கிழக்கிலும் மலையகத்திலும் மர்ம மனிதர்களின் தாக்குதல்கள் பற்றியே பரவலாகப் பேசப்படுகின்றது.
பாதிக்கப்படாதோர் இதனை வதந்தியாகப் பார்த்தாலும், பாதிக்கப்பட்டோர் மேற்கொள்ளும் போராட்டங்கள் இது உண்மை என்பதை உணர்த்துகின்றது.
இதன் பின்னணியில் இருந்து செயற்படும் மர்ம சக்தி எது என்பது தான் இப்போது எழும் கேள்வி.
மக்கள் காவல் நிலையங்களையும் கடற்படை முகாம்களையும் சுற்றி வளைத்து தாக்குமளவிற்கு நிலைமை மோசமடைவதைக் காணலாம்.
பாதுகாப்புச் செயலாளரின் இராணுவ புலனாய்வுப் பிரிவினரே இந்த கிறீஸ் பூசிய மனிதர்கள் என்று பகிரங்கமாக கூறுகிறார் முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர.
பதற்ற சூழலை உருவாக்கி ,சில அரசியல் கட்சிகளைத் தடை செய்ய அரசு முனைகிறது என்பதோடு இராணுவ நிர்வாகத்திற்கு தேவையான புறச்சூழலை உருவாக்கும் முயற்சியின் புதிய நகர்வுகளாகவும் இந்த பட்டணத்தில் பூதச் சாகசங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதாக மேலும் கூறுகிறார் மங்கள.
மக்களிடம் அகப்பட்ட பூதங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், பின்னர் விடுதலை செய்யப்படுவதாகவும் துரத்திச் செல்லப்படும் போது காவலரண்களிலும் இராணுவ முகாம்களிலும் ஓடி ஒளிந்து கொள்வதாகவும் மக்கள் விசனமடைகின்றார்கள்.
வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களுக்கு மாற்றீடாக இந்த மர்ம பூதங்கள் களமிறக்கப்பட்டுள்ளனவோ என்றே ஐயம் எழுகின்றது.
பெண்களைக் குறி வைத்துத் தாக்குவதால், மூட நம்பிக்கையில் எழுந்த அச்சத்திற்கு பரிகாரம் தேடுவதற்கான முயற்சியா இதுவென்ற கேள்வி முன் வைக்கப்படுகின்றது.
இருப்பினும் போர்க்குற்ற விசாரணை என்கிற அச்சுறுத்தலை திசை திருப்புவதற்கும், இராணுவ நிர்வாக மயமாக்கலிற்கும் தேவையான
அவசர கால சட்டத்தை நீடிப்பதற்கும், நாட்டில் பதற்ற சூழலை தக்க வைக்க வேண்டிய அவசியம் ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகவும் கருத இடமுண்டு.
இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் எழும் இலங்கை அரசிற்கெதிரான போராட்ட உணர்வினை மழுங்கடிப்பதற்கு எட்டு வருடங்கள் கழித்து முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளன் போன்றோரின் கருணை மனுவை நிராகரித்து, போராட்ட மையத்தினை திசை மாற்றியது போன்று, இலங்கையிலும் திசை திருப்பல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதே வேளை பத்துத் தடவைகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தைகள் காத்திரமான எந்த விதமான நகர்வுகளை நோக்கி அசையாத நிலையில், மூன்று கோரிக்கைளை முன்வைத்து அரசிடமிருந்து பதிலை எதிர்ப்பார்த்தார்கள் கூட்டமைப்பினர்.
நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லையென அரசும் எழுத்து மூலமாக பதிலளிக்க மறுத்து விட்டது.
ஆகவே, இந்த இறுக்கமான நிலையைத் தளர்த்த புதிய திசை திருப்பல் நாடகத்தை மேற்கொள்ள இந்தியா முயற்சிக்கின்றது.
வருகிற 23,24ஆம் திகதிகளில் ‘துயரும் தீர்வும்’ என்கிற தலைப்பில், புதுடெல்லியில் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பன்.
மனித உரிமைகள் மற்றும் உலக பொருண்மிய வளர்ச்சிக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பினர் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த ,ஏனைய அரசு சாரா தமிழ் பேசும் அரசியல் கட்சிகளை இந்தியா அழைத்திருக்கிறது.
கருணை மனு நிராகரிப்பு விடயமும், ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளை அழைத்து டெல்லியில் கூட்டம் நடாத்தும் விவகாரமும், தமிழக எழுச்சியை தணிக்க முற்படும் இராஜதந்திர காய் நகர்த்தல்கள் போலுள்ளது.
இந்திய -இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவில் நெருக்கடிகளை உருவாக்கும் உத்திகளை அழிப்பது அல்லது அவற்றை வேறு பாதையில் திசை திருப்பி விடுவது என்கிற தந்திரோபாய உத்தியினை, இந்திய மத்தியஆட்சியாளர்களும் அவர்களது கொள்கை வகுப்பாளர்களும் இணைந்து முன்னெடுக்கிறார்கள்.
“துயரும் தீர்வும்’ அரங்கத்தில் எட்டப்படும் முடிவுகளை கொண்டு, தமிழக அரசின் கடும் போக்கினை மாற்றிவிடலாமென்று இந்தியா கருதுகின்றது. ஆனால் டெல்லியின் நடைபெறப்போவது “திம்பு’ பேச்சுவார்த்தையின் மறுவடிவமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேவேளை, மரணங்களை கடந்து நீண்டு செல்லும் துயரினை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட புனர்நிர்மாண உதவிப்பட்டியல் துடைத்துவிடாதென்பதை, “ஹெட்லைன்ஸ் டூடே’ நிருபர் பிரியம்வேதா வெளிப்படுத்திய பதிவுகள் எடுத்துக் கூறுகின்றன.
அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதே போதுமென ஜனாதிபதியின் தம்பி கோத்தாபாய சொல்வதும், 13ஐ நடைமுறைப்படுத்தினால் போராட்டம் வெடிக்குமென குணதாச அமரசேகர எச்சரிப்பதும், நிபந்தனைகளை விதித்தால் பேசமுடியாதென நிமால் சிறிபால டி சில்வா சிரிப்பதும், அரசியல் தீர்வொன்றிற்கு சிங்களம் தயாரில்லை என்பதனை எடுத்துக் காட்டுகிறதெனச் சொன்னால் சுதர்சன நாச்சியப்பனுக்கு புரியவா போகின்றது?
ஊழலிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென காந்திய வழியில் போராடும் அன்னா ஹசாரேயின்
உண்ணாவிரத வழிமுறை, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான விடயமெனப் பார்க்கும் இந்திய பிரதமர் மன் மோகன் சிங், இனப் படுகொலைக்கு உள்ளாகும் தாயக மக்களுக்கு என்ன தீர்வினை முன்வைக்கப் போகிறார்?
நடந்ததை, நடப்பவற்றை மறந்து, இணக்கப்பாட்டு அரசியலிற்குள் சங்கமமாகுங்கள் என்று வலியுறுத்துவது, மக்கள் ஜனநாயகத்தை நிராகரிப்பது போலாகும்.
தற்போது, வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப் போவதில்லை என்கிற செய்தி வருகிறது.
அத்தோடு இப்பூத விவகாரத்தால் மாவட்டங்கள் தோறும் அதிரடிப்படை முகாம்கள் அமைக்கப்படப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, சிவில் நிர்வாகத்தில் படையினரின் பங்களிப்பும் உத்தரவாதப் படுத்தப்படுகிறது.
ஆகவே இத்தகைய விடயங்கள், அரச அதிகாரச் சமநிலையில் மாற்றங்களை உருவாக்கும் என்பதனை நிராகரிக்க முடியாது. அதிகார மைய சூழல் சக்தியான பொருண்மியமும் படைத்துறையும், பொருந்தாத தன்மை கொண்ட இரு முனைவாக்கமடைவது, ஏதேச்சாதிகார அரச கட்டமைப்பினை நோக்கி நாடு நகர்வதை உணர்த்துகிறது எனக் கணிப்பிடலாம்.
பூதப் பிரச்சினை ஒரு புறமிருக்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவருமா? வராதா ?என்கிற சிக்கலில் இருப்பதாகத் தெரிய வருகிறது. அமெரிக் காவின் வேண்டுகோளிற்கு இணங்க 2012 மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவைக் கூட்ட தொடரில் ஆணைக்குழுவின் அறிக்கை முன் வைக்கப்பட்டால், தூங்கிக் கிடக்கும் நிபுணர் குழு அறிக்கைப் பூதத்தையும் அது தட்டி எழுப்பிவிடும் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆதலால் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும்கூட்டத் தொடரோடு, போர்க்குற்ற விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடவேண்டுமென இலங்கை அரசு போல் இந்தியாவும் விரும்புகிறது என்பது சரியான பார்வையாகும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள தனது பாதுகாப்பு மண்டலத்திலிருந்து இலங்கை வெளியேறாமல் இருப்பதற்கு, எத்தகைய விட்டுக் கொடுப்புக்களையும் செய்ய இந்தியா தயார் நிலையில் இருப்பதை, வைக்கோவிற்கு மன் மோகன்சிங் கூறிய அரசியல் உபதேசங் கள் உறுதிப்படுத்துகின்றன.
போர் உச்சநிலையடைந்த வேளைகளில், தம்மைத் தவிர வேறொருவரிடமும் ஆயுதக் கொள்வனவு செய்யக் கூடாதென இந்திய உயர் நிலை அதிகாரியொருவர் இலங்கையை அச்சுறுத்திய காலம் இப்போது இல்லை.
பாகிஸ்தான் போர்க் கப்பல்களான பி.என்.எஸ்.ஷமரும், பி.என்.எஸ்.நாசரும் இலங்கைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டாலும் அமைதிகாக்க வேண்டிய கட்டாயத்துள் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
தெற்கில் நெடுஞ்சாலைகளை அமைக்கலாம். வியாபாரம் செய்யலாம். ஆனால் வடக்கில் மட்டுமே முதலீடுகளைச் செய்ய முடியும் என்பது தான் இந்தியாவின் இன்றைய நிலை.
மன்னார் கடல் படுக்கைகளிலுள்ள எட்டிலொரு துண்டில் இந்தியா துளையிடும் போது, உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி ஜாம்பவான் காஸ்புரோம் என்கிற ரஷ்ய நிறுவனம், கொழும்பிற்கு வந்து விட்டது. அத்தோடு கடன் அடிப்படையில் 14 போர் விமானங்களை கொடுப்பதாக ரஷ்ய அரசும், பெரிய தூண்டிலொன்றை வீசியுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கும், ஊழியர் சேமலாப நிதிக்கும் 81 கோடி ரூபாவை செலுத்த முடியாது தவிக்கும் இ.போ.சபை போன்று, பெரும் நிதிநெருக்கடிக்குள் அரசு சிக்கித் தவிப்பதை உணர்ந்ததால், தவிச்ச முயலைப் பிடிக்க பெரும் பன்னாட்டு முதலைகள் ஓடிவருகின்றன.
சிரியாவின் எண்ணெய் வர்த்தக உறவினைத் துண்டிக்குமாறு சீனாவிடமும் இந்தியாவிடமும் அமெரிக்கா கோரிக்கை வைத்தாலும், அந்த நாடுகள் இவ் வேண்டுகோளினை செவிமடுக்கப் போவதில்லை. இவ்வாறான நிலை இலங்கையிலும் ஏற்படலாம்.
ஆகவே, இலங்கை அரசைக் காப்பாற்றும் நிலைப்பாட்டில் தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் இருக்கும் வரை, தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வொன்று ஏற்படும் சாத்தியப்பாடுகள் இல்லை யென்பதை அறுதியிட்டுக் கூறலாம்.
2008 இல் ஏற்பட்டது போன்றதொரு பொருளாதார வீழ்ச்சியினை, மறுபடியும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் அமெரிக்கா, இலங்கையை அச்சுறுத்தலாம். ஆனால் நேரடியான அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடிய வலுவான நிலையில் இல்லை.
அதேபோன்று வடமராட்சி ஆக்கிரமிப்பின் போது பூமாலை நடவடிக்கையென்று கூறி, வான் பரப்பில் அத்துமீறி நுழைந்து பொட்டலம் போட்ட நிகழ்வினை, இந்தியாவால் மறுபடியும் அரங்கேற்ற முடியாது.
நிகழ்கால உலகப் பொருண்மிய வல்லரசனாகக் கருதப்படும் சீனாவின் உள் நுழைவினால் ஏற்பட்ட கால மாற்றம் இது.
ஆதலால் மர்மமனிதன் ,கிறீஸ்பூதம் கிளப்பிய மக்களின் தன்னியல்பான எழுச்சிப் போராட்டங்கள் சொல்லும் புதிய செய்தியை, ஒடுக்கப்படும் மக்கள் கூட்டமும், அவர்களை வழி நடத்தும் அரசியல் தலைமைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
வெளி அழுத்தங்களினால் நீதி நிலை நாட்டப்பட முடியாது என்கிற புறச்சூழல் தென்பட்டால், இந்த பூதங்களுக்கெதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் தரும் பட்டறிவிலிருந்து கற்றுக் கொண்டு, அதனை மண்ணிலிருந்து ஆரம்பிப்பதே பொருத்தமானதாகும். ஆகவே, எங்கிருந்து ஆரம்பிப்பது என்கிற கேள்விக்கு இப்பூதங்கள் வாசலைத் திறந்து வழியை காட்டி விட்டன.