கொதிக்கும் எண்ணையில் யோர்ஜியா: மீண்டும் குளிர் யுத்தம்–ரஃபேல்

மூன்றவாது உலக யுத்தம் என்ற சொல் புழக்கத்துக்கு வரத்தொடங்கியுள்ளது. அப்படியொரு யுத்தம் வந்தால் தற்போது ஓரணியில் நிற்பவை ஒருபக்கம் சீனாவும் ரசியாவும் ஈரானும் மறுபக்கம் ஐரோப்பிய வட்டகையும் அய்க்கிய அமெரிக்காவும். அதுவும் புஸ்ஸைப்போன்ற போர்வெறியனான ஓர் அதிபர் அமெரிக்காவில் மீண்டும் வந்தால் மூன்றாம் உலகப் போர் அல்லது ஓர் மறைமுக யுத்தம் தொடங்கிவிடும்.

தற்போது நடைபெற்று ஓர் எல்லையைத் தொட்டிருக்கும் யோர்ஜிய சிக்கலும் இந்த மறைமுக குளிர்யுத்தத்தின் ஓரங்கமாகவே பார்க்கப்படவேண்டும். யோர்ஜிய சிக்கல் ஏன் உருவாகியுள்ளது? எண்ணைதான். இனிவரும் நாட்களில் உலகின் எந்தச் சிக்கலும் எரிசக்தியை அடிப்படையாகக்கொண்டே பார்க்கப்படும். வெளிப்படையாகக் கதைக்கப்படாவிட்டாலும் அதுதான் காரணமாகவிருக்கும். ஈராக்கின் யுத்தத்துக்கு காரணமும் தற்போது நடைபெறும் ஆப்கானிஸ்தான் யுத்தத்துக்கு காரணமும் அதேதான்.

அதற்காக சிக்கல் உருவாக இந்த நாடுகளில் எண்ணைதான் கிடைக்கவேண்டும் என்று யோசிக்கத் தேவையில்லை. எண்ணையைக் காவிச்செல்லும் குளாய்கள் செல்லும் பாதைக்கே தற்போது சண்டை. எண்ணை செல்லும் பாதை யார் கட்டுப்பாட்டில் வருகிறதோ அவர்கள் கையில் ஒரு பிடி இருக்கும்தானே! உண்மையில் முன்னாள் சோவியத் உலகம் முழுவதுக்கும் செல்லும் எண்ணைக்குளாய்களை தனக்குச் சொந்தமாக வைத்திருந்தது. பின்னர் ரசியாவாகவும் சில சிறிய நாடுகளாகவும் பிரிந்துவிட்டதில் கணிசமான அளவு எண்ணைகாவிச்செல்லும் குளாய்கள் உக்கிரேன், துருக்மேனிஸ்தான், அசர்பைசான், கசக்ஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளிடம் சென்றுவிட்டன. அவற்றுடன் முக்கியமானது யோர்ஜியா !

யோர்ஜியாவுக்களால் பி.ரி.எஸ் (பைக்கு – த்பிலிஸ் – செய்கான் எண்ணைக் குளாய்) எனப்படும் முக்கியமான எண்ணைக் குளாய் செல்கிறது. தற்போது நடந்த சண்டையில் ரசியப் படைகள் கைப்பற்றும் நோக்குடன் வெகு வேகமாக முன்னேறி வந்த ஒரு நகரம் த்பிலிஸ். அதனூடாகவே எண்ணைய்க்குளாய்கள் செல்கின்றன. அதைவி;ட்டுவிட்டு வேறு எந்தக் காரணமும் அங்கு இல்லை. வெறும் 69 700 சதுர கிலோமீற்றர் கொண்ட யோர்ஜியாவிலிருந்து (இலங்கை 65 600)இரண்டு சிறிய குடியரசுகள் ரசியாவின் ஆதரவில் தற்போது தோன்றியிருப்பதாகக் கருதலாம்.

இந்தச்சிக்கலையொட்டி பல உலக நடவடிக்கைகள் தொடங்கின. அதில் முதன்மையானது ஐரோப்பிய வட்டகையினர்; ரசியாவுக்கு எதிராக முடிவெடுக்க ஒரு கூட்டம் போட்டதாகச் சொல்லப்பட்டது. உண்மையில் அது ரசியாவுக்கு எதிராகப் போடப்பட்டதா அல்லது ஆதரவாகப் போடப்பட்டதா என்றே சிந்திக்க இடமிருக்கிறது. அந்தக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் ரசியாவுக்கு எதிராக எவ்வித பெரிய முடிவுகளும் அறிவிக்கப்பட்வில்லை. அறிவிக்கப்படவும் முடியாது.

