‘கிரீஸ் பூதங்கள் : இனச்சுத்திகரிப்பின் நுண்மையான வடிவம்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் பர்சிலோனா பல்கலைக்கழகத்தில் நடந்த பெண்கள் மீதான வன்முறை குறித்த கருத்தரங்கில் பெண்ணிய உளவியலாளரான திரு பரணிகிருஸ்ணரஜனி ஆற்றிய உரை.
எல்லோருக்கும் வணக்கம். நிகழ்ச்சி நிரலுக்கும் கொடுக்கப்பட்ட நேரங்களுக்கும் அப்பால் மேலதிகமாக இந்த நேரத்தை எனக்கு வழங்கியமைக்கு முதற்கண் நன்றிகள். குறுகிய நேரமே இருப்பதால் நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன்.குநஅயடந ளுநஒரயட Pளலஉhழடழபல குறித்த எனது ஆய்வுப்பொருளுக்கும் அப்பால் பெண்கள் மீதான வேறொரு வகை வன்முறை சார்ந்த வடிவங்கள் குறித்தே இங்கு பேசவிழைகின்றேன். குறிப்பாக சிறீலங்காவில் சிறுபான்மை இனப்பெண்கள் மீது சிறீலங்கா அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை வடிவங்கள் குறித்தே இங்கு பேச விரும்புகிறேன்.
அதற்கு முன்பாக தேவையில்லாத தரவு என்ற போதிலும் நான் அந்த சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒரு பிரதிநிதி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பேரினவாதம், இனப்படுகொலை அரசு என்ற பதங்களினூடாகவே சிறீலங்கா அரசை நான் அடையாளப்படுத்த வேண்டும். ஆனால் அப்படி உச்சரித்து எனக்கு வாய்ப்பளித்தவர்களுக்கு சங்கடத்தை உருவாக்க விரும்பவில்லை. அத்தோடு நான் இங்கு அரசியல் பேச வரவில்லை – – அரசியல் சொல்லாடல்களினூடாக எனது கருத்துக்களை நான் நிறுவ விரும்பவுமில்லை. அதற்கு இது இடமுமல்ல. துரதிஸ்டவசமாக நான் முன்வைக்க இருக்கும் எமது இனப்பெண்கள் மீதான வன்முறைகள் மிகப் பெரிய அரசியலை கட்டமைக்கின்றன. அவை தினமும் தொடர்அரசியல் சொல்லாடல்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. விளைவாக சிறீலங்காவை இரு வேறு உளவியலை கொண்ட இரு தேசங்களாக நீங்கள் உணரக்கூடும். உண்மையும் அதுதான்.
இங்கு பல்வேறு நாடுகளிலிருந்து பெண்கள் தொடர்பான பல்வேறு வகையான ஆய்வுகளில் அக்கறை கொண்டவர்களும் ஆளுமைகளும் கூடியிருக்கிறீர்கள். சிறீலங்கா ஒரு பேரினவாத அரசா?, ஒரு இனப்படுகொலை அரசா? எமது பெண்கள் மீதான வன்முறையில் அரசியல் எங்கு மையம் கொண்டுள்ளது என்பதை நீங்கள்தான் கண்டறியவேண்டும். மிகச்சுலபமாக நீங்கள் அதை புரிந்துகொள்வதற்கு அண்மையில் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட அறிக்கையையோ, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போர் ஊடகத்தின் விவரணப்படத்தையோ என்னால் உங்களுக்கு பரிந்துரை செய்ய முடியும். ஆனால் எனது இந்த சிறிய உரையே அந்தப்புரிதலை உங்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் அரசியலுக்கும், ஊடக வெளிகளுக்கும் அப்பால் ஒரு அறிவுத்தளத்தினூடாக இந்த உண்மை உலகின் கடைசி மனிதன்வரை சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அதுவே இந்த இனப்படுகொலை அரசிற்கு எதிரான அர்த்தமுள்ள எதிர்வினையாக உருமாற்றம் பெறும் என்றும் நம்புகிறேன்.
