கேள்விக்குறியாகிப்போயுள்ள ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதே எனது அரசியல் பிரவேசத்தின் பிரதான நோக்கம். ஆனால் இன்று அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கோ அல்லது நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கோ தீர்வுகளை ஏற்படுத்தாமல் தேர்தல் வெற்றிகளை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
எனது வெற்றியின் பின் ஒரு போதும் இராணுவ ஆட்சி ஏற்படாது. ஏனென்றால் நான் தற்போது இராணுவ அதிகாரியல்ல. மாறாக ஜனநாயக வாதியே. என்னை இராணுவ ஆட்சியாளர் என்று கூறும் அரசாங்கம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 5 இராணுவ அதிகாரிகளை களமிறக்க உள்ளது. உண்மையில் தற்போதைய அரசாங்கம்தான் இராணுவ ஆட்சியொன்றை முன்னெடுத்து வருகின்றது. எவ்வாறாயினும் இலங்கையில் பல்லினம் வாழும் ஒரு சூழல் உள்ளமையால் அதனடிப்படையில் அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறினார்.