29.11.2008.
கிழக்கு மாகாணத்தில் 33,000 கணவனை இழந்த இளம் பெண்கள் வாழ்ந்துவருவது தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு நடத்திய கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக ‘ராவய’ பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது.
‘கிழக்கின் உதயம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக தேசநிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கூறியிருப்பதாக ராவயவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கிலுள்ள 33,000 ஆயிரம் கணவனை இழந்த பெண்கள் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் எனவும், இவர்களில் 95 வீதமானவர்களுக்குக் குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சின் கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கணவனை இழந்த இளம் பெண்கள் தாய்மாரில் 25 வீதமானவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், எஞ்சியவர்களுக்கு 1-4 குழந்தைகள் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், எந்தவொரு குடும்பமும் வறுமையால் பாதிக்கப்படவில்லையெனத் தெரிவித்த அமைச்சர் புஞ்சிநிலமே, இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வருமானங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறினார்.
பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் பொருளாதார வலயமொலன்றை கிழக்கில் அமைத்துத் தருமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர், தேசநிர்மாண அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக ராவய தனது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் குடாநாட்டிலும் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரியவருகிறது.