ஹமாஸ், இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை செலுத்தப் பெற்றிருக்கும் திறனை முழுமையாக இஸ்ரேல் அழிக்கும் வரை, காசா நிலப்பரப்பு மீது இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஒல்மர்ட் கூறியுள்ளார்.
பல ராக்கெட் தாக்குதல்களுக்கு இலக்கான தென் இஸ்ரேலிய நகரான இஸ்தெராட் நகருக்கு விஜயம் செய்தபின்னர் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
காசாவில் இனி ஆயுதங்கள் எதுவும் கடத்தப்படாத நிலை ஒன்று உருவாவதுதான் இந்த இஸ்ரேலிய தாக்குதலின் விளைவாக இருக்க வேண்டும் என்று ஒல்மெர்ட் கூறினார்.
ஆயுதக்கடத்தல் நின்று, ராக்கெட்டுகள் வீசப்படுவதும் நிற்கும்போதுதான், இஸ்ரேலிய தாக்குதல் நிற்கும் என்று அவர் கூறினார்.
——————————————————————————–
இஸ்ரேல் பள்ளிக் கூடம் மீது நடத்திய தாக்குதல்களில் 40 பேர் பலி
இஸ்ரேல் தாக்குதலில் பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
காசா நிலப்பகுதியில் இருக்கும் ஐநா மன்றத்தின் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேலின் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
காசாவின் வடக்கே இருக்கும் ஜபல்யா என்கிற இடத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கிய 11 வது நாளில் இது நடந்துள்ளது.
காசாவில் நிலவும் தற்போதைய சூழல் மிகபெரிய மனித நேய நெருக்கடியாக உருவாகியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்திருக்கிறது.
காசா பகுதியில் இஸ்ரேலின் நிலத்தாக்குதல் தொடரும் பின்னணியில் பேசிய செஞ்சுலுவைச் சங்கத்தின் சார்பில் பேசவல்ல மூத்த அதிகாரி ஒருவர், காசாவில் வாழும் மக்களின் வாழ்க்கை என்பது சகித்துக்கொள்ளமுடியாத ஒன்றாக மாறியிருப்பதாக தெரிவித்தார்.
அங்குள்ள பொதுமக்களைக் காப்பாற்ற மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
இந்த தாக்குதல்கள் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 560 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காசா பகுதியில் இருக்கும் பொதுமக்களில் பலர் குடிநீர் மற்றும் எரிவாயு இன்றி தவிப்பதாகவும் பலர் பசியுடன் வாழ்வதாகவும், அவர்களுக்கு மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை என்றும் அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசா நிலப்பகுதி மோதல்கள் தொடரும் பின்னணியில் இந்த வன்முறை மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ராஜீயத்துறை முயற்சிகளும் வேகம் பிடித்து வருகின்றன.
காசாவில் நடக்கும் இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஹமாஸ் அமைப்பிடம் வலியுறுத்தும்படி சிரிய அதிபர் பஷர் அல் அசாத் அவர்களிடம் தாம் வலியுறுத்தியதாக பிரஞ்ச் அதிபர் நிகோலஸ் சர்கோசி அவர்கள் தெரிவித்தார். டமாஸ்கஸில் நடந்த பேச்சுக்களின் முடிவில் இதை அவர் கூறினார்.
சிரியா ஹமாஸ் அமைப்பின் முக்கிய ஆதரவாளராக பார்க்கப்படுகிறது.