இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் ஒய்வு பெற்ற இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
இவருடன் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க, மேலக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஒய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரம் எம் சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா தான் பதவிக்கு வந்தால் பாதுகாப்பு வலயங்களை நீக்குவேன் என தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டம் இருப்பதால் அப்பகுதியில் மீள்குடியேற்றம் பற்றி சிந்திக்க வேண்டும் என கூறினார்.
தேவை ஏற்பட்டால் இராணுவ முகாம்களை இடம்மாற்றி மக்களை மீள்குடியேற்றம் செய்யலாம், யுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு வலயம் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இனப்பிரச்சனை தீர்வு பற்றி பேசிய ரணில் விகரமசிங்க, தான் ஒரு சர்வ கட்சி குழுவை அமைத்து அனைத்து இன மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி வாழ கூடிய சூழலை ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்.