சமூக விரோத செயற்பாட்டில் இலங்கையை சர்வதேசத்திற்கு வெளிக்கொணர்ந்த பெருமை மகிந்தவின் ஆட்சியையே சாரும்!:வேலாயுதம்.

05.08.2008.

அடிப்படை மனித உரிமை மீறல், மனித படுகொலைகள், ஊழல், இனத்துவேசம் போன்ற சமூக விரோத செயற்பாட்டில் இலங்கையை சர்வதேச அரங்கில் முதன்மைப்படுத்தி வருகின்ற பெருமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியையே சாரும். இவ்வாறு ஊவா மாகாண சபை உறுப்பினர் கே.வேலாயுதம் இறக்குவானையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார். இறக்குவானை தேர்தல் தொகுதியிலிருந்து மாகாண சபைக்குப் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற இக்கூட்டத்தில் மேலும் கூறியதாவது;

இந்நாட்டில் என்றும் இல்லாத அளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கெதிரான யுத்தத்தின் மீதான நம்பிக்கையை வலுவூட்டும் ரீதியில் அரசு சிங்கள ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றது.

இதன் மூலம் தமிழ் மக்களது நியாயப்பூர்வமான உரிமை பிரச்சினைகளை அரசு மலுங்கடித்து வருவதோடு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நிரந்தரமான தீர்வினை முன்வைக்கத் தவறுவதோடு அரசின் ஊழல் மற்றும் வீண் விரயங்களை சுட்டிக் காட்டுகின்ற, விமர்சனம் செய்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி ஜே.வி.பி.மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்களே நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் எனவும் தேச விரோதிகள் எனவும் புலிகள் எனவும் நாமம் சூட்டி இனவாதத்தினூடாக தனது ஊழல்களையும், மோசடிகளையும், இயலாமையையும் மூடி மறைக்க முனைகிறது.

தமிழ் மக்களை, சிங்கள மக்கள் தங்களது எதிரிகளாக பார்க்கின்ற நிலைமை இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த இரு சாராருக்குமான விரிசல்களுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் தூபமிடுவதாக காணப்படுகின்றன.

இந்த மாகாண சபைத் தேர்தல்களில் நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கும், யுத்தமற்ற இலங்கையை உருவாக்குவதற்கும் உண்மையான அதிகார பரவலாக்களின் ஊடாக இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அரசை சிந்திக்க வைக்கின்ற ஒரு ஆயுதமாக அமைய வேண்டும். கொலை வெறி பிடித்த கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் வழங்குகின்ற தீர்ப்பாக அமைய வேண்டும்.

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் அவர்களை தேசிய நீரோட்டத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் ஊக்குவித்து அவர்களின் அரசியல் ரீதியான பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதுடன் அபிவிருத்திப் பங்காளிகளாக கௌரவமிக்க சமூகமாக கண்ணியத்துடன் வாழ்வதற்குமேயாகும்.

ஆனால், 20 ஆண்டுகள் கடந்தும் இந்த மாகாண சபைகள் அவற்றை பூரணமாக செயற்படுத்தாது எமது அபிவிருத்தியில் பூரண கவனம் செலுத்தாது இருக்கின்றன. மலையக மக்களது வாக்குகளை ஏகபோக உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கின்ற சில கட்சிகள் அமைச்சுப் பதவிகளை எந்தக் கட்சி ஆட்சிப்பீடத்திலிருந்தாலும், அதைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றவர்கள் சப்ரகமுவ, கேகாலை, களுத்துறை, காலி பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு என்ன செய்தார்கள்.

அப்பகுதி மக்களுக்கு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி கொடுத்தார்களா? அவர்களது அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார்களா? இல்லவே இல்லை. இந்தத் தேர்தலை முன்னிட்டு அவர்களிடம் நீலிக் கண்ணீர் வடிக்கின்றவர்கள் நாங்களே உங்கள் காவல்கள் என்று கூறுகின்றவர்கள் இதுவரை காலம் எங்கே போனார்கள்?

மகிந்த அரசு தமிழ் மக்களின் கழுத்தை நெரித்து இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதற்கு எதிராக அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்களா அல்லது அரசை விட்டு வெளியேறினார்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச ஊழியர்கள் போன்று சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுக்க தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து கடந்த 10 ஆம் திகதி வேலை நிறுத்தம் செய்தபோது அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம். வேலை நிறுத்தம் செய்தால் ,அரசாங்கத்தில் எங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது என்று பிரசாரம் செய்தவர்கள் இரத்தினபுரி தோட்டத் தொழிலாளர்களிடம் வாக்கு கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லை. இரத்தினபுரி, கேகாலை தொழிலாளர்கள் இத்தேர்தலில் இவர்களுக்கு நல்ல பாடத்தைப் புகட்டுவர் என்றார்.