இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி இயங்கும் சரணடைந்த காணாமல் போன உறவினர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயத்தில் சிறீலங்கா அரசு தனது பொறுப்புக்கூறும் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
16.05.2009 இல் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் 18.05.2009 இல் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் கிறிஸ்தவ பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் தலைமையில் எங்கள் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான போராளிகளுடன் சரணடைந்து இன்றுவரை எங்கு உள்ளார்கள் என்ற விபரம் இலங்கை அரசினால் எமக்குத் தெரிவிக்கப்படவில்லை.
அவர்கள் இரகசிய தடுப்பு முகாமில் சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றனர். இதில் சரணடைந்தவர்களில் பலர் குடும்பம் குடும்பமாக சரணடைந்தனர். இவர்களின் மனைவி பிள்ளைகள் கூட இரகசிய தடுப்பு முகாமில் உள்ளனர் என்றே நாம் கருதுகின்றோம்.
நாங்கள் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்று பல இடங்களிலும் முறையிட்டும் தேடிப்பார்த்தும் பயனில்லை. 13.05.2012இல் இலங்கை பாதுபாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கமைய நாங்கள் 14.05.2012 இல் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவிற்குச் சென்று அங்கும் அவர்களின் விபரம் எதுவும் இல்லை என்ற ஏமாற்றத்துடன் இவர்களின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளோம்.
ஏற்கனவே 2011 ஆம் ஆண்டிலும் சர்வதேச அழுத்தம் காரணமாக இதே போன்ற அறிவித்தல் கிடைத்து நாங்கள் இதே இடத்திற்குச் சென்று ஏமாற்றத்துடனே திரும்பி வந்தோம். ஏற்கனவே கொடிய போரினால் உடல் உள ரீதியான பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் எம்மை மேலும் மேலும் துன்பப்படுத்துவதும் அச்சுறுத்துவதும் விரக்தி நிலைக்கு எம்மை இட்டுச்செல்கிறது.
பொது மன்னிப்பு என்ற பகிரங்க அறிவித்தல் மூலம் நிராயுதபாணிகளான போராளிகள் சரணடைந்து இன்று வரை 3 வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில் நாம் ஆறாத்துயரில் மூழ்கியுள்ளோம். இலங்கை அரசு பொறுப்புக்கூறும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டியது அதன் கடமை.
எனவே மனிதாபிமானம் கொண்டு, சரணடைந்த காணாமற்போன எமது உறவுகளை சர்வதேச அழுத்தங்கள் ஊடாக இலங்கை அரசிடம் இருந்த மீட்டுத்தருமாறு சகல தரப்பினரிடமும் தயவுடன்டே;டுக் கொள்கின்றோம்.







