சந்திரிகாவின் சிவில் உரிமையை அகற்றுவதில் மஹிந்த தீவிரம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சிவில் உரிமையை அகற்றும் முயற்சியை தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது ஆட்சிக்காலத்தில் தனிப்பட்ட ரீதியில் நண்பர் ஒருவருக்கு அரச காணியை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டே, இந்த நடவடிக்கைக்கு முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.சந்திரிகா பண்டாரநாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் மங்கல  சமரவீர ஆகியோருடன் இணைந்து கூட்டணி ஒன்றை அமைக்கப்போவதாக வெளியான தகவல் தமது ஆட்சிக்கு பிரச்சினையை கொண்டு வரும் என்ற அடிப்படையிலேயே, சந்திரிகாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளகத்தவல்களின்படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவரின் ஆட்சிக்காலமான 7 வருடங்களுக்கு சந்திரிகாவினால் கட்சிக்குள், பிரச்சினை ஏற்படக்கூடாது என்ற அடிப்படையிலேயே அவரின் சிவில் உரிமையை அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஒருவரின் சிவில் உரிமையை அகற்றவேண்டுமானால், நீதிமன்ற தண்டனைக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பின் மூலமே அதனை மேற்கொள்ளமுடியும்.