கியூபாவின் சோசலிசத் திட்டங்களில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். கியூபாவில் மீண்டும் முதலாளித்துவம் திரும்பாது என்று கியூப ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் வகையில் சூளுரைத்துள்ளார்.
கியூபாவின் வருடாந்திர நாடாளுமன்றக் கூட்டத்தை நிறைவு செய்து சனிக்கிழமையன்று ரால் காஸ்ட்ரோ உரையாற்றினார். இக்கூட்டத்தில் கியூபாவின் பொருளாதார நெருக்கடி பிரதான இடம் பெற்றது. எதைப்பற்றியும் விவாதிக்க தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட ரால், நாட்டின் அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பு குறித்து விவாதிக்க முடியாது என்று திட்ட வட்டமாக அறிவித்தார்.
கியூபாவில் ஜனநாயக மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று அமெரிக்க அயல் துறை அமைச்சர் ஹிலாரி விடுத்த அறிக்கைக்கு அவர் கூட்டத்தில் பதிலுரைத்தார். கியூபாவில் புரட்சியை மறுதