கடந்த ஏழாம் தியதி கொல்லத்தில் விடுதி அறைகளில் இருந்து 37 ஈழத் தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டனர். ராகுல்காந்தியின் வருகையை ஒட்டிய விடுதிச் சோதனைகளின் போது இவர்களை கேரளப் போலீசார் பிடித்தனர். கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் கேரளம் வந்த போது இவர்கள் போலீசிடம் சிக்கியுள்ளனர். இந்நிலையில் இவர்களிடம் பணம் வாங்கிவிட்டு அனுப்பி வைத்த முக்கிய குற்றவாளி டென்னீசன் என்பவரை போலீசார் தேடி வரும் நிலையில் எட்டு பேர் மீது மட்டும் வழக்குத் தொடர்ந்து விட்டு ஏனையோரை திருப்பி அனுப்பி விட்டதாகத் தெரிகிறது. ஆனால் விடுதிகளுக்குக் கட்ட பணமோ, உணவு சாப்பிடவோ இவர்களுக்கு பணம் இல்லாத நிலையில் நேற்றிலிருந்து குழந்தைகளும் பெண்களும் உணருந்த பணமில்லாமல் அப்படியே நிர்கதியாய் விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் அனைவருமே கேரளத்தில் இருந்து தமிழகம் வர விரும்பும் நிலையில் வாகன் ஓட்டிகளும் இவர்களை ஏற்றி வந்தால் தமிழக போலீசாரின் அடக்குமுறையை சந்திக்க நேரிடும் என்பதால் ஏற்றிவர அஞ்சுவதாகத் தெரிகிறது.