இரு தமிழ் எம்.பிக்கள் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலை தொடர்பாக முழுமையான விசா ரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்றங்களுக்கிடையேயான சங்கம் (ஐ.பி.யூ) அழைப்பு விடுத்துள்ளது.
29 நாடுகளில் சுமார் 300 எம்.பி.க்களுக்கு இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பாக சம்பவங்களை பரிசீலனை செய்திருக்கும் ஐ.பி.யூ.வின் மனித உரிமைகள் குழுவானது தனது பிந்திய அமர்வின் இறுதியிலேயே இந்த அழைப்பை விடுத்திருக்கிறது.
இலங்கையின் நீண்ட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தாமல் விடுவதற்கு எந்தவொரு காரணமும் இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்று ஐ.பி.யூ. கூறுகிறது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் விசாரணையை மேற்கொள்ள முடியாதென எப்போதும் அரசாங்கம் தெரிவித்து வந்தது. ஆனால், அதற்கான காரணம் இப்போது நீடித்து இருக்கவில்லை என்று ஐ.பி.யூ.வின் மனித உரிமைகள் குழுவின் தலைவரும் கனடிய செனட்டருமான ஷாரன் கார்ஸ் ஸ்கெயார்ஸ் கூறுகிறார்.
வொய்ஸ் ஒப் அமெரிக்காவுக்கு இதனைத் தெரிவித்த ஷாரன் ஸ்கெயார்ஸ் கைது, இம்சை, அச்சுறுத்தல்களுக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலக்காவதாகவும் தெரிவித்திருக்கிறார். 12 தமிழ் எம்.பி.க்களின் நிலைமை தொடர்பாக ஐ.பி.யூ. மனித உரிமைகள் குழுவானது கவலையடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
நடமாட்டத்திற்கான உரிமை மற்றும் சட்டபூர்வமான அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஆற்றல் என்பவை அறிக்கையிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தலைநகர் கொழும்பிலிருந்து வெளியே செல்வதற்கு அவர்கள் தயங்குகின்றனர். ஏனெனில், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
“தமிழ் எம்.பி.க்கள் மத்தியில் அதிகளவு அச்சம் காணப்படுகிறது. ஆதலால் இந்தக் கட்டத்தில் தமிழ் எம்.பி.க்கள் புதிய சமிக்ஞையைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையை நாம் இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். அவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் இருக்க வேண்டும். போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தில் முழுமையான பங்களிப்பை வழங்குபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் உரிய முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகும்’ என்றும் ஷாரன் கூறியுள்ளார்.