மன்னிக்கவும் ‘இனப்படுகொலை அரசு’ என்றா குறிப்பிட்டேன். அடிமனத்தில் ஆழமாகப்பதிந்து போய்விட்ட ஒரு விடயம் இயல்பாக வெளியேவந்துவிட்டது. மனித உளவியலில் தேர்ச்சியுள்ள உங்களுக்கு இதைத் தனியாக விபரிக்க தேவையில்லை. ‘சிறீலங்கா அரசு’ என்றே இனிக்குறிப்பிட முடிந்தவரை முயற்சிக்கிறேன். இந்த இனப்படுகொலையின் நேரடி சாட்சியாக இல்லாமல் அந்த இனத்தின் ஒரு பிரதிநிதியாக பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள எனது உளவியலே இப்படி பின்னப்பட்டிருக்கும்போது நேரடி சாட்சிகளாக இன்னும் மீதமாக இருக்கும் அந்த மக்கள் தொகுதியின் உளவியல் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு மேலதிகமாக விளக்க வேண்டியிருக்காது என்று நம்புகிறேன். இனப்படுகொலை நடந்த தேசத்தில் தற்போது இனச்சுத்திகரிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த இனச்சுத்திகரிப்பில் எப்படி பெண்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதையே நான் இங்கு கவனப்படுத்த விரும்புகிறேன்.
மே 18 என்று சொல்லப்படுகிற இறுதி அழித்தொழிப்பு நாளிலிருந்து இந்தக்கணம் வரை பெண்கள் அங்கு அனுபவிக்கும் துயரத்தை ஒரு சில வார்த்தை வெளிகளுக்குள் கொண்டுவரமுடியாது. கொல்லப்பட்டதாக கருதப்படும் 140000 மக்களில் சரிபாதி பெண்கள் என்பதை இங்கு கவனப்படுத்த விரும்புகிறேன். இதன் விளைவாக ஏராளமான குழந்தைகள் அனாதைகளாக்கப் பட்டிருக்கின்றனர். பல்லாயிரம் விதவைகள், முழுமையாகவோ, பகுதியாவோ ஊனமாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை பலஆயிரங்களை தாண்டும். பல்லாயிரக்ணக்கான பெண்கள் பொய்க்குற்றச்hட்டுக்களின் அடிப்டையில் இன்னும் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் எங்கு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. தொடர் அரசியலைப்பொருத்து இந்த பெண்கள் கொல்லப்பட்டவர்கள் அல்லது காணாமல்போனோர் பட்டியலில் இணைக்கப்படலாம்! குடும்பத்தலைவர்களை உழைக்கும் வலுவுள்ள குடும்ப உறுப்பினர்களை போரில் பறிகொடுத்ததன் விளைவாக குடும்பத்தை சுமக்க வேண்டிய பெரும் பொறுப்பு பல்லாயிரக்கணக்கான பெண்களில் பெரும் சுமையாக இறங்கியிருக்கிறது. திட்டமிட்டே குருர நோக்கத்துடன் உலகின் மிகப்பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை என்று வர்ணிக்கப்படும் புனர்வாழ்வு முகாம்களில் இருக்கும் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குகுட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதன் விளைவாக பலர் காப்பம் தரித்து குழந்தைகளை ஈன்றெடுத்து பின்பு கொன்று வீசும் அவலம் தினமும் அங்கு பதிவாகிக்கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரலில் வியன்னாவில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இவை குறித்து நான் விபரமாகப் பதிவு செய்திருக்கிறேன். இனச்சுத்திகரிப்பின் இன்னொரு வடிவம் இது.
நான் இந்த உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இந்தக்கணம் வரை சிறீலங்காவில் புதிதாக பெண்கள் மீது கட்விழ்த்துவிடப்பட்டுள்ள ஒரு வன்முறையை உலகறியச்செய்யும் நோக்கத்துடனேனேயே இந்த மேலதிக நேரத்தை கேட்டு பெற்றேன். எனவே அதுகுறித்து மட்டும் இங்கு கவனப்படுத்தி எனது உரையை முடிக்க விரும்புகிறேன்.
கடந்த ஒரு மாத காலமாக ‘கிரீஸ் பூதங்கள’; என்று எமது மக்களால் அழைக்கப்படும் ஒரு வகையான மர்ம மனிதர்களின் நடமாட்டம் சிறுபான்மை இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. தமது அடையாளத்தை மறைப்பதற்காக ஒருவகை கறுப்பு களியை உடலெங்கும் பூசியுள்ளதாலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்குவதாலும் அங்குள்ள மக்கள் ‘கிரீஸ் பூதங்கள்’ என்று அந்த மர்ம மனிதர்களை அழைக்கிறார்கள். இதில் என்ன துயரம் எனில் இந்த மர்ம மனிதர்களின் இலக்கு சிறுபான்மை இனப்பெண்களேயாகும்.
இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இதுவரை தாக்குதல் நடந்த இடங்களில் எந்த திருட்டும் நடக்கவில்லை, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. பெண்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிடூம் அளவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களது முலைப்பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பல இடங்களில் பதிவாகியிருக்கிறது. இந்த மர்ம மனிதர்களை பொதுமக்கள் சிறைப்பிடிக்க முற்பட்டபோது அவர்களை சிறீலங்கா அரசின் இராணுவம் காப்பாற்றி தம்மோடு அழைத்து செல்வது தினமும் நடந்து வருகிறது.
இந்த அதிபயங்கரமான தாக்குதல்களும் அது குறித்த வதந்திகளும் பெண்களையும் குறிப்பாக குழந்தைகளையும் பெரும் பீதிக்கும் அச்சத்திற்குள்ளும் தள்ளியுள்ளது. ஏற்கனவே போக்குற்றங்களின் வழி நடந்த இனப்படுகொலைகளும் அது தந்த அவலங்களும் எமது பெண்களையும் குழந்தைகளையும் பெரும் உளவியல் சிதைவுக்குள் தள்ளியிருக்கிறது. தொடர்ந்து இதைப்பேணுவதிலேயே சிறீலங்கா அரசு கவனமாக இருக்கிறது. இனச்சுத்தகரிப்பின் நுண்மையான வடிவங்கள் இதன் பின்னணியில் இருப்பதை நான் சொல்லி நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய நிலையில் இல்லை என்பதை நான் அறிவேன். ஒரு இனத்தின் அடிப்படையும் ஆதாரமும் பெண்கள்தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த வாய்ப்பாடு. அந்தப் பெண்களை குறிவைப்பதன் ஆழமான அரசியல் பின்புலம் இதுதான். இதன் தொடர்ச்சியாக தற்போது ‘கிரீஸ்பூதங்’ களை அவிழ்த்து விட்டிருக்கிறது சிறீலங்காஅரசு.
நான் இங்கு அரசியல் பேச வரவில்லை என்பதை முன்பே குறிப்பிட்டேன். எனவே கிரீஸ்பூதத்தின் பின்னணிகள் குறித்த அரசியல் சொல்லாடல்களை தவிர்த்தே பெண்கள் மீதான இந்த தாக்குதல்களின் பின்னணியை முன்வைக்க விரும்புகிறேன். அரசுகளுக்கே உண்டான அடிப்படை குணாம்சம் என்ற போதிலும் சிறீலங்கா அரசு அதற்கும் ஒருபடி மேலாகவே சிந்தித்து செயலாற்றுவதாகத் தெரிகிறது. அதாவது ஒரு நிகழ்வை பல்வேறு அரசியல்காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறது. நான் கூறப்போவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இந்தத் தாக்குதலின் உண்மை பின்னணி பிற்போக்கு மதவாத சிந்தனைகளில் இருந்தே தோற்றம் பெற்றதென்பது.. அதை அரசியல் காரணங்களுக்கும் சிறீலங்கா அரசு பயன்படுத்துகின்றது என்பது இதன் உதிரிச்செய்தியே.
பெண் – பெண் உடல் மீது மதமும், பிற்போக்குதனங்களும,; மூட நம்பிக்கைகளும் செலுத்துகிற வன்முறை மற்றும் அதிகாரம் குறித்து இங்கு கூடியிருக்கிற எல்லோருமே அறிவோம். இங்கும் இவை தொடர்பான இரு வேறு ஆய்வுக்கட்டுரைகள் சமாப்பிக்கப்பட்டதை பார்த்தேன். அந்த இரு ஆய்வாளர்களுக்கும் எனது பணிவான வேண்டுகோள். மதமும் பிற்போக்குதனங்களும் சிறீலங்காவில் ஒரு இனத்தை சுத்திகரிப்பதற்கு பயன்படுத்தப்படுவதையும் அவர்களது ஆய்வில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் உங்களுக்கு சோப்பிப்பது எனது பொறுப்பு.
சிறீலங்கா அதிபர் இன்று மே 18 இல் நடத்திய அழித்தொழிப்பின் விளைவாக சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளார். அவர் அதிலிருந்து விடுபடுவதற்காக ஒரு ஜோதிடரின் பரிகாரமாகவே சிறுபான்மை இனப்பெண்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள் என்பது அங்குள்ள ஊடகவியலாளர்களின், பெரும்பான்மை மக்களின் கருத்து. சில சிங்கள ஊடகவியலாளர்கள், அதிபரது குடும்ப உறுப்பினர்களை, அவரது கட்சி அங்கத்தவர்களை ஆதாரம் காட்டி இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக இதை ஊடகங்களில் முன்வைக்க முடியாத நிலை. முதற்காரணம் அச்சம். அதற்கான காரணத்தை உலகிலுள்ள ஊடக அமைப்புக்களை தொடர்பு கொண்டு கேட்டால் அங்குள்ள கருத்து சுதந்திரத்தை உங்களுக்கு அவர்கள் கதைகளாகச் சொல்லக்கூடும்.
