தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் உள்ள சிறப்புமுகாம் என்னும் பெயரில் அமைந்துள்ள சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 15 நாட்களுக்கு மேலாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க இந்திய மத்திய மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.
புலிச் சந்தேக நபர்களை அடைத்து வைக்க என ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு முகாம் புலிகள் அழிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வருவது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.
இராணுவத்தை அனுப்பி தமிழீழம் பெற்றுக்கொடுப்பேன் என கூறிய ஜெயா அம்மையாரின் ஆட்சியிலே இந்த கொடுமை அரங்கேறி வருகிறது. தமிழர்களுக்காக மீண்டும் “டெசோ” மாநாடு நடத்தும் கலைஞர் கருனாநிதி அவர்கள் நினைத்தால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசு மூலம் இந்த முகாமை மூட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவரோ இது குறித்து வாய் திறக்கவே மறுக்கிறார்.
சிறப்புமுகாம் சித்திரவதைகளை நானும் அனுபவித்திருக்கிறேன். எட்டு வருடங்களுக்கு மேலாக சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் மாறி மாறி அடைத்து வைக்கப்பட்டேன். துறையூர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட போது நான் எழுதிய கவிதையை தற்போது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் சார்பாக கீழே தருகிறேன்.
சிறப்பு முகாமின்
சித்திரவதைகளினால்
ஒவ்வொருநாளும்
ஆண்டாய் கழியும்
அவ் ஆண்டின் நாட்களோ
நீண்டு தெரியும்!
மத்திய அரசின் தவறா
மாநில அரசின் தவறா
என்பதை நானறியேன்
சிறப்பு முகாமில் வாழும்
யாமறிந்ததெல்லாம்
முகாம் சுவர் வலிது!
சிறப்பு முகாம் ஒரு மூடாத கல்லறை
அப்படியானால் அகதிகள்?
அவர்கள் உயிரோடு இருக்கும் பிணங்கள்.
மேற் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிதை நான் துறையூர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது (12.01.1995) எழுதிய கவிதையாகும்.
எதிர்வரும் 03.07.2012 யன்று லண்டனில் உள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக சிறப்பு முகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதாக அறிகிறேன். மக்களின் எழுச்சி மட்டுமே இந்த சிறப்புமுகாம்கள் மூடவும் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெறவும் வழி சமைக்கும் என நம்புகிறேன்.
Why are they subjected to torture?
கலைஞர் அய்யாவுக்கு ஒரு இலங்கைத் தமிழனின் பகிரங்க மடல்
மதிப்புக்குரிய கலைஞர் அய்யாவுக்கு!
முதலில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்த தேவையில்லை என எண்ணுகிறேன். ஏனெனில் தங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். வேலூர் துறையூர் மற்றும் மேலூர் சிறப்புமுகாம்களில் எட்டு வருடங்களுக்கு மேலாக நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது தங்களுக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அக் கடிதங்களுக்கு தாங்கள் ஒருபோதும் பதில் தரவில்லையாயினும் பின்பு ஆட்சிக்கு வந்தபின் அகதிமுகாம்கள் குறித்து சில பாராட்டுக்குரிய நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றீர்கள்.
கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அது குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே இம் மடலை தங்களுக்கு வரைகிறேன்.
சிறப்பு முகாம் என்பது முதன் முதலில் தங்கள் ஆட்சியின்போதே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இதனை தற்காலிகமாகவே ஆரம்பித்ததாகவும் குறுகிய காலத்தில் மூட இருந்ததாகவும் ஆனால் அதற்குள் ஆட்சி பறிபோய்விட்டது என்றும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அறிவித்தீர்கள். அதன் பின்பு இருதடவை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டீர்கள். ஆனால் நீங்கள் ஆரம்பித்த சிறப்பு முகாமை மூடுவதற்கு நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக் குரிய விடயமாக இருக்கிறது.
இந்தியாவில் தீபெத் அகதிகள் இருக்கிறார்கள். வங்க தேச அகதிகள் இருக்கிறார்கள். ஏன் பாலஸ்தீன அகதிகள் கூட இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சட்டப்படி நடத்தப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் 5 கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கைத் தமிழ் அகதிகள் மட்டும் சட்ட விரோதமாக சிறப்பு முகாம் என்னும் பெயரில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப் படுகிறார்கள். இது ஏன் என்று எனக்கு புரியவில்லை.
