கருணா கிழக்கில் தனக்கென உருவாக்கியிருந்த அதிகார மையத்திற்கெனத் தனியான ஊடகம் ஒன்று அவசியம் என அவரைச்சார்ந்த பலரும் வற்புறுத்தியிருந்தனர். அச்சு ஊடகமொன்றும் இணையமொன்றும் ஆரம்பிக்கப்பட வெண்டுமென என அவரின் ஆதரவாளர்களும் ஆலோசகர்களும் விரும்பியதன் விளைவாக மீனகம் என்ற இணையமும் (தற்போது இயங்கும் மீனகம் இணையம் அல்ல) தமிழ் அலை என்ற பத்திரிகையும் அன்று உருவாகின.
இவ்விடத்தில் கருணாவின் அதிகார மையத்துடன் தராக்கி என அழைக்கப்பட்ட பிரபல்யமான ஊடகவியலாளரான அமரர் தர்மரட்ணம் சிவராம் அவர்கள் கொண்டிருந்த வெளி உலகுக்குத் தெரியாத உறவு பற்றிச் சொல்லவேண்டியது எனது வரலாற்றுக் கடமையாகிறது.
ஊடகத்தளத்தில் தனது எழுத்துக்களில் ஒன்றுபட்ட தமிழ்த் தேசியத்தைத் தூக்கிப்பிடித்திருந்த அமரர் திரு சிவராம் அவர்கள் நடைமுறையில் எவ்வாறான தளம்பலைக் கொண்டிருந்தார் என்பதை நான் சொல்லப்போகும் விடயங்கள் தெளிவுபடுத்தும்.
தமிழ்த்தேசியம் தனது விடுதலைக்காகப் போராடுவது என்பது தனக்குள்ளேயுள்ள பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகப் போராடுவதையும் உள்ளடக்கும் என்பது பல ஊடகவியலாளர்களுக்கும் புத்திசீவிகளுக்கும் தெரியாமற்போன அல்லது தெரிந்தும் சுயநலத்தால் அதிகாரங்களுடன் இணைந்து சென்ற துயரத்தை எமது வரலாற்றிலும் காணநேர்ந்தது துரதிஷ்டம். இதற்குச் சிவராம் அவர்களும் விதிவிலக்கல்ல.
விடுதலைப் புலிகளிடம் மத்தியில் குவிந்திருந்த அதிகாரமும் பிரதேசவாதம் குறித்த விழிப்புணர்வின்மையும் கருணா கிழக்கில் தனது தற்காலிக சாம்ராஜ்யத்தைக் கட்டுவதற்குக் களமமைத்துக் கொடுத்திருந்தன. இன்னும் துயரம் என்னவெனில் கருணாவின் சாம்ராஜ்யத்தை தற்போது இலங்கை அரசு முழுவதுமாக எடுத்துக்கொண்டும் விட்டது.
இலங்கைச் சமூகங்களுள் பிரதேச வாதம் நிலவுவது வெள்ளிடை மலை. ஆனால் தமிழ் சமூகத்திற்கிருந்த வாய்ப்பான சூழ்நிலை என்னவெனில் அது விடுதலைக்காக எழுச்சியடைந்த போது பிரதேசவாதம் உட்பட அனைத்துப் பிற்போக்குத் தனங்களுக்கும் எதிராக கொள்கைத் தெளிவுகளையோ ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களையோ வைத்து மக்களை அறிவூட்டி இருக்க முடியுமென்பதுதான். ஆனால் துரதிஷ்டவசமாக இத்தகைய நிறுவனமயப்பட்ட முன்னெடுப்புக்கள் கடந்த மூன்று தசாப்தத்தில் நிகழவில்லை போரைத்தவிர.
2004 மார்ச் மாதம் 3ஆம் திகதி கருணாபுலிகள் அமைப்பில் இருந்து வெளியேறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அதற்கான அறிக்கையை அப்போதைய கிழக்கின் அரசியற்துறைப் பொறுப்பாளர் கரிகாலன் கையொப்பம் இட்டு வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு தனது முழமையான பங்களிப்பை திரு சிவராம் அவர்கள் வழங்கியிருந்தார் என்பது வெறும் வதந்தியன்று என்பதைக் கீழ் வரும் சம்பவத்தை வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
இந்த அறிக்கை வெளிவருவதற்கு முந்திய இரவு 10க்கும் 10.30ற்கும் இடையில் சிவராம் என்னுடைய 0777356036 என்ற டயலொக் கையடக்கத் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு ‘கருணா புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. அதற்கான அறிக்கையும் தயாராகிவிட்டது. அதனை நீ நிகழ்ச்சிகளை இடையீடு செய்து வரும் முக்கிய செய்தியாக (டீசநயமiபெ நேறள) சூரியனில் ஒலிபரப்ப வேண்டும்’. எனக்கேட்டார். உடனே நான் என்னால் அவ்வாறு செய்ய முடியாது எனக் கூறினேன். புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக என்னுடன் தொடர்புகொண்டு இதனை அறிவித்தால் அதனை வெளியிட முடியும் எனவும் இது பாரிய சிக்கலுக்குரிய விடயம் இதனை முதலில் தமிழ் ஊடகமொன்றில் வெளியிடுவது மேலும் சிக்கலை உருவாக்கும் எனச் சொன்னேன். உடனே அவர் நீயும் அச்சடித்த யாழ்ப்பாணத்தான் (ரிப்பிக்கல் யாழ்ப்பாணி) போலவே இருக்கிறாய் என விமர்சித்தார். இருவருக்கும் இடையில் தொடர்ந்த வாக்குவாதத்தின் பின் ‘நீங்கள் இந்தச் செய்தியை உங்களது தமிழ்நெற்றில் வெளியிடுங்கள் அதனைக் கோடிட்டு நான் இச்செய்தியை ஒலிபரப்புகிறேன் எனக் கூறினேன். ‘இல்லை அது முடியாத காரியம் எனச் சிவராம் கூறினார். அப்படியாயின் இதுவும் முடியாத காரியம் என்றேன் நான். சிவராமோ ‘நீ எதற்குப்பயம் கொள்கிறாய் நாங்கள் தற்சமயம் தமிழ் அலை பத்திரிகைக் காரியாலத்தில் நிற்கிறோம். கருணா உள்ளிட்டவர்களும் கிழக்கின் ஊடகவியலாளர்களும் கூடவே நிற்கிறோம். அதனால் நீ பயப்படத் தேவையில்லை எனக் கூறினார். எனினும் நான் உடன்படவில்லை. பின்னர் இதுகுறித்து உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கின் ஊடகவியலாளர்கள் சிலரைத் நான் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் உண்மையிலும் தாங்கள் அன்று அங்கு இருந்திருக்கவில்லை எனவே கூறி இருந்தனர்.
ஓஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை சிவராம்-கருணா தொடர்பு தொடர்பாகத் தெளிவான சித்திரமொன்றைத் தந்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது சிவராமும் பிரசன்னமாகியிருந்தார். பேச்சு வார்த்தை தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காகவே வந்ததாக கூறிய சிவராம் கருணாவை விசேடமாகச் சந்திப்பதற்காகவே ஒஸ்லோ வந்திருந்தார். அவ்வாறு வந்த சிவராம் கருணாவுடன் தனியாகப் பல தடவைகள் பேசியிருந்ததனையும் ஊடகவியலாளர்களூடாக அறிந்திருந்தேன். ஒருதடவை இருவரும் உரையாடிக் கொண்டு இருந்தததை நேரிடையாகவும் கண்டிருந்தேன். இந்த சந்திப்புகளின் போது கிழக்கிற்கான முக்கியமாகக் கிழக்குப் புலிகளுக்கான தனியான ஊடகம் அவசியம் என்பதனை கருணாவுக்கு சிவராம் வலியுறுத்தி இருந்தார். அது குறித்து என்னிடம் ஒருமுறை பேசும் போதும் ‘இவன் மொக்கனுக்கு நான் சொல்லித்தான் சில விடயங்கள் இப்போ புரிகிறது’ எனக் கூறியதும் என் நினைவில் இருக்கிறது. அந்த வகையில் கருணா தரப்பினால் முன்னர் நடத்தப்பட்ட மீனகம் இணையம் மற்றும் தமிழ் அலை பத்திரிகையின் ஆரம்பம் என்பவற்றின் பின்னணியில் நின்றவர்களில் அமரர் சிவராம் முக்கியமானவர்.
2001 ஆம் ஆண்டில் ஜெயசிக்குறுவிற்குப் பின் தனது போராளிகளுடன் நடந்தே மட்டக்களப்புக்குத் திரும்பிய கருணாவுக்கு விடுதலைப் புலிகளின் தலைமையுடன் சில முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்ததனை திரு சிவராம் அவர்கள் நன்கு அறிந்தேயிருந்தார்.
