கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 8 ஆவது நாளாக இன்று தொடர்ந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 34 பேர் மயக்கமடைந்தனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் கடந்த 9ம் தேதி முதல் 2வது கட்டமாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மீனவர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போராட்டத்தில் 106 பேர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
தொடர் உண்ணாவிரத போராட்டம் 8வது நாளாக நடந்தது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 106 பேரில் 34 பேர் மயக்க மடைந்தனர். அவர்கள் கூடங்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர். அதே நேரத்தில் கன்னியாகுமரி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடங்குளம் எஸ்.எஸ். புரம் சந்திப்பில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களும், பொது மக்களும் நடத்திய தர்ணா போராட்டம் நேற்று 4வது நாளாக நடந்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்குச் சென்ற ஒப்பந்த தொழிலாளர்களைப் பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
நாகர்கோவிலில் தங்கியிருந்த அணுமின் நிலைய பொறியாளர்கள், விஞ்ஞானிகள் 2 வது நாளாக பணிக்குச் செல்ல வில்லை. அதே போல் கூடங்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் அணுவிஜய் நகரில் தங்கியுள்ள அணுமின் நிலைய பணியாளர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் யாரும் பணிக்குச் செல்ல முடிய வில்லை. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.
இப் போராட்டத்தில் தலையீடு செய்து வரும் தன்னார்வ நிறுவனங்கள் போராட்டத்தை நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது. மூன்றாம் உலக நாடுகளை பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைக்கான பிரதேசமாக மாற்றும் நோக்கோடு பன்னாட்டு நிறுவனங்களதும் மேற்கு நாடுகளதும் நிதி வழங்கலில் செயற்படும் தன்னார்வ நிறுவனங்கள் கூடங்குளம் போராட்டத்தில் தொடர்ச்சியாக மூக்கை நுளைத்து வருவதாக பலர் தெரிவிக்கின்றனர். போராட்டம் நிறுத்தப்படுமானால் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அதிக நிதியை இந்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள வழி பிறக்கும்.
தவிர, ஜெயலலிதாவின் “உங்களில் ஒருத்தி” நாடகம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாடகத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்டதே.