இலங்கைத் தமிழ் அகதிகள் லண்டன் கனடா அவுஸ்ரேலியா என உலகெங்கும் பல நாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் சட்டப்படி மரியாதையாகவும் கௌரவமாகவும் நடத்தப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றார்கள். ஒருவேளை இந்தியாவை தங்கள் தாய்நாடாகவும் தமிழ்நாட்டு தமிழர்களை தங்கள் உடன்பிறப்புகளாகவும் இலங்கை தமிழர்கள் நினைத்ததுதான் இதற்கெல்லாம் காரணம் போலும் என நினைக்கத்தூண்டுகிறது.
தான் ஆட்சிக்கு வந்தால் இராணுவத்தை அனுப்பி தமிழீழம் பெற்றுக் கொடுப்பேன் என ஜெயா அம்மையார் கூறினார். இப்போது அவர் ஆட்சியில் இருக்கிறார். அவர் கூறியபடி தமிழீழம் பெற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை தனது ஆட்சியின் கீழ் உள்ள சிறப்புமுகாம்களை மூடி அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யலாம். ஆனால் அவர் அதைக்கூட செய்வதற்கு தயார் இல்லை என்பதை அறியும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.
முன்பு அகதி சிறுவன் ஒருவனை தத்து எடுத்து வளர்த்தீர்கள். இப்போது அந்த சிறுவன் எங்கே என்று கேட்டு உங்களுக்கு தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால் மீண்டும் எங்களுக்காக மிகவும் சிரமம் எடுத்து “டெசோ” மாநாடு நடத்த இருப்பதாக அறிகிறேன். இந்த வயதான நேரத்தில் நீங்கள் எமக்காக மேற்கொள்ளும் சிரமங்கள் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன. நீங்கள் எமக்காக எந்தளவு அர்ப்பணிப்பு செய்தாலும் அதனை நம்ப மனம் மறுக்கிறது. ஏனெனில் உங்களது நாட்டில் உங்களது அதிகாரத்தின் கீழ் பல வருடங்களாக அப்பாவி தமிழ் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். ஆனால் நீங்கள் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது உங்கள் மீது நம்பிக்கை கொள்ள மனம் மறுக்கிறது.
நீங்கள் இப்போது நினைத்தால் மத்திய அரசில் இருக்கும் உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் அப்பாவி தமிழ் அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்த பழியில் இருந்து நீங்கள் விடுதலை பெற முடியும். தாங்கள் இதனை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர்களுக்காக தன் உயிரைக் கொடுத்த தியாகி முத்துக்குமார் பிறந்த மண்ணில் இனியும் அப்பாவி தமிழ் அகதிகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் சிறப்பு முகாம்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் மனம் வருந்தும்படி ஏதும் எழுதியிருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்.
இப்படிக்கு
அன்புடன்
பாலன்
(லண்டன்- 01.07.2012)
, ஒருவாட்டி டிக்கட் எடுத்துப்போயி அவரிடம்நேரடியாகவே கடிதத்தை கொடுத்துப்பாரும். கலஞர் தனக்கு இதுல என்ன லாபம் இருக்கு எண்டுதான் பார்ப்பார்.
Great Tholar.Balan. I am also loosing my patience. It is indeed time for UNHCR to step. I am doing my best. Dr. Radika Cumarasamy has also landed a great UN job dealing with child soldiers..
Radhika’s only place for employment is the UN. Shameless humans living expensive lives at the expense of the poor.
எம் மக்களின் விடுதலைக்காக நாம் ஒரு கையெழுத்து மனுவை தமிநாடு அரசுக்கு கையளித்தால் என்ன,இதற்க்கான முயற்ச்சியை “இனியொரு” குழுமம் முன்னெடுக்க வேண்டுமென்று விரும்பி கேட்கின்றேன்
“ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்”.
Philip that may be true for many. Sri Lankan Tamils have so many organisations spread all over the world to compete with the resources of the Government of Sri Lanka – Shri Lanka. They should concentrate on what Honourable Tissa Attanayaka the General Secretary of the United National Party said: day to day problems of the Tamil people. Many are wasting resources to embarrass the Government of Sri Lanka – Shri Lanka and blame the whole Sinhala race.