புதுடில்லி: தேர்தலில் தோல்வி கண்டிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கையை விட்டு வெளியேற முடியாதெனவும் அவருக்கெதிராகவுள்ள அதிகளவிலான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அவர் (பொன்சேகா) நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று தொலைபேசி மூலமான பேட்டியில் பசில் ராஜபக்ஷ ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். அவர் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது. அவருக்கெதிரான அதிகளவிலான குற்றச்சாட்டுகளை நாம் வைத்திருக்கின்றோம் என்று பசில் கூறியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகள் எவை என்பது பற்றி அவர் கூறவில்லை. யார் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்கள் என்பது பற்றியும் அவர் கூறவில்லை.
தனது வாழ்க்கை தொடர்பாக பொன்சேகா அச்சமடைந்திருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் கேட்கப்பட்டபோது, இல்லை நான் அவ்வாறு நினைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இலங்கையின் வட, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் பொன்சேகா அதிகளவு வாக்குகளை ஏன் பெற்றார் என்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தமிழர்களின் இதயப் பகுதியாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் பொன்சேகா 63 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அங்கு ஜனாதிபதி 24 சதவீதமான வாக்குகளையே பெற்றிருக்கிறார். அத்துடன், வட,கிழக்கு மாகாணங்களில் சகல பகுதிகளிலும் பொன்சேகா அதிகளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
நல்லது. கடந்த தடவையிலும் (2005) பார்க்க எங்களின் மக்களாணை சிறப்பாகவுள்ளது. என்னால் புரிந்துகொள்ள முடியும். (காரணங்கள்) அவற்றை நாம் ஆராய்வோம். தவறு எங்கு இடம்பெற்றிருக்கிறது என்பதைத் கண்டறிந்து நாம் அவற்றை நிவர்த்தி செய்வோம். அங்குள்ள மக்களின் மனங்களை வென்றெடுக்க நாங்கள் முயற்சிப்போம். மிகவும் நெருக்கமாக (இந்தப் பிராந்தியத்தில்) பணியாற்றுவது தொடர்பாக நாம் நம்பிக்கையுடன் உள்ளோம். பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்களென நான் எதிர்பார்க்கிறேன். இது நடைபெறும் என நான் மிகவும் சாதகமான நிலைப்பாட்டில் உள்ளேன். குறைந்தளவு கிழக்கிலாவது நாங்கள் பாராளுமன்றத்தில் அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம் என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனது சகோதரரின் வெற்றியானது “இலங்கையிலுள்ள கிராமிய பெரும்பான்மையினரின் வெற்றியென பசில் ராஜபக்ஷ கூறினார். கடந்த 4 வருடங்களாக நாங்கள் கிராமப் பகுதிகளை அபிவிருத்தி செய்துள்ளோம். எங்களுக்கு அவர்கள் வாக்களித்ததற்கு இதுவும் ஒரு காரணம். அத்துடன், ஜனாதிபதிக்கு வாக்களிப்பதன் மூலம் தாங்கள் ஜனநாயகத்தை விரும்புவதை நிரூபித்துள்ளனர். அவர்கள் அராஜகத்தை விரும்பவில்லை. அவர்கள் சர்வாதிகாரத்தை விரும்பவில்லை. அதனால், அவர்கள் பொன்சேகாவை நிராகரித்துவிட்டனர் என்று பசில் ராஜபக்ஷ கூறினார்.
ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எதிர்மறையான பிரசாரத்தை பொன்சேகா முன்னெடுத்ததாக பசில் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.