கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வீடுகள் வர்த்தக நிலையங்கள் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தங்கியுள்ளவர்கள் மற்றும் வாகனங்களில் பயணிப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதுகாப்பு தரப்பினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் பலத்த சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறாக படையினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழர்கள் பலர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் வடக்கு, கிழக்கு மற்றும் மலைய கத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, வெல்லம்பிட்டிய, கிருலப்பனை, நாவல, நுகேகொடை, நாரஹேன்பிட்டி, மற்றும் களனி போன்ற பகுதிகளிலேயே இந்த சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரிடமும் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கவோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.