சந்தேகிக்கும் எவரையும் ஒன்றரை வருடகாலத்துக்கு தடுத்து வைக்கும் புதிய சட்டம்.

07.09.2008.

ஓகஸ்ட் 2005 அவசரகாலச்சட்ட விதிமுறைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அதன்படி குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி சந்தேகநபர் ஒருவரை ஒருவருட காலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கமுடியும் கடந்த மாதம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின் படி, சந்தேக நபர் ஒருவரை ஒரு வருட காலத்திற்கு தடுத்து வைக்க முடியும் எனவும், குறித்த நபர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர் எனக் கருதினால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மேலும் 6 மாதங்களுக்குத் தடுத்து வைக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அவசரகாலச்சட்ட விதிகளை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை  மாற்றுக் கொள்கைக்கான நிலையம் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றினைத் செய்துள்ளது.

கைதி ஒருவருக்குப் பிணை வழங்குவதற்கான அதிகாரத்தை நீதவானிடமிருந்து நீக்கும் வகையிலும், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் எனத் தான் சந்தேகிக்கும் எவரையும் ஒன்றரை வருடகாலத்துக்குத் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு உத்தரவு வழங்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கும் வகையிலும் அமைந்திருக்கும் குறித்த அவசரகால விதிகளை எதிர்த்தே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிதிகள் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது