புதுச்சேரி அரசியலில் பணபலம், அடியாட் பலம் உள்ள தனிநபர் செல்வாக்குத்தான் ஒருவரின் அரசியல் வாழ்வை தீர்மானிக்கிறது.
மதுபான வருவாயை மட்டுமே நம்பி செயல்படும் புதுச்சேரி அரசியலில் பெரிதாக ஊழல் எதனையும் செய்ய முடியாது. காரணம் அரசு வருவாய் செலவினங்கள் என அனைத்தும் இந்தியாவின் வேறு மாநிலங்கள் அளவுக்கு இருக்காது. ஆனால், தனி நபர்கள் ரியல் எஸ்டேட், மதுபானக்கடைகள், கேபிள் டிவி பிஸ்நஸ், என எண்ணிலடங்கா தொழில்களில் சம்பாதித்துக் குவிப்போர் தங்களது தொழில் சாம்ராஜ்யத்தை தக்க வைக்க அரசியல்வாதிகளாக உருவாகி வருவார்கள் இவர்களை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளில் சேர்த்துக் கொண்டு ஆட்சியைப் பிடிப்பார்கள். இதுதான் புதுச்சேரி அரசியல் பற்றிய பொதுவான சித்திரம்.
இச்சூசலில்தான், புதுச்சேரி காங்கிரஸ் அரசை பாஜக இன்று கவிழ்த்துள்ளது. பெரும்பான்மை இழந்ததால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அவையில் இருந்து வெளியேறினார் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி. பாஜகவும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் இணைந்து புதுச்சேரி நாராயணசாமி அரசை கழித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஆளுநராக பதவியேற்ற நாள் முதல் ஆளுநர் கிரண்பேடி பாஜக உறுப்பினர் போல செயல்பட்டார். பாஜக புதுச்செரியில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலையில், பாஜகவுக்கு மூன்று நியமன உறுப்பினர்களைக் கொடுத்ததோடு, நாராயணசாமியை செயல்பட விடாமல் தடுத்து வந்தார் கிரண்பேடி. காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு 18 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தது பெரும்பான்மைக்கு 16 இடங்கள் போதும் என்ற நிலையில் புதுச்சேரி பாகூர் தொகுதி உறுப்பினர் தனவேலு அரசுக்கு எதிராக பேசியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சரும் வில்லியனூர் தொகுதி உறுப்பினருமான நமச்சியாவமும், உசுடு தொகுதி உறுப்பினர் தீப்பாந்தானும் ராஜிநாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தனர்.
இதனால் அரசின் எண்ணிக்கை 15-ஆக குறைந்தது. பின்னர் காங்கிரஸ் உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராப் ராஜிநாமா செய்தார். பின்னர் ஜாண்குமாரும் ராஜிநாமா செய்தார்.
இதனால் பெரும்பான்மையை நாராயணசாமி அரசு இழக்கும் சூழல் உருவானதும். கிரண்பேடியை விடுவித்து தமிழிசையை ஆளுநராக நியமிக்க அவர் பதவியேற்ற அன்றே பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டார். இன்று 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன், திமுக உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோரும் ராஜிநாமா செய்தனர்.
இவர்கள் அனைவருமே அரசியல்வாதிகளாக மட்டுமல்லாமல் ஆலை அதிபர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். உதாரணத்திற்கு வெங்கடேசன் தங்கம் எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர். அவர் மத்திய அரசால் மிரட்டப்பட்டதாக கூறபப்டுகிறது. கடும் அழுத்தத்தால் தான் ராஜிநாமா செய்து விட்டு பாஜக என்ன சொல்கிறதோ அதை கேட்டால்தான் தன் தொழிலை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று தனக்கு நெருங்கியவர்களிடம் புலம்பியிருக்கிறார். காங்கிரஸ் உறுப்பினர் ஜாண்குமார் லாட்டரி அதிபர் கிட்டத்தட்ட சட்டவிரோத தொழிலாகவும் அதை செய்து வந்தார். அவரும் மிரட்டப்பட்டதன் தொடர்ச்சியாகவே பாஜகவில் இணைந்துள்ளார்.
இதில் ஜாண்குமார் லாட்டரி சீட்டு அதிபர், வெங்கடேசன் தங்கம் நல்லெண்ணெய் நிறுவன அதிபர், மல்லாடி கிருஷ்ணராவ் செய்யாத தொழிலே இல்லை. லட்சுமி நாராயணன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர்கள் அனைவரையும் மிரட்டித்தான் பாஜக தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
கொள்கை கோட்பாடு சார்ந்து ஒரு கட்சியில் அரசியல்வாதிகள் இருப்பதற்கும் தொழிலதிபர்கள் ஒரு கட்சியில் இணைந்து செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுவே. தொழிலதிபர்கள் ஒரு கட்சியில் இணையும் போது இன்னொரு கட்சி அவர்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டினால் கட்சியை விட தொழில்தான் முக்கியம் என மிரட்டும் கட்சிக்குச் சென்று விடுகிறார்கள்.