2002ல் யுத்த நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டபோது நீண்ட இடை வெளிக்குப் பிற்பாடு புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரிடையாகக் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கானா மகாநாட்டில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். உங்கள் போராட்ட வரலாற்றில் நீங்கள் எதிர் கொண்ட சிக்கலான சந்தர்ப்பம் அல்லது சவால் எது என அவர் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கேட்டிருந்தார். உண்மையில் இதற்குப் பதில், இந்திய அமைதிப்படைக் காலத்தில் புலிகளால் செய்யப்பட நித்திகைக் குள முறியடிப்பு என்பதாக இருக்கும் என அந்தப் பத்திரிகையாளர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்தியப் பத்திரிகையாளரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர் கொண்டு முறியடிததனையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிலாகித்திருந்தார். இதன் போது ஜெயசிக்குறு நடவடிக்கையை வெற்றிகரமாக எதிர்கொண்ட கருணாவையும் அருகில் இருத்தி அவரையும் புகழ்ந்திருந்தார். இது குறித்து சிவராம் நோத் ஈஸ்ற் கரால்ட்டில் எழுதிய கட்டுரை ஒன்று கருணாவை சிவராம் அப்போதே குறி வைத்து விட்டதனை புலப்படுத்தியிருந்தது. புலிகளின் தலைவர் இவ்வாறு கூறியமை கிழக்கு மக்களையும் கருணாவையும் கௌரவப்படுத்தவே என்பதாக கருணாவை மெச்சி சிவராம் அக்கட்டுரையை வரைந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மறைமுகமாகக் கருணாவை நாயகனாக கிழக்கின் உன்னத வீரனாக சித்தரிக்கும் வகையில் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை நோத்ஈஸ்ற் கரால்டில் சிவராம் எழுதியிருந்தார்.
2002ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் கருணாவால் ஏற்பாடு செய்யப்பட்ட புலிகளின் உயர் மட்ட உறுப்பினர்களுக்கான கருத்துப் பட்டறையின் பிரதான கருத்தாளராக விளங்கிய சிவராம் கிழக்கின் தனித்துவம் பற்றியும் புலிகளில் கிழக்கு போராளிகளின் இன்றியமையாமை பற்றியும் வலியுறுத்திப் பேசியிருந்ததனைக் கிழக்கின் ஊடகவியலாளர்கள் அறிவர்.
தவிரவும் வடக்கின் மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் கிழக்கின் மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்துடன் எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது என்ற ஒரு ஆய்வினையும் கருணாவிடம் சிவராம் வழங்கியிருந்ததாக பின்னர் அறிந்து கொண்டேன்.
இது போல் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஒரு முறை கிழக்கிற்கு விஜயம் செய்த போது அங்கு இடம்பெற்ற சந்திப்பில் சிவராம் கிழக்கு நிலமைகள் குறித்தும் கிழக்கு குறித்து புலிகளின் பாராமுகம் பற்றியும், கிழக்கின் தனித்துவம் பற்றியும் கூறிக் கடுமையாக விமர்சித்து இருந்தார். பதிலுக்கு சிவராம் குறித்து தமிழ்ச் செல்வன் அவர்கள் கடுமையான அதிருப்தி அடைந்து இருந்தார் எனவும் அந்தக் கருத்துப் பட்டறையில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் கூறி இருந்தனர்.
இங்கு ஞாபகத்திற்கு வரும் பிறிதொரு விடயத்தையும் பதிவிட வேண்டும். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் கருணாவின் கொலைப் பட்டியலில் சிவராம் இருந்தார். இது தொடர்பாக ஒருமுறை சிவராம் என் நண்பர் ஒருவருடன் உரையாடும் போது இந்திய அமைதிப்படைக் காலத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றைப் பற்றிக் கூறியிருந்தார். அக்காலத்தில் கருணா குழுவினரால் புளொட்டின் மத்திய குழு உறுப்பினரும் படைத்துறைச் செயலருமான கண்ணன் எனப்படும் ஜோதீஸ்வரன், புளொட்டின் மத்திய குழு உறுப்பினரும் அரசியற் துறைச் செயலாளருமான வாசுதேவா ஆகியோர் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்டவர்கள் பேச்சுவார்தைக்கென அழைக்கப்பட்டுக் குண்டு வைத்தும் சுட்டும் கொல்லப்பட்டதாகவும் அக்குறித்த பேச்சுவார்த்தையில் சிவராமும் கலந்து கொள்ளக்கூடுமென எதிர்பார்த்திருந்த கருணா அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பார்த்த பின்னர் ‘சிவராம் எங்கே’ எனக் கேட்டிருந்ததாகவும் கூறிய சிவராம் ‘இவனெல்லாம் மனிசனா’ என அன்று கருணா குறித்துக் கடும் கோபத்தைக் கொண்டிருந்தார்.
இதற்கான பழிவாங்கலாக புலிகளை உடைக்கச் சிவராம் முயன்றிருப்பாரா எனச் சிவராமுக்கும் எனக்கும் நண்பரான ஒருவர் என்னிடம் கேட்டார்.
அல்லது கருணாவுக்குப் பிரதேசவாதத்தை ஊட்டி அவரைப்புலிகளிடம் இருந்து உடைத்துப் புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் வேறு சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் சிவராம் செயற்பட்டாரா?
இவற்றுக்கான பதிலைத் தேடுவதற்கு இன்னும் சில அனுபவங்களூடாகப் பயணிக்க விரும்புகிறேன்.
காரணம் புளொட் இயக்கம் கோலோச்சிய காலத்தில் அவ்வியக்கத்தில் இருந்த சிவராம் அதன் கிழக்கு பொறுப்பாளர்களுக்கு கிழக்கு மையப்பட்ட சிந்தனைகளை ஊட்டி கிழக்கில் இருந்து தலைமைகள் உருவாக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் 80களின் நடுப்பகுதியிலேயே புளோட் அமைப்பினுள் ‘கிழக்கு புளொட்’ என்ற கருத்தை முன்னிலைப்படுத்த முயன்று தோல்வி கண்டவர். அதனால் அவரை கிழக்கிஸ்த்தான் என நண்பர்கள் கேலி செய்த சந்தர்ப்பங்களும் உண்டு.
நல்ல ஆங்கில அறிவும் செறிந்த தமிழ் இலக்கிய அறிவும் கொண்டு ஒரு புத்துஜீவிக்குரிய பண்புகளை வெளிப்படுத்திய சிவராம் அவர்கள் ஒரு போராளிக்குரிய கடின உழைப்பினூடாக மெலெழுந்து அதிகார நிலைகளுக்கு வரக்கூடிய இயல்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை புளொட் அமைப்பில் இருந்தவர்கள் அறிவர்.
80களின் ஆரம்பத்தில் புளொட்டின் அதிகார மையத்தையும் தலைவர் உமா மகேஸ்வரனையும் விரைவாக நெருங்க முனைந்த போதும் சிவராம் அவர்களால் புளோட் இயக்கம் பலவீனப்பட்ட 84களின் பிற்பகுதியிலேயே உமாமகேஸ்வரனின் நம்பிக்கையை பெற முடிந்தது. இதன் விளைவாக 1990களில் அவ்வியக்கத்தின் அரசியல் கட்சியின் செயலாளரானார். 1999ன் இறுதிப் பகுதி புளொட்டின் உறுப்பினராக அதன் அரசியல் கட்சியின் செயலாளராக சிவராம் விளங்கியிருந்தார்.
ஆயினும் விடுதலைப்புலிகள் எழுச்சியடைந்தது வந்த காலத்தில் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் தேசியம் என்னும் எண்ணக்கருவின் அடிப்படையில் அவர் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்த இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் உள்ளிட்ட கட்டுரைகள் காரணமாக பிரபல்யமானார். தமிழ் ஈழப்பிரதேசங்களின் புவியியல் அமைப்பு பற்றிய தெளிவான அறிவு மற்றும் இராணுவ விடையங்களில் பரந்த வாசிப்பின் மூலம் பெற்றுக்கொன்ட நுண்ணறிவு காரணமாக அவரது கட்டுரைகள் வாசிப்பவர்களை ஈர்க்கக் கூடியனவாக இருந்தன. இந்த வகையில் சிவராம் அவர்கள் தனது கட்டுரைகள் மூலம் புலிகளின் முக்கியஸ்த்தர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
முன்னர் புலிகளை விமர்சித்த பல புத்திஜீவிகள் ஆய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் 2000 ஆண்டின் பின் புலிகள் எழுச்சி அடைந்திருந்த காலத்தில் அந்த அலையினுள் ஈர்க்கப்படிருந்தார்கள். அதற்குச் சிவராமும் விதிவிலக்கல்ல.
யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு அமைதி நிலவிய அந்தக்காலத்தில் முன்னர் புலிகளுடன் முரண்பட்டு இருந்த அல்லது அவர்களின் விரும்பப்படாதவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பலருக்கு (நான் உட்பட) வன்னிக்குச் சென்று அவர்களுடன் பழகுவதற்கான உரையாடுவதற்கான சூழல் உருவாகிற்று.
இந்தச் சூழலைப் புரிந்துகொண்ட சிவராம் விடுதலைப் புலிகளை இன்னும் நெருங்க முயற்சித்திருந்தார். இயக்கத்தில் சர்வதேசப்பரிட்சயம் கொண்டிருந்த புத்திசீவிகளுக்கு நிலவிய வெற்றிடத்தையும் அவர் அறிந்தே இருந்தார். தனது ஆங்கிலக் கட்டுரைகள் மூலம் இலங்கையில் இருந்த அனைத்துலக இராசதந்திரிகளிடத்தும் அவர் பிரபல்யம் பெற்றிருந்தார்.
இன்றைக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்கிற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கை வகித்த சிவராம் அவர்கள் தமிழ் தேசியக்கூடமைப்பின் மூலம் புலிகளுக்கு சட்ட ரீதியான ஒரு குரலைக் கொழும்பில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். வன்னிநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் நெருக்கமான உறவை பேணிக்கொண்ட சிவராம் புளொட்டுடன் கடைசிக் காலத்தில் இருந்த சில முரண்பாடுகளால் புளொட்டைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணையவிடாமல் பாரத்துக்கொண்டார் எனப்பல நண்பர்கள் என்னிடம் கூறியிருந்தனர். புலிகளும் புளொட் தொடர்பாக ஆழமான வெறுப்புணர்வைக் கொடிருந்ததை சிவராம் கணக்கிட்டிருக்கவும் கூடும். ஒரு கட்டத்தில் ஊடகவியலாளர் நடேசனூடாக வீரகேசரியில் அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் சிவராம் கடுமையாக விமர்சித்தும் இருந்தார். அத்துடன் கிழக்கில் புலிகளின் நன்மதிப்பைப் பெற்றவரும் ஆங்கிலப் புலமை மற்றும் ஊடக அனுபவங்களோடு கூடிய புத்திஜீவித்தனத்தையும் அரசியல் ஆளுமையையும் கொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை கடுமையாக விமர்சித்தும் புலிகளிடத்தில் நன்மதிப்பை குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருந்hர். இவற்றையெல்லாம் அவதானிக்கும் போது சிவராம் அவர்கள் இலக்கு வைத்து நகர்ந்த புள்ளி ஊகிப்பதற்குக் கடினமானதல்ல…
ஆனாலும் வழமை போலவே சிவராம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அந்தஸ்த்து புலிகளிடமும் கிடைக்கவில்லை. புலிகள் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களைத்தவிர எனைய எல்லாப் புதிசீவிகளையும் தமது அமைப்பிற்கு வெளியிலேயே வைத்திருந்தனர். அமரர் அன்ரன் பாலசிங்கம் அவர்களைக் கூட பிறகாலதில் ஒதுக்கி விட்டார்கள் என்ற விமர்சனமும் இப்போது வெளிவருகிறது. எனவே சிவராம் அவர்கள் எவ்வளவு முயன்றபோதும் புலிகள் அவரைத் தமிழ்த் தேசிய ஆதரவாளர், கட்டுரையாளர், ஆய்வாளர், ஊடகவியலாளர் என்ற நிலையிலேயே வைத்திருந்தனர். இது குறித்து சிவராம் அதிருப்தியும் எரிச்சலும் அடைந்திருந்ததை அவருடனான பல உரையாடல்களின் போது உணர முடிந்திருந்தது.
எனினும் விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது கருணாவுக்குத் தேவைப்பட கொள்கை ரீதியான நியாயப்படுத்தலை வழங்கக் கூடிய அறிவுஜீவியாக விளங்கிய சிவராமால் கருணாவை இலகுவாக நெருங்க முடிந்திருந்தது. நான் முன்பே கூறிய கருணாவை முன்னிலைப்படுத்தி நோர்த் ஈஸ்ற் ஹரால்ட்டில் அவர் எழுதிய கட்டுரைகளும் உதவியிருக்கக் கூடும்.
கிழக்கில் கருணாவை முன்னிலைப்படுத்தி கிழக்கின் தலைவராக அவரை உருவாக்கி அவரின் ஆலோசகராக தான் மாறும் எண்ணத்தை சிவராம் அவர்கள் கொண்டிருந்தார் என்பதைப் பிறிதொரு இடத்தில் மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். அதாவது கருணாவின் பிளவு 2004 மார்ச் 3ஆம் திகதி இடம்பெற்ற போது பலரும் பல்வேறு சமரச முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் சிவராம் தொலைபேசியில் என்னுடன் உரையாடும் போது புலிகளில் இருந்து கருணா பிளவுபட்டுச் செல்லவில்லை எனவும் சில நிபந்தனைகளை விதித்து அவற்றைப் புலிகளின் தலைவர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் பிரபாகரனைக் கருணா தனது தலைவராகவும் ஏற்றுக் கொள்கிறார் எனவும் கூறினார். குறிப்பாக கிழக்கில் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் கருணாவின் தலைமையின் கீழ் தனித்தே இடம்பெறும் நிதிக் கட்டுப்பாடு, ஆட்சேர்ப்பு, உள்ளிட்ட விடயங்களில் கிழக்குப் புலிகள் சுயாதீனமாகவே இயங்குவர்; ஆயுத விநியோகம் வன்னியில் இருந்து கிடைக்கப் பெறவேண்டும்; புலிகளின் புலனாய்வுத்துறை, காவற்துறை அரசியல் துறை என எந்தத் துறைகளும் கிழக்குப் புலிகளின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது. தலைவர் பிரபாகனுக்கு மட்டுமே கருணா கிழக்குப்புலிகளின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பார். புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான், நிதிப்பொறுப்பாளர் புகழேந்தி, காவற்துறைப் பொறுப்பாளர் நடசேன் ஆகியோரை புலிகள் அமைப்பின் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை வன்னித் தலைமைக்கு முன்வைக்க உள்ளோம் அதற்கான அறிக்கைகள் தயாராகி விட்டன. எனவும் சிவராம் கூறியிருந்தார்.
‘சில நிபந்தனைகளை விதித்து நாம் பிளவை தவிர்க்க முயல்கிறோம்’ என் அவர் கூறியதிலிருந்து கருணாவின் அதிகார மையத்தில் அவரது வகிபாகமும் பதவியும் தெளிவுபட்டிருந்தது. இது புலிகளின் அதிகார மையத்தில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கொண்டிருந்த வகிபாகத்திற்கும் பதவிக்கும் சமனானது. அன்றிருந்த சூழலில் புலிகளின் தலமை இந்த நிபந்தனைகளுக்கு இணங்கும் எனச் சிவராம் உள்ளிட்டவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஏகத்துவத்தலைமைக் கோட்பாட்டின் முன்னே இவை சுக்குநூறாகிப் போகும் என்பது கால்நூற்றாண்டாக அவரது தலைமையின் கீழ் செயற்பட்ட கருணாவுக்கோ புவியியல் சார் இராணுவ ஆய்வாளர் சிவராமுக்கோ புரியாமற்போனது அதிசயம் தான். இந்த நிலையில் புலிகளின் தலைமை கருணாவுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கை மூலம் புலிகளின் கை ஓங்கிய காரணத்தால் கருணா பிரிந்த மூன்றே நாட்களில் சிவராம் அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டார். அவருடன் சேர்ந்து முன்பு கருணாவை ஆதரித்த தற்போதய தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் சிலரும் தமது ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டனர்.
இந்த நிலையில் சிவராம் அவர்கள் புலிகளால் வன்னிக்கு அழைக்கப்பட்டார். இந்த அழைப்பினால் அச்சமடந்த சிவராம் அவர்கள் சில நாட்கள் குழப்பத்திலிருந்தார். எனினும் வவுனியா சென்று அங்கிருந்து புலிகளிடம் சமரசம் செய்த பின்னர் வன்னி சென்றார். அங்கு விடுதலைப் புலிகள் விடுத்த ‘வேண்டுகோளை’ ஏற்று கருணாவுக்கு எதிரான காரசாரமான கடிதமொன்றை வீரகேசரிக்கு எழுதினார். அக்கடிதம் வீரகேசரியில் வெளிவரமுன்பும் சிவராம் மட்டக்களப்புக்குச் சென்று சேர முன்பும் கிழக்கில் துண்டுப்பிரசுரமாக புலிகளால் வெளியிடப்பட்டுவிட்டதாக சிவராம் தனது சில நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.
இங்கே முக்கியமாகக் இரு கேள்விகள் எழுகின்றன.
கருணாவூடாகச் சிவராமும் கிழக்கின் முக்கியஸ்தர்களும் புலிகளின் தலைமையிடம் வைத்த கோரிக்கைகள் புலிகளின் வன்னி மையப்பட்ட அதிகாரத்திற்கெதிரான கோரிக்கைகள்… அதிகாரத்தை கிழக்கிற்குப் பகிரக் கோரிய அரசியற்கோரிக்கைகள்….
ஆனால் இந்த அரசியற் கோரிக்கைகளை எத்தகைய தலைவரினூடாக (கருணா) வைக்கிறோம் என்ற தெளிவு இந்த கோரிக்கைகளை வைத்தவர்களிடம் இருக்கவில்லையா அல்லது தங்களது நலன்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தனரா? என்பது முதலாவது கேள்வி.
கிழக்கின் முக்கியத்துவம் குறித்தும் கிழக்குப்பற்றிய புலிகளின் பாராமுகம் குறித்தும் சிவராம் விமர்சித்த போது அந்த விமர்சனங்களில் உள்ள நியாயம் குறித்து ஆராயாமல் சிவராம் மீது தமிழ் செல்வன் அதிருப்தி அடைந்தது போல கருணாவின் பிளவின் போது முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அரசியற் பரிமாணத்தை உணராதிருந்தனரா?
இரண்டாவது கேள்விக்கான பதில் கடினமானதல்ல.
விடுதலைப்புலிகள் ஏக தலைமைத்துவக் கோட்பாடும், நேரிடையாகவும் மறைமுகமாகவும் தொழிற்பட்ட பிரதேச வாதம் என்பன காரணமாக பிரச்சனையின் அரசியற் பரிமாணங்களை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
முதலாவது கேள்விக்கான பதிலும் மேலே இக்கட்டுரையில் சிவராம் புலிகளைப் பழிவாங்கச் செயற்பட்டாரா அல்லது வேறு சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டாரா என்ற கேள்விக்கும் பதில் கீழே உள்ளது.
கிழக்கின் அதிகார மையத்தின் ஆலோசகராகும் ஆசையில் சிவராம் அவர்களும், கருணாவின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கலாம் என்ற ஆசையில் கிழக்கின் சமூகப்பிரதிநிதிகளும், கிழக்கின் பொறுப்பாளர்களாக இருந்த வடக்குப் புலிகள் வன்னிக்குத் திருப்பி அழைக்கப்பட்டால் அவ்விடங்களைக் கைப்பற்றலாம் என்ற ஆசையில் பல மூத்த போராளிகளும் பகற்கனவில் மிதந்து கொண்டிருந்ததனால் கருணா ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தினதும் இராணுவத்தினரதும் மாய வலைக்குள் விழுந்து விட்டிருந்தததை உணரவில்லை. கருணா காட்டு வாழ்வுக்கும் போராட்ட வாழ்வுக்கும் விடை கொடுக்கும் நிலையில் இருந்ததை அவர்கள் அறியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் கருணாவுக்கும் இடையில் இருந்த முரண்பாட்டுக்கு பிரதேச வாத முலாத்தை தமது சொந்த நலன்கள் காரணமாக பூச முற்பட்ட இவர்கள் அந்த நெருப்புக்கு எண்ணை வார்ப்பதிலேயே கரிசனையாக இருந்தனரே தவிர கருணா அரசாங்கத்துடனும் இராணுவத் தரப்புடனும் கொண்டிருந்த நெருக்கத்தை உணரவில்லை. ஆக புலிகளின் தலைமையிடம் அதிகாரப்பகிர்வைக் கோரிய இவர்களும் தாம் நேசித்த ஒட்டுமொத்த தமிழ்தேசியமும் பலவீனப்படுவதை உணரவில்லை..
ஆனாலும் வன்னியில் களத்தில் இருந்த ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிழக்கு போராளிகளுடன் நடையாகவே கிழக்கு நோக்கிச் செல்லும்படி வன்னியில் அப்பொழுதிருந்த கிழக்குத் தலைவர்களான தயாமோகன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரிடம் கருணா கூறிய போது அவர்களுட் பலரும் திகைப்படைந்தனர். காரணம் ஆயுதங்களை நிற்கும் இடங்களிலேயே போட்டுவிட்டு வரும்படியும் தேவை ஏற்படும் பட்சத்தில் இராணுவத்திடம் சரணடையும் படியும் இராணுவம் அவர்களை அழைத்து வந்து கிழக்கில் விடும் எனவும் கருணா தெரிவித்திருந்தார். அத்துடன் இப்பொழுது கிழக்கில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இராணுவத் தளபதியிடமே இவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான பொறுப்பையும் கருணா ஒப்படைத்திருந்தார். அந்தக்கணத்தில் தான் கருணா இராணுவத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறார் என்பது பலருக்கும் புலப்பட்டது. இந்தத் தகவலை புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுக்குத் தயாமோகனும் ஜெனார்த்தனனும் வழங்கிய பின்னர் தமிழ்ச் செல்வன் கிழக்கிற்கு சென்று சமரசம் செய்வதற்கான திட்டம் கைவிடப்பட்டுக் கருணா மீதான இராணுவ நடவடிக்கைகளை புலிகள் ஆரம்பித்திருந்தனர்.
இவ்வாறு புலிகள் கருணாவுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்ததும். புலிகளின் தேசியப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நீலன், மாவை வேந்தன், சத்தியசீலன், இளங்கோ, போன்ற மிகச் சிலரைத் தவிர ரெஜினோல்ட் தலைமையிலான புலனாய்வாளர்கள் அனைவரும் கருணாவுடன் இணைந்தனர். நெல்லியடியைச் சேர்ந்த விடுதலைப்புலிகளின் முக்கிய புலனாய்வுப் பிரிவு உறுப்பினரான அற்புதம் மாஸ்ரர் என்பவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களும், புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்த்தரான நீலனைக் கொன்றதும் கருணா ஆதரவுப் புலனாய்வுப்பிரிவே என பின்னர் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் கருணாவின் பிளவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் ஊடகவியலாளர் மகாநாட்டிற்கு வன்னியில் இருந்து ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கிழக்கில் இருந்தும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அவ்வூடகவியலாளர் மகாநாட்டில் நிகழ்ந்தவைகள் என்ன அதன் பின் தொடர்ந்தவைகள் என்ன என்பது குறித்து அடுத்த தொடரில்…..
(மௌனம் கலைகிறது என்ற தலைப்பில் நடராஜா குருபரன் குளோபல் தமிழ் செய்திகள் என்ற இணையத்தில் எழுதிய தொடரிலிருந்து…)
ஊடகவியலாளர் தர்மரத்னம் சிவராம் (தராகி) படுகொலையும், இலங்கையின் நிலைப்பாடும் !:எம்.ரிஷான் ஷெரீப்
ஈழ வரலாற்றிக்கான ஏக உரிமை சபாலிங்கத்தின் மரணம் : சிவராம் தராக்கி
அசிங்க அரசியல் நாயகர்கள் தமிழர்கள் தலைவர்களாக.
னல்ல கட்டுரை புதிய விடயஙக்லை தந்துள்ளிர்கல், பிரதேசவதம், இலஙகை தமிலர்கலின், உரிமை சொத்து, அதன் விலைவுகல் பாரதுரம், என்பதனை, மலையக தமிழன் என்ர வகையில்நான் அறிவென்
I knew him indirectly. Though I have met him once or twice I don’t think I talked to him. He had 50% Jaffna blood, mom family was from Pt Pedro but settled in BCO. Grandpa was a member of the legislative council ie dad’s dad and they were BCO folks from Kallady/Kallar families. Obviously they had high ambitions in the family that he’ll make it to the political elite of SL. Not an exception from the likes of Nadesans, Thiruchelvams et. al. Personally I feel bad that we lost a great talented man from BCO who could have reached great heights. I also have to admire his braveness to stay put in SL though he had all the means to escape to the West. Its very hard to tell what he had in his mind but one day we’ll know when the family opens up.
இவ்வளவு ஆண்டுகள் கழித்து சிவராம் பற்றி இப்படி இழிவாக எழுத வேண்டிய காரணம் என்ன? அல்லது அவசியம் என்ன? கருணாவின் அதிகார பலத்தை அறிந்தவர்கள் மட்டக்களப்பில் இருந்து கொண்டு அவரை எதிர்க்கத் துணிந்திருக்க மாட்டார்கள். சிவாராம் பிரதேசவாதத்தை ஆதரித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கட்டுரையாளர் எழுதுகிறபடி பிரதேசவாதம் கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. ஒரு காலத்தில் இருந்து பின்னர் அது மறைந்து போயிற்று. தனது காட்டிக் கொடுப்பை மறைக்கவே கருணா பிரதேச வாதத்தை கையில் எடுத்தார். ஆனால் அது பலிக்கவில்லை. வி.புலிகள் கிழக்கில் கருணாவுக்கு எதிராக இராணுவ படைநடவடிக்கை எடுத்த போது தான் ஒரு வீராதி வீரன் என்று படம் காட்டிக் கொண்டிருந்த கருணாவுக்கு ஓடித்தப்புவதை விட வேறு வழியிருக்கவில்லை. கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து போவதை சிவராம் விரும்பவில்லை. அதனால்தான் கருணாவை மீண்டும் இணைக்க நினைத்தார். அவர் மரணிப்பதற்கு முன்னர் வன்னிக்குப் போயிருந்தார். அங்கிருந்து என்னிடம் தொடர்புகொண்ட அவர் தனது ஆக்கங்களை வி.புலிகள் தொகுத்து வெளியிட சம்மதம் தெரிவித்திருந்ததை மகிழ்ச்சியோடு எனக்குத் தெரிவித்தார். அவருக்கும் வி.புலிகளுக்கும் எந்தக் கருத்து முரண்பாடும் இருந்ததில்லை. அவர் தேசிய உணர்வாளர்களை யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் எனப் பார்த்தது கிடையாது. சிவராம் தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரும் என்பதை உணர்ந்திருந்தார். அது அரச தரப்பில் இருந்து வரலாம் என நான் ஊகித்தேன். உண்ட வீட்டுக்குள் இருந்து வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. 2004 இல் நியூ யேர்சியில் நடந்த ஒரு கருத்தரங்குக்கு சிவராம் வந்தி்ருந்தார். கருத்தரங்கு தொடங்குவதற்கு சற்று முன்னர்தான் ஒரு கடதாசியில் குறிப்புகளை எழுதிக் கொண்டார். ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுப்பது போல உரையாற்றினார். கருத்தரங்கு முடிந்த பின்னர் அவரோடு நின்று படம் எடுத்தோம். அப்போது அவர் சொன்னது “நான் செத்தால் பத்திரிகையில் படம் போட இப்போதே எடுக்கிறீர்களா?” எனக் கேட்டார். பகிடியாக இல்லாமல் சீரியசாகக் கேட்டமாதிரி எனக்குப் பட்டது. அவரது கைச்செலவுக்கு நேரில் கொடுத்தால் வாங்க மாட்டார் என்பதால் இன்னொரு நண்பர் மூலம் கொடுத்தேன். அடுத்த நாள் தொலைபேசியில் என்னை அழைத்து “எனக்குப் பணம் தேவையில்லை. நான் இறந்தால் எனது மனைவி பிள்ளைகளுக்கு கொடுக்கவிரும்பினால் கொடுங்கள்” என சற்று கோபத்துடன் கூறினார். அவர் கேட்டுக் கொண்டது போல அவரது மறைவுக்குப் பின்னர் நிதி சேர்த்து அவரது குடும்பம் கனடா வந்து சேர உதவினேன். ஒருவர் மறைந்த பின்னர் அவரைப் பற்றி மனம் போன போக்கில் எழுதுவதால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள். மிகைநாடி மிக்க கொளல்” என்கிறார் வள்ளுவர்.