சார்க்’ நாடுகள் வரிசையில் தமிழீழம் விரைவில் சேருமாம்! :சிவாஜி எம்.பி. உறுதி!!

சார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் இலங்கை அந்நாடுகள் வரிசையில் இருந்து வெகுவிரைவில் விரட்டியடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றில் கூறினார். சார்க் மாநாட்டுக்குச் செல்வதற்கான குறை நிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
இந்த அரசு தமிழ் மக்களைக் கொலை செய்துகொண்டு தமிழர்களின் பாதுகாவலன்போல் தன்னை சர்வதேசத்திற்குக் காட்டிக்கொள்கிறது.
பயங்கரவாத செயற்பாட்டை முன்னெடுக்கும் அரசு உள்ள நாடு இது என்பதை சர்வதேச நாடுகள் விளங்கிவைத்துக் கொண்டுள்ளன. இலங்கையை ஒரு பயங்கரவாத நாடாக சர்வதேச நாடுகள் மிக விரைவில் அறிவிக்கும் அதேநேரம் எமது தமிழீழத்தையும் அந்நாடுகள் ஏற்றுக்கொள்ளும்.
தமிழர்களின் உரிமைகளை மீறுகின்ற இந்த இலங்கை சார்க் நாடுகளின் வரிசையில் இருந்து நீக்கப்படும் காலம் மிக விரைவில் வரும்.
இந்த நாட்டைத் தற்காலிகமாகவாவது சார்க் நாடுகள் வரிசையில் இருந்து நீக்குமாறு நாம் சார்க் நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். எமது தமிழீழம் சார்க் நாடுகளின் வரிசையில் சேர்த்துக்கொள்ளப்படும் காலம் நிச்சயம் வரும்.
சார்க் மாநாடு முடியும்வரையிலான யுத்த நிறுத்தம் ஒன்றைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பைப் புலிகளின் பலவீனமாகப் பார்க்கக் கூடாது.
புலிகளின் இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி சமாதான முயற்சிகளில் அரசு ஈடுபட வேண்டும். அவ்வாறு இல்லாது தொடர்ந்து யுத்தத்தை மேற்கொண்டால் அரசு கடும் சிக்கலை எதிர்நோக்கவேண்டி வரும்.
இன்று எமது போராட்டம் நீதியானது என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டன.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் எமது தமிழீழத்தை அங்கீகரிக்கும் காலம் மிக விரைவில் வரும். இந்தியாவின் ஆசீர்வாதம் எமக்கு நிச்சயம் கிடைக்கும். என்றார்

One thought on “சார்க்’ நாடுகள் வரிசையில் தமிழீழம் விரைவில் சேருமாம்! :சிவாஜி எம்.பி. உறுதி!!”

  1. திருவளாளர் எம்.பி. சிவாஜிலிங்கம் ஒர் அப்புக்காத்து என்று கேள்விப்பட்டேன்.அது உண்மையோ இல்லையோ;ஆனால் அவர் படித்து பட்டம் பெற்ற ஓர் அறிவாளி என்பது மாத்திரம் தெரியும். தற்போது எனக்கு ஒரு சந்தேகம்.வன்னி இவரை மூளைச்சலவை செய்துள்ளது அல்லது வன்னியின் வெருட்டல் இப்படித்தான் பேசவேண்டும் என்று சொல்லியிருக்கு.
    சோத்தில் உப்பு போட்டு சாப்பிடும் நான் உங்களைப் போன்று அதிகம் படிக்கா விட்டாலும் ஒரு சிறு வேண்டுகோள். தமிழனுக்கு விடிவுகாலம் வருகுதோ இல்லையோ தமிழன்ர மானம் காற்றில் பறக்காமல் இருப்பதற்காக, நீங்கள் சாப்பிடும் சோத்துக்கு கொஞ்சமாயாவது உப்புச் சேர்த்துச் சாப்பிடுங்கோ.
    இன்னுமொரு விசயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புலம்பெயர் நாட்டில் பொங்கு தமிழுக்கு மேதகுவின் போட்டோவை தூக்கிப்பிடித்த டாக்குத்தர்(மருத்துவர்) எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்து இப்படித்தான் புலம்பினார்.”உந்தச் சிவாஜிலிங்கம் நல்லாப்படிச்ச ஆள்த்தானே,பேந்தேன் இப்படி.அதுகும் போயும் போயும் பாராளுமன்றத்துக்குள்ள வெள்ளக்காறன் வேற பார்வையாளராக இருந்தநேரம் பார்த்து இப்படி உளறினால், வெளிநாட்டில் வாழும், படித்து பட்டம் பெற்று கெளரவமாக வாழ்ந்துகொண்டிருக்கும் எம் போன்ற தழிழரை வெள்ளக்காரன் என்ன நினைப்பான்.எங்கள் மானம் மரியாதை என்னவாகிறது.இந்த ஆள் சோத்துக்கு உப்பு போடுதே” என்று என்னோடு கதைத்து ஆதங்கப்பட்டார்.
    இதில் ஒன்றை மாத்திரம் நன்றாய் கவனிக்கவேண்டும்.
    நான் உப்பு சேர்க்கச் சொன்னது ஒரு காரணம். டாக்குத்தர் உப்பு சேர்க்கச் சொன்னது வேறொரு காரணம். இரண்டும் ஒன்றெண்டு வாசகர்கள் குழம்ப வேண்டாம்.

Comments are closed.