14.09.2008.
இன்றைய மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் செயற்பாடுகள் யாவும் எத்திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கின்றது. இதற்கு சற்று ஆழமாகச் சிந்தித்துப் பதில் கூறுவதாயின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரப் பாதையில் நாட்டை இழுத்துச் செல்லும் போக்கு முனைப்படைந்து வருவதாகவே கூற முடியும். இதன் அடுத்த கட்டம் அப்பட்டமான பாசிச சர்வாதிகாரமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இன்று பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த சூழலில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களும் ஜனநாயக மறுப்புகளும் மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமைகளும் மேற்படி அச்சம் தெரிவிக்கப்படுவதற்குரிய காரணங்களாகும்.
இன்று தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் சம்பள உயர்வு கேட்பதும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கக் கோருவதும் பயங்கரவாத ஒழிப்புப் போரைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் என்றே கொள்ளப்படுகின்றது. அதனால் பசித்திருப்போரும் நோயுற்றிருப்போரும் வேலையற்றிருப்போரும் ஏனைய வாழ்க்கைத் தேவைகள் வேண்டி நிற்போரும் அரசாங்கத்திடம் எத்தகைய கோரிக்கையையும் முன்வைக்கக் கூடாது என்றே மகிந்த சிந்தனை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இந்த எதிர்பார்ப்பை மீறிச் செல்ல முற்படுவோருக்கு குண்டாந் தடிகளும் கண்ணீர்ப் புகையும் தண்ணீர் பாச்சியடித்தலுமே பதில்களாகக் கிடைக்கின்றன.
இதனால் அரசாங்க ஊழியர்களும் தனியார் துறையினரும் தத்தமக்குரிய கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக தொழிற்சங்க வழிமுறைகள் மூலம் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தத்தமது அமைச்சுக்களின் கீழான திணைக்களங்கள் ஏனைய நிறுவனங்கள் மூலம் தொழிலாளர்கள், ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் எதனையும் பெறமுடியாத சூழலிலேயே பலர் நீதிமன்றங்களை நாடி நியாயம் பெற முயன்று வருகின்றனர். தனிநபர்களாகவும் அமைப்புகள் வாயிலாகவும் நீதிமன்றங்களுக்குச் சென்று உரிமைகளைப் பெறும் எத்தனிப்புக்கள் இடம்பெறுகின்றன. இதனால் அண்மைக் காலங்களில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் ஏனைய கோரிக்கை மனுக்களும் உயர்நீதிமன்றத்திலும் ஏனைய சில நீதிமன்றங்களிலும் விசாரணைக்கு வந்துள்ளன. இவ்வாறு என்றுமில்லாதவாறு நீதிமன்றங்களின் முன்னால் வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் யாவும் அந்தந்த அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஏனைய அரசாங்க நிறுவனங்களால் அல்லது அமைச்சரவையால் தீர்க்கப்பட வேண்டியவைகளே.
இவற்றுக்கும் அப்பால் நிறைவேற்றுத் துறையினரால் தீர்வுகளுக்குக் கொண்டு வர வேண்டியவைகளுமாகும். இருப்பினும் அவ் இடங்களில் தமக்குரிய நியாயங்களும் நீதிகளும் கிடைக்காத சூழலிலேயே மக்கள் நீதிமன்றங்களை நாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கும் முழுமையான நியாயம் கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் நீதித்துறையும் நீதிமன்றங்களும் இயற்றப்படும் சட்டங்களின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளையும் நியாயங்களையும் கூறுபவனவே அன்றி அவற்றுக்கு அப்பால் முடிவுகளைச் செயல்படுத்தவியலாது.
இருப்பினும் அண்மைக் காலங்களில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளும் வழிகாட்டல் அறிவுறுத்தல்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் ஒன்றே தற்போதைய நிதியமைச்சின் செயலாளரின் கடந்த கால நடைமுறைக்கு எதிராக ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவரான வாசுதேவ நாணயக்காரா உயர்நீதிமன்றத்தில் தொடுத்த ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்காகும். அதில் நிதியமைச்சின் செயலாளரை உயர் நீதிமன்றம் ஐந்து இலட்சம் ரூபா குற்றப் பணமாகச் செலுத்தும் படியும் மனுதாரருக்கு வழக்குச் செலவு வழங்கும்படியும் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரா தனது பதவியை ராஜிநாமாச் செய்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொள்ளாதபடியால் தொடர்ந்தும் பதவியில் இருந்து வருகிறார். இதனை ஆட்சேபித்து வாசுதேவ நாணயக்காரா மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனுக் கொடுத்துள்ள காரணத்தால் உயர் நீதிமன்றம் நிதியமைச்சின் செயலாளர் நிலை பற்றிய விளக்கத்தைக் கோரியுள்ளது.
இவ்வாறு ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு உரிய தீர்வை கல்வியமைச்சும் ஜனாதிபதியும் காணத்தவறியதால் உயர்தரப் பரீட்சை விடைத் தாள்கள் திருத்தும் பணியானது புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்விடயம் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சில சமரச வழிகாட்டல்களை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு முன்வைக்க வேண்டி ஏற்பட்டது. இருந்தும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள சம்பள முரண்பாட்டை நீக்கி நியாயமான சம்பள உயர்வைப் பெறுவதில் முனைப்பாகவே இருந்து வருகின்றனர். அதேவேளை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளாதவிடத்து நீதிமன்ற அவமதிப்பின் கீழ் தண்டனை பெறக்கூடிய நிலை உள்ளது. இதனால் தொழிற்சங்கங்கள் பணிந்து போக வேண்டியனவாகவே உள்ளன.
இது போன்றதொரு நிலை கடந்த வாரத்தில் கடவத்தையைச் சேர்ந்த ஒரு விகாரையின் தலைமை பௌத்த பிக்குவிற்கு ஏற்பட்டது. ஒலி மாசடைதல் பற்றிய உயர் நீதிமன்ற வழிகாட்டலை மீறியதால் நீதிமன்றம் வராத அந்தத் தலைமைப் பிக்கு உயர் நீதிமன்றத்தால் விளக்க மறியலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் பிணை மனுக்கோரி உயர்நீதிமன்றம் வந்த வேறு பிக்குமார் நீதிமன்ற இருக்கைகளை விட்டு எழும்பி மரியாதை செலுத்தாத காரணத்தால் அவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்லுமாறு பணிக்கப்பட்டனர். இதனை ஒரு கௌரவக் குறைவாகக் கொண்டு ஜாதிக ஹெல உறுமய தனது பௌத்த ஆதிக்க உறுமலைத் தெரிவித்துக் கொண்டது. முன்னைய மன்னர்களுக்கும் இன்றைய ஜனாதிபதிக்கும் எழும்பாத நாங்கள் நீதிமன்றத்தில் எப்படி எழும்பி மரியாதை செய்வது எனக் கேட்டு நின்றனர். அதேவேளை அஸ்கிரிய மகா நாயக்க தேரர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், சட்டத்தின் முன் சமம் என்றும் பௌத்த குருமாரும் அதற்கு கட்டுப்பட்டவர்களே என்றும் கூறினார்.
மேற்படி சம்பவமானது பௌத்த மத அடிப்படைவாத ஆதிக்கம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றது என்பதையே காண முடிகின்றது. உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட அத் தலைமைப் பிக்கு உடனடியாகவே ஜனாதிபதியைச் சந்தித்தார். இந்த விவகாரம் பற்றி வேதனையுற்ற ஜனாதிபதி நீதிமன்றங்களில் மத குருமார்களுக்கு (அதன் அர்த்தம் பௌத்த குருமாருக்கு) தனி அறை ஒதுக்கி தொலைக்காட்சி வழியாக விசாரணைகளை அவதானிக்க வழி செய்யுமாறும் நீதியமைச்சை அறிவுறுத்தினார். அதேவேளை ஜாதிக ஹெல உறுமயப் பிக்குமாரும், தேசிய பிக்கு முன்னணியினரும் உயர் நீதிமன்ற விவகாரம் குறித்து கொதித்துக் கொண்டனர். இவற்றை நோக்கும் போது பௌத்த மத ஆதிக்கத்தின் அளவையும் தன்மையையும் அவதானிக்க முடிகின்றது.
இன்றைய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கென சிறப்பிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது அடிப்படையில் ஏனைய மதங்களை அதற்கு கீழ்ப்பட்ட நிலையில் வைப்பதாகவே அமைந்து கொள்கிறது. அதன் மூலம் பௌத்த மத ஆதிக்கம் மேன்மேலும் ஒருவகை வெறித்தன நிலைக்கு இட்டுச் செல்லும் போக்கினை ஊகித்துக் கொள்ளலாம். அதற்குரிய தீவிர பௌத்த சிங்கள அரசியல் தளத்தை ஜாதிக ஹெல உறுமய வழங்கி வருகின்றது. இந்தியாவில் இந்துத்துவ அடிப்படை வாதம் பாசிசமாக உருவெடுத்து நிற்பதைக் காண முடிகின்றது. அதற்கு உதாரணமாக அமைந்த பல சம்பவங்களில் பாபர் மசூதி இடிப்பும் குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான முஸ்லிம் விரோத வன்முறையும் தேவை ஏற்பட்டால் மீண்டும் அத்தகைய கோத்திரா புகையிரத எரிப்புடனான வன்முறையை முன்னெடுப்பேன் எனச் சூளுரைக்கும் அளவுக்கு நரேந்திர மோடிக்கு பலமளித்திருப்பது இந்துத்துவ பாசிசப் போக்காகும்.
எனவே இலங்கையிலும் இதே வகையான பௌத்த மேலாதிக்கப் போக்கானது அப்பட்டமான பாசிசமாக வளராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் இத்தகைய பௌத்த மேலாதிக்கத்தை உள்வாங்கிய நிலையிலேயே பிரதான முதலாளித்துவப் பாராளுமன்றக் கட்சிகள் இருந்து வருகின்றன. எந்தவொரு கட்சியும் மதசார்பற்ற அரசியல் நிலைப்பாட்டை எடுக்கத் தயாராகவும் இல்லை. துணிவும் கிடையாது. இது நிலவுடைமைக் கால மத ஆதிக்க கட்டமைப்புக்குள் மக்களை வைத்திருக்க உதவுவதேயாகும்.
இந்த நிலை தென்னாசியச் சூழலில் மேலோங்கியே இருந்து வருகிறது. முக்கியமாக இந்துத்துவ, இஸ்லாமிய, பௌத்த மத ஆதிக்கம் என்பன இந்நாடுகளின் அரசியலில் ஆதிக்க நிலையாக இருந்து வருகின்றன. அரசியலில் இருந்து மதத்தைப் பிரித்து அதற்குரிய தளத்தில் இயங்க விடுவதே முறையானதாகும். ஆனால் அவ்வாறு செய்வதை முதலாளித்துவ ஆளும்வர்க்க சக்திகள் விரும்புவதில்லை. ஏனெனில் இவ் ஆளும் வர்க்க சக்திகள் இன்றும் வாழ்முறையால் முதலாளித்துவ நடைமுறைகளை உள்வாங்கிய அதேவேளை கருத்தியல் சிந்தனை செயற்பாட்டை நிலவுடைமை வழிவந்த பாரம்பரியங்களுடனேயே முன்னெடுத்து வருகின்றன.
இத்தகைய போக்கில் ஒரு பாரிய மாற்றத்தை நேபாளத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்நாடு முடியாட்சியுடைய உலகில் ஒரேயொரு இந்து இராச்சியம் என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் அங்கு இடம்பெற்ற ஆயுதப் போராட்டமும் வெகுஜனப் போராட்டங்களும் முடியாட்சியைத் தூக்கி வீசி ஜனநாயக மக்கள் குடியரசை நிறுவியுள்ளது. அதேவேளை, மதச் சார்பற்ற நாடாகவும் பிரகடனம் செய்துள்ளது. அதுமட்டுமன்றி அடுத்து வரையப்படவுள்ள அரசியல் சாசனத்தில் மத சார்பின்மையையும் சமஷ்டி அமைப்பையும் மக்களாட்சியையும் வலியுறுத்துவதாகவே உள்ளன. இவை ஏனைய தென்னாசிய நாடுகளுக்கு மிகவும் பயன் உள்ள படிப்பினையாகும்.
ஆனால் இத்தகைய பயன் உள்ள அனுபவங்களை நமது நாட்டின் பௌத்த சிங்கள இன, மத, ஆதிக்கத்தை முன் நிறுத்தி ஆதிக்க அரசியல் நடத்தி வரும் பேரினவாத உயர் வர்க்க மேட்டுக்குடி அரசியல் சக்திகள் ஒருபோதும் உள்வாங்க முன்வரமாட்டார்கள் என்பதே காணக்கூடியதாகும்.