சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகாரத் தலைவர் மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான இந்தக் குழுவினர் நேற்றுக்காலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
தெற்காசிய நாடுகளை இராணுவ மயப்படுத்தும் போட்டி இலங்கை ஈர்ப்பு மையமாகச் செயற்படுகின்றது. மேற்குலம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான இராணுவப் போட்டிக்கு ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரம் வெளியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளையும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பிலுள்ள பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும் இந்தச் சந்திப்பின போது கையெழுத்திடப்பட்டுள்ளது.
பின்னர் சீன பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெனத் ஜெயசூரியவை சந்தித்து இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா இராணுவம் நடத்தும் நிபுணத்துவ பயிற்சிகளுக்கு சீன இராணுவ அதிகாரிகளை அதிகளவில் அனுப்பி வைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா இராணுவத்துக்கு கண்ணிவெடிகளை அகற்றும் 100 கருவித் தொகுதிகளை வழங்கவும், சீன போர்ப்பயிற்சிக் கல்லூரிகளில் சிறிலங்காப் படை அதிகாரிகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் இருநாட்டு அதிகாரிகளும் இணக்கம் கண்டுள்ளனர்
சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா 25 ஆண்டுகளுக்கு மேலாக உதவி வருவதாகவும், போரின் போது மட்டுமன்றி சமாதான காலத்திலும் இந்த உதவிகள் தொடரும் என்றும் சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிவிவகார பணியக தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் “ஒப்பரேசன் நீர்க்காகம்“ போரப்பயிற்சியில் சீன இராணுவப் பிரதிநிதிகளை கலந்து கொள்வதற்கும் சிறிலங்கா இராணுவத் தளபதி அழைப்பு விடுத்துள்ளார்.
தியத்தலாவ இராணுவப் பயிற்சி நிலையத்துடன் சீன இராணுவம் நெருக்கமாக இணைந்து செயற்படவும் இந்தச் சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.