இரண்டாவது பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத, நவீன மனித வாழ்வுக்கு ஏற்பில்லாhத ஒரு செயலை முன்வைத்து பேசுவதிலுள்ள தயக்கமும் அடிப்படை ஊடக அறமும் சம்பந்தப்பட்டவர்களை கட்டிப்போட்டிருக்கிறது. ‘பேய்கள், பூதங்கள் என்று மக்கள் அச்சமடைந்து சொல்வதை ஊடகங்கள் நம்பி தகவல்களை வெளியிட முடியாத சூழலை உருவாக்குவதும் உலக நாடுகளால் அவை குறித்து கேள்வி எழுப்ப முடியாத நிலையை உருவாக்குவதுமான ஒரு வழி முறையில்தான் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டிருக்கிறது’
இது ஒரு ஆய்வாளரின் கருத்து. இந்த வரிகள் இதன் மூலத்தையும் பின்னணியையும் நுண்ணரசியலையும் உணரபோதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சிறீலங்கா அரசின் இனவாதம் என்பது அதன் மத அடிப்படைகளிலும் அதன் விளைவான பிற்போக்கு தனங்களிலும் இருந்து தோற்றம் பெற்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று நான்கு வகையான மதங்கள் அந்நாட்டில் உள்ள மக்களால் பின்றபற்றப்படுகிறபோதும் பௌத்தபேரினவாத சிந்தனையை மையப்படுத்தியே அதன் அரசியலமைப்பும் ஆட்சியதிகாரமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
மதமும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று ஆழமாகப் பின்னப்பட்டுள்ள நாடு சிறீலங்கா. இன்று சிறீலங்காவில் உள்ள அரசியல் பிரச்சினையின் மையமே ‘மகாவம்சம்’ என்ற புனைவு நூல்தான். அது சிறீலங்காவை ஒரு பௌத்த நாடாக – சிங்களவர்களுக்கானதாக புனைந்துள்ளது. மற்றவர்களை வந்தேறிகள் என்கிறது. அந்த நூல் பௌத்த மதம் குறித்த புனிதத்தையும் சிங்கள மொழியின் அதிகாரம் குறித்தும் பல ‘கதைகளை’ அவிழ்த்துவிட்டுள்ளது. அதை தொடர்ந்து போதிப்பவர்களாக – அரசியல் அதிகாரம் அதன்வழியேதான் கட்டமைக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களாக பௌத்த மத நிறுவனங்களும் அதன் பீடாதிபதிகளும் இருக்கிறார்கள். வெளிப்படையாக ஜனநாயகத்தின் வழி தோந்தெடுக்கப்பட்ட அரசு என்று கூறிக்கொண்டாலும் சிறீலங்கா அரசின் ஆட்சிஅதிகாரத்தின் திரைமறைவில் இயங்குவது இந்த சிந்தனையே.. இதைத்தான் ஆயுதப்போராட்டத்தின் வழி சிறுபான்மை மக்களின் உரிமையைப்பெற போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ‘மகாவம்ச மனநிலை’ என்று குறிப்பிட்டார்.
இந்த மனநிலையில் சிங்களம் இருக்கும்வரை மற்றவர்களுக்கான தீர்வு என்பது சாத்தியமில்லை என்பதை அவர் அடிக்கடி சுட்டிகாட்டியபடியே இருந்தார். துரதிஸ்டவசமாக சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்த இந்த மனநிலை இப்போது ஒவ்வொரு சிங்கள மக்களிடமும் இடம் மாறியிருக்கிறது.
எனது பேச்சு ஒரு அரசியல் உரையாக மாறிக்கொண்டிருப்பது குறித்து எனது வருத்தத்தை பகிர வரும்புகிறேன். எனது நோக்கம் அதுவல்ல. துரதிஸ்டவசமாக பெண்கள் மீதான வன்முறை குறித்த எனது உரை இறுதியில் அங்குபோய்தான் மையம்கொள்கிறது. இது தவிhக்கமுடியாதது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலை என்று இன்று பலதரப்பாலும் வர்ணிக்கப்படுகிற முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பௌத்த பிக்குகளும் சிங்கள ஜோதிடர்களும் நாட்குறித்து கொடுக்க பௌத்த பிக்குகள் கள முனைக்கு சென்று பிதிர்கள் ஓத நடந்தேறியவை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நம்ப முடியாத நிகழ்வுகள் எல்லாம் தமிழர்களின் வாழ்வை மிக இயல்பாகக் கடந்து போவதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இன்று ‘கிரீஸ் மனிதர்கள்’ என்ற போர்வையில் எமது பெண்கள் இனச்சுத்திகரிப்பின் இலக்குகளாக தோந்தெடுக்கப் பட்டுள்ளதையும் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.
