இன்னும் நான்கு மாதங்களில் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ள நிலையில் பாஜக படு தோல்வியடைந்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலையுமே பாஜக முக்கியமாகக் கருதுகிறது. பிகார், ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்களில் கவனிக்கத் தக்க வெற்றியை பாஜக பெற்றது. வட இந்தியாவைத் தவிர்த்து தன்னால் செல்வாக்குப் பெற முடியாத மாநிலங்கள் எனக் கருதப்படும் மேற்குவங்கம், தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், போன்ற மாநிலங்களில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என வேலை செய்கிறது பாஜக. கேரள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தங்கக் கடத்தல் வழக்கை கையில் எடுத்த பாஜக அதையே பினராயி விஜயனுக்கு எதிராக பிரதானமாக பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் கட்சியும் இதே பாணியில் பிரச்சாரம் செய்தாலும் கூடுதலாக இரு கட்சிகளுமே அய்யப்பன் கோவில் விவகாரத்தையும் மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக பிரதான விஷயமாகப் பேசியது.
கேரளம் முழுக்க 15,962 வார்டுகள், 941 கிராம பஞ்சாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. இதில் 500 –க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் இடது முன்னணி முன்னிலை வகிக்கிறது. 86 நகராட்சிகளில் .152 வட்டார பஞ்சாயத்துக்களில் 110 இடங்களில் இடதுசாரிகள் முன்னிலை வகிக்கிறார்கள். 6 மநகராட்சிகளில் 5 இடங்களில் இடது சாரிகளும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெறுகிறது.
மொத்தத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஆளும் இடது முன்னணி பெரு வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ள நிலையில் பாஜக 25 இடங்கள் வரை கிராமப் பஞ்சாயத்துகளில் வெல்கிறது. பாலக்காடு நகராட்சியையும் பாஜக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இடது முன்னணி குறிப்பாக பினராயி விஜயன் படு தோல்வியடைவார் என்று பரவலாக நம்பப் பட்டது. ஆனால், பரவலாக பினராயி வென்றுள்ள நிலையில் திருவனந்தபுரம், பதனம்திட்டா, கோழிக்கோடு நகராட்சிகளை வெல்லும் என கணிக்கப்பட்ட பாஜக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.