கிழக்கு மாகாணத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாகப் பெய்த கடும் மழையும், பெருவெள்ளமும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிற அதே வேளை, பல்வேறு பிரச்சினைகளையும் மேற்கிளம்பச் செய்திருக்கிறது.
கிழக்கு மாகாணம் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலநிலையை அனுபவிக்கும் காலம் இதுவாகும். இது இங்கு மாரிகலாமாகும். பொதுவாக மழையையும் சாதாரண வெள்ள நிலைமையையும் அனுபவிக்கும் காலமிதுவாகும். பொங்கல் வரை காணப்படும் இக்காலநிலை பொங்கலுடன் முடிவடையும் என்ற அனுபவமே நிலவுகிறது. இதன் வழியாகவே “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற கருத்து வலுவுடையதாகப் பயன்பட்டு வந்தது.
இவ் வழமையான நிலைமைக்கு மாறாக கிழக்கு மாகாணத்தில் 1913 ஆம் அண்டிலும் 1957 ஆம் ஆண்டிலும் அடை மழையும் பெரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. 1957இல் ஏற்பட்ட பெருவெள்ளம் உண்டாக்கிய அழிவுகள் இன்று வரை மக்களால் மறக்கப்பட முயடிhத ஒன்றாக இருந்து வருகிறது. அத்துடன் சூறாவளி, சுனாமி, யுத்த அழிவுகள் என்பனவும் பெரும் அழிவகளை ஏற்படுத்தியிருந்ததுடன் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக ஒரு மோசமான சமூக-பொருளாதார நிலையே கிழக்கு மாகாணத்தில் காணப்பட்டு வந்தது.
கடந்த 2010 டிசம்பர் மற்றும் 2011 ஜனவரியில் ஏற்பட்ட அடைமழையும் வழமைக்கு மாறான ஒன்றாகும். வருடாந்தம் சராசரியாக 1650. மி.மீ. மழை வீழ்ச்சியைப் பெறும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த டிசம்பர் முதல் இறுதி 42 நாட்களில் மட்டும் (2010 டிசம்பர் 1 முதல் 2011 ஜனவரி 12 வரை) 1602.2 மி.மீ. மழைவீழ்ச்சி கிடைத்திருப்பது பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் பெய்யும் மழை இந்த 40 நாட்களிலும் பெய்துள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் பெறப்பட்ட அதிக மழைவீழச்சியாகும். வருடாந்தம் சராசரியாக 1580.1 மி.மீ. மழை வீழ்ச்சியைப் பெறும் திருகேணாமலை மாவட்டம் இக்காலப்பகுயில் 1030.6 மி.மீ. மழை வீழ்ச்சியைப் பெற்றுள்ளது.
தற்போது வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மூன்று வாரங்களுக்கு மேலான அடை மழை பொழிந்திருக்கிறது.
இலங்கையை அண்டிய வளிமண்டலப் பரப்பில் வெப்ப நிலை குறைவடைந்திருப்பதுடன் அதனால் தாழமுக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே வேளை பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் இதற்கு மாறாக உயர் வெப்ப நிலை நிலவுவதனால் இன்றைய சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது “லா நினோ” காலநிலைத் தாக்கமாகும்.
வழமைக்கு மாறான இந்தக் காலநிலையானது “வரட்சியான பசுபிக் சமத்திர பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் லா நினோ நிலைமையின் தாக்கமெனக் கருதப்படுகிறது. 2010 ஏப்ரல் முதல் இந்த வழமைக்கு மாறான காலநிலை உலகின் பல்வேறு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டள்ளது. அவுஸ்திரேலியா, ஐரோப்பா, பிரேஸில், ஈரான் போன்ற நாடுகளில் இக்காலநிலை உணரப்பட்டுள்ளது” எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் “வடகீழ் பருவப்பெயர்ச்சி காரணமாகவே இந்தக் காலநிலை நிலவுகிறது. லானினோ நிலைமையே மோசமான காலநிலைக்கு ஏதுவாகியுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறது.
சீரற்ற காலநிலை காரணமாகத் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையும், காட்டாறுகளின் பெருக்கமும், மழை நீர் வழிந்தோடக்கூடிய வடிகான் முறைமைகள் சீரற்றிருந்தமையும், குளங்களின் நீரைத் திறந்து விட்ட நிலைமையும் பெருவெள்ளத்தினை எற்படுத்தியிருக்கிறது. அதே வேளை வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய தாழ்நிலப் பகுதிகளில் குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்பட்டமை பல குடிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இதில் புதிதாக அமைக்கப்பட்ட சுனாமி வீட்டுத்திட்டங்களும் உள்ளடங்குகிறது.
இயங்கிவரும் மாவட்ட நிர்வாகம் இந்த நிலைமை குறித்து கவனம் எடுத்துச் செயற்படாதிருந்துள்ளது என்பதுவும் அபிவிருத்தித் திட்டங்கள் இந்த நிலைமைகள் குறித்த கவனம் இன்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனையும் இந்த அவல நிலைமைகள் தெளிவாக்கியிருக்கிறது.
அடை மழை மற்றும் வெள்ளம் என்பவற்றறைத் தொடர்ந்து தற்போது கடுங்குளிர்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்த மழை, வெள்ளம் என்வற்றிற்கு மேலாக வானத்தின் மீதான கருமுகில் கூட்டமும் , ( முகிலினால் மூடப்பட்டு சூரிய வெளிச்சம் கிடைக்காத நிலையும்) இமயமலையிலிருந்து வீசுகின்ற கடுங்குளிரான காற்றின் காரணமாகவும் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளதாகத் தொவிக்கப்படுகிறது. இவ்வாரம் 100 ஆண்டுகளுக்குப் பின்பான குறைந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கொழும்பின் வெப்பநில 18.3 சதம பாகையாகப் ( கடந்த முப்பதாண்டு காலச் சராசரி வெப்பநிலை 22.3 சதம பாகை) பதிவாகியுள்ளது. கடந்த 61 வருடங்களின் பின் கொழும்பின் வெப்ப நிலை வீழச்சியடைந்திருக்கிறது.
நுவரெலியாவின் வெப்பநிலை 7.9 சதம பாகையாகவும் மட்டக்களப்பில் 16.9 சதம பாகையாகவும் பதிவாகியுள்ளது.
மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மிக மோசமானவை. அத்துடன் கடுங்குளிர் காரணமாக ஏற்பட்ட உடல் விறைப்பினால் மட்டக்களப்பில் 5 பேர் மரமடைந்துள்ளதுடன், நோயாளிகள், முதியோர்கள், குழந்தைகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த அசாதாரண காலநிலைத் தாக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட “இலங்கையின் அனர்த்த முகாமைத்து செயற்பாடு” கள் தொடர்பாக பலத்த விமர்சனங்கள் தோன்றியிருக்கிறது. இலங்கையில் அதிகரித்து வரும் இயற்கை அனர்த்தத்தினைத் தொடர்ந்து, அதனை முகாமை செய்யவென அமைச்சும், திணைக்களமும் உருவாக்கப்பட்டிருந்த போதும், இன்றைய அனர்த்த நிலையில் மீட்புப் பணிகளும் மற்றும் நிவாரணப் பணிகளும் மிக மந்த கதியிலேயே நடைபெற்றது எனப் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருமளவில் பாதிப்புகள் நிகழ்ந்திருந்த போதும், வளிமண்டலவியல் திணைக்களம் இவ் அசாதாரண காலநிலை மேலும் தொடரும் என அறிவித்திருந்த போதும் உரியவர்கள் இது குறித்து அக்கறை காட்டவில்லை. “நிவாரணம் போதுமானளவு வழங்கப்படுகிறது” என்ற அறிவுறுத்தலுடன் விடயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஆயினும் பாதிப்புக்கள் தொடர்பாக வெளியான செய்திகள், நிலைமைய அரசாங்க நிவாரணத்தினால் மட்டும் சமாளிக்க முடியாது என்ற உண்மையை வெளிச்சமாக்கியது.
பொது அமைப்பக்கள் உதவிகளை வழங்குமாறு கோரிக்கைகள் கிழக்கிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளன. உதவிகளை வழங்குமாறு பொதுமக்களிடம் அமைச்சரே கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகள் மூலம் நிலைமையின் தாக்கத்தினை அறிந்த சமூக அமைப்புக்கள் தற்போது உதவிகளை திரட்டும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. சர்வசேத அமைப்புகள் சிலவும் உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளன.
முதலில் இந்த நிலைமையை “அனர்த்த நிலைமை”யாகப் பிரகடனம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. சமைத்த உணவு வழங்கப்படுவதிலும் காலதாமதம் காட்டப்பட்டது. அதற்கப்பாலான உதவிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முழுமையாக இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. பால்மா, மருந்தப் பொருட்கள், குடிநீர் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள கிராமங்கள் வெள்ளதினால் சூழப்பட்டு தொடர்புகள் துண்டிக்கட்ட நிலையில் காணப்படுகிறது. மீட்புப் பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை. நோய்த்தாக்கம் குறித்தும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சில இடங்களிலிருந்து அரச நிவாரணங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுவதுடன் உதவிகளுக்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளுக்கான நிவாரணங்கள் என்ன? என்பதிலும் சந்தேகநிலையே காணப்படுகிறது. பெருமளவான விளை நிலங்கள் அழிவுற்றுள்ளன. தொழில் பாதிப்பக்கள் ஏற்பட்டுள்ளன. மந்தைகள் அழிந்துள்ளன. வீடுகள் அழிவுற்றுள்ளன. பெருமளவு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்துள்ளன. பொது நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சுனாமி அழிவு நிவாரணங்கள் முழுமை பெறாத நிலை காணப்படுகிறது. யுத்த அழிவுகள் தொடர்பான புனர்வாழ்வளிப்பு பணிகள் பெருமளவில் பூர்த்தியாக்கப்படாமலுள்ளன. இந்த நிலையில் இந்த இயற்கை அனர்த்தப் பாதிப்புகள் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வினை மேலும் மோசமானதொரு நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவுகள் இலங்கையின் பொருளாதாரத்திலும் கனதியான பாதிப்பினையே ஏற்படுத்தும்.
பெரும் பாதிப்புக்கள் கிழக்கு தமிழ் – முஸ்லிம் மத்தியில் ஏற்பட்டிருக்கிற நிலையில், இனவாத நோக்கில் நிவாரணப்பணிகள்-புனர்வாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது இரண்டு நாட்களாக மழை சற்றுக் குறைந்திருக்கிறது. மழை குறைவடையும் எனவும் ஆனால் சீரற்ற காலநிலையும் கடுங்குளிரும் பெப்ரவரி மாத நடுப்பகுதி வரை நிலவும் எனவும் வளிமண்டலத் திணைக்களம் எதிர்வு கூறியிருக்கிறது. எனவே நிலைமைகள் மோசமானவையாக இருக்கப்போகின்றன.
கிழக்கின் தற்போதைய நிலைமைகள், வழமையான நிவாரணம் வழங்கும் பணிகளுக்கூடாக மட்டும் இந்த அழிவுகளிலிருந்து மீண்டு விட முடியாது என்பதனையே எடுத்துக்காட்டுகின்றன.








Not “லா நினோ”… it is called La Niña (counterpart of El Niño ). When writing about “these kind of things” pay more attention about the terms used. Nothing is established…. just speculation, so don’t try correlate with La Niña based on speculations.