எல்லா அரசியல் நிகழ்வுகளுக்கும் நாட்குறித்த சிங்கள பௌத்த பிக்குகள் இனப்படுகொலை- போhக்குற்ற விசாரணைகளில் இருந்து தப்புவதற்கும் ‘மகாவம்ச மனநிலை’ யோடு தமிழ்ப்பெண்களின் இரத்தபலியைக் கேட்கிறார்கள். தமிழர்களின் படுகொலைகளுக்கு எந்த பிராந்திய – பூகோள அரசியல் காரணமாகியதோ அதே காரணம் இன்று சிங்கள அரசனையும் கழுவிலேற்றக் காத்திருக்கிறது. அனைத்து சிறுபான்மை இனப்பெண்களின் முலைகளை அறுத்தெறிந்தாலும் அவர் தப்பப் போவதில்லை. அது வேறு கதை. ஆனால் அதற்குள் சிறுபான்மை பெண்களின் மீது வன்முறையை செலுத்தி ஒரு இனச்சுத்திகரிப்புக்கான வேலைகளை பல்வேறு வழிகளில் தொடங்கவிட்டது சிங்கள அரசு. அதன் மிக அண்மைய வடிவம்தான் இந்த ‘கிரீஸ் மனிதர்கள்’.
பெண்களும் குழந்தைகளும் இந்த மர்ம மனிதர்கள் குறித்து பெரும் அச்சத்திற்குள்ளும் பீதிக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற:கனவே போரின் விளவாக பல உளவியற் சிக்கலுக்குள் இருக்கும் அவர்கள் மீது மேலதிக வன்முறையாக இது பிரயோகிக்கப்படுகிறது. வானிலிருந்து அம்புலிமாமா (நிலா) வரும் என்று அம்மாக்கள் சொன்ன கதைக்கு மாறாக வானிலிருந்து குண்டுகளையும் எறிகணைகளையுமே எமது குழந்தைகள் கண்டார்கள். அம்மாக்கள் ஏன் பொய் சொன்னார்கள் என்று ஈராக், ஆப்கானிஸ்தான் குழந்தைகள் போல எமது குழந்தைகளும் தொடாந்து கேட்டபடியே இருக்கிறார்கள். பதில்சொல்த்தான் ஆட்களில்லை. இதன்விளைவாக ஈழத்து அம்மாக்கள் பெரும் குற்றவுணர்வில் கிடக்கிறார்கள்.
இங்கு முன்வைக்கப்பட்ட தனது ஆய்வு குறித்து பேசும்போது குழந்தைகள் மீதான வன்முறை குறித்து பேசும் போது ஒரு தோழி குழந்தை வளாப்பின் முக்கிய அம்சமாக போலி அச்சம் – ஆவி, பேய்கள் குறித்த கற்பனை பயம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் உளவியல் பாதிப்புக்களை மிக அற்புதமாக விபரித்தார். ஆனால் அங்கு நிஜமாகவே பூதங்களும், பேய்களும் எமது குழந்தைகளின் ஊளவியலை துண்டாடுவதை என்னவென்று சொல்ல..?
கூட்டாக ஒரு இனத்தின் பெண்களும் குழந்தைகளும் வேறொரு இனத்தை சேர்ந்த அரசால் – அதிகாரத்தால் இலக்கு வைக்கப்படுவதை இனச்சுத்திகரிப்பு என்று அழைப்பதை உலகின் எந்த உளவியல் வாய்ப்பாடும் நிராகரிக்காது என்று நம்புகிறேன்.
மேன்மை தங்கியவர்களே இந்த எனது உரையை கவனத்தில் எடுத்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகளினதும், பெண்ணிய அமைப்புகளினதும் கவனத்திற்கு கொண்டு சோப்பீர்கள் என்று நம்புகிறேன். உடனடியாக சிறீலங்காவில் நடைபெறும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்படுவதற்கு உங்களாலான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த உரையை நிறைவு செய்கிறேன்.