ரசியாவுக்கு எதிராக ஐரோப்பிய வட்டகை ஏதும் முடிவுகளை அறிவிக்குமாயின் ஐரோப்பா செயலிழந்து போகும் என்றே சொல்லலாம். இது ரசியாவின் ஏவுகணைகளால் ஏற்படும் பயத்தினால் அல்ல. ஐரோப்பா முழுமைக்கும் எண்ணையை வழங்கி வருவது ரசியாதான். ரசியாவின் எண்ணைக்குளாய்கள் ஐரோப்பாவை தனது இரு கைகளாலும் பற்றி நிற்கின்றன. மற்றொருவகையில் ரசியாவின் பிடிக்குள் ஐரோப்பா உள்ளது. இது ஒன்றும் மிகைப்படுத்தபட்ட கூற்று அல்ல. (தரப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள், உண்மையென்பது புரியும்.)

இப்படியொரு சூழ்நிலை இருப்பதை ஐரோப்பிய வட்டகையும் அய்க்கிய அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளும் பாரத்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாதே! அதற்காகத்தான் எண்ணைக் குளாய்களில் இருந்து ரசியாவின் ஆதிக்கத்தை வெளியில் கொண்டுவருவதற்கு புதிதாகவும் பல எண்ணைக் குளாய் வழித்தடங்கள் போடத் திட்மிடப்பட்டு முதற்கட்ட வேலைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

புதிதாகத் தொடங்கும் குளாய்கள் செல்லும் வழியிலுள்ள பின்வரும் நாடுகளைப் பாருங்கள். உலகளாவிய சிறிய போர்கள், சில அரசியல் நடவடிக்கைகளின் காரணம் வெளிப்படும்: அவை ஆப்கானிஸ்தான், யோர்ஜியா, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, ஈரான் மற்றும் இஸ்ரேல்.

இந்த இஸ்ரேல் செய்யும் வேலைகள், இந்தச் சிக்கல்களில் சொல்லி மாளாது. புதிதாகப் போடப்படும் குளாய்களில் மூன்று குளாய்கள் துருக்கியிலிருந்து இஸ்ரேலுக்கு வரவிருக்கின்றன. எண்ணையும் தண்ணீரும் சேர்ந்துதான் இஸ்ரேலுக்கு இவற்றில் வரவிருக்கிறது. ஆம். எண்ணையைவிட அதிகத் தேவையானது இஸ்ரேலைப் பொறுத்தவரை தண்ணீர்தான். பாலஸ்தீனத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பதற்குத் தண்ணீர்தான் காரணம். காசா நிலத் தொடர் தண்ணீரால் நிறைந்தது. அதற்காகத்தான் இஸ்ரேலால் அது கைப்பற்றப்பட்டது.

இந்தப்பட்டியலில் யோர்ஜியா மீண்டும் இடம்பெறுவதைப் பாருங்கள். வடக்குத் தெற்காக ரசியாவிலிருந்து வரும் குளாய் கஸ்பியன் கடலிலருந்து மேற்கு நோக்கி வருகையில் வரைபடப்படி நேர் கோடுகிழித்தால் யோர்ஜியாவுக்கு வராமலேயே ஆர்மீனியாவின் ஊடாகச் சென்றுவிடலாம் போலத் தோன்றும். எண்ணைக் குளாய்களும் தண்ணீர்க் குளாய்கள் போன்றனதானே? அவற்றை மலைகளில் ஏற்றி இறக்க முடியாது. அதனால்தான் காக்கேசிய வட்டகையில் உள்ள பள்ளத்தாக்கு மற்றும் நதிப்படுக்கைகளினூடாக எண்ணைக் குளாய்கள் செல்லுகின்றன. அதில் முதன்மையான பள்ளத்தாக்கு யோர்ஜியாவினுடையது. 

தற்போது இந்த யோர்ஜியாவின் பிரிவுகளாக ஆகியிருக்கும் தெற்கு ஒசெற்சியாவும் அப்காசியாவும் பாதி நிலத்தைப் பிடித்துக்கொள்கின்றன. அப்காசியாப்பகுதி கி.மு. 6 இலிருந்து கிபி 6 ஆவது நூற்றாண்டுவரை தனித்த குடியரசாகவே இருந்து வந்துள்ளது என்பது வரலாறு. தற்போதைய யோர்ஜியா உருவானது 11 ஆவது நூற்றாண்டில்தான். அதுவும் 13 ஆவது நூற்றாண்டிலிருந்து சிறிய சிறிய நாடுகளாகப் பிரிந்து பின்னர் சோவியத்தின் கீழ் வந்து தற்போது யோர்ஜியாவானது. இதைவிடவும் தெற்குப் பகுதியில் துருக்கியை அண்டியதாக அஜாரியா என்னும் நிலப்பகுதி கியூபெக் மாகாணம் போன்ற தனித்த அகாக உள்ளது. இது திருமலை மாவட்டத்தைவிடச் சிறியதாகும்.
இங்கும் ரசியாவின் படைத்தளம் உள்ளது. இப்படைகளை மீளப்பெறுவதாக ரசியா அறிவித்த கெடு 2007 நொவம்பர். ஆனால் தற்போது அப்காசியா பகுதியின் நீட்சியாக ரசியா எடுத்துக் கொடுத்திருக்கும் பகுதி அஜாரியாவின் எல்லை வரைக்கும் ஏறக்குறைய வந்துவிட்டது. அஜாரியாவும் வறுமையான சமூக நிலையின்மையற்ற அரசியல் தன்னாதிக்கத்தில் தொடர்ந்து வந்த குடியரசுதான். ஆனாலும் எண்ணை சுத்திகரிப்புடன் இது தொடர்பு பட்டது. ரசியா அப்காசியாவுக்காக கைப்பற்றிக் கொடுத்த போட்டிஸ் என்ற துறைமுகம் அஜாரியாவின் எல்லையில் உள்ளதுதான். பாதித் தோடம்பழத்தை உரித்து வைத்த தோல்போன்றதாகவே இப்போது யோர்ஜியாவின் நிலப்பகுதி இருக்கிறது.

எவ்வளவுதான் எண்ணைக்குளாய்கள் சென்றாலும் வறுமையிலும் சமூக நிலையின்மையும் அரசியல் நிலையின்மையிலும் தொடர்ந்து வந்த யோர்ஜியா வல்லரசுகளின் விளையாட்டுக்கு மீண்டும் உள்ளாகி முன்னைப்போலச் சிதறியிருக்கிறது.

எங்கோ இருக்கும் அமெரிக்கா வேலை மெனக்கட்டு இந்தச் சிறிய யோர்ஜிய நாட்டுக்கு உதவிப் பொருட்களுடன் போய் கப்பலில் ஏன் காத்துநிற்கிறது? முன்னாள் சோவியத்தின் கடைசி வெளியுறவு அமைச்சர் எட்வர்ட செவர்நாட்சேதான் தற்கால யோர்ஜியாவின் அதிபராக இருந்தவர். ரோசாப்பூப்புரட்சி மூலம் (ரத்தமெதுவும சிந்தாமல் அண்மைக்காலத்தில் நடந்த வல்லாட்சி மாற்றம்)பதவியிலிருந்து விலக்கப்படட்டவர். ஆனாலும் எதுவும் யோர்ஜியாவில் முன்னேறவில்லை. முந்தைய நூற்றாண்டுகளிலிருந்ததைவிடவும் யோர்ஜியாவின் நிலை எண்ணைக் குளாய்களால் மேலும் சிக்கலாகியிருக்கிறது.

மூன்றாமுலகப் போருக்கு யோர்ஜியா தொடக்கப் புள்ளியாக இருக்கப்போவதில்லைத்தான். ஆனாலும் இந்தப் பிணக்குகள் தரும் செய்தி உலகம் முன்னைப்போல் அமைதியாக இல்லை என்பதும்தான். ரசியாவின் முன்னாள் அதிபர் புட்டின் ஓர் பத்திரிகையாளின் கேள்விக்கு ‘மீண்டுமொரு குளிர்யுத்தம் வராது. ஏற்படின் எதிர்கொள்ளத தயார்’ என்றிருக்கிறார். ரசியாவும் சீனாவும் ஈரானும் சேர்ந்து மத்திய ஆசியக் கூட்டமைப்பு ஒன்றை கடந்த மாத்தில் நிறுவியுள்ளனர். அன்றைய நாளில் சீனக்கடலில் ரசியாவின் படைகளும் சீனப்படைகளும் போர் ஒத்திகையிலும் ஈடுபட்டன. அதைத்தொடர்ந்து சென்ற கிழமையிலிருந்து ஈரான் அனைத்து நாடுகளும் எண்ணைக் கொடுப்பனவுகளை டொலரில் செலுத்தக்கூடாது என்றும் அந்தந்த நாட்டின் பணங்களாகவே கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது. இது உலக நாடுகள் அமெரிக்க டொலருக்குள் சிக்குவதை தடுக்க எடுக்கும் வெளிப்படையான நடவடிக்கை. டொலரைத்தடுப்பதும் அமெரிக்காவை தடுப்பதும் ஒன்றுதான்.

(தாய்வீடு மாத பத்திரிக்கை, கனடா 2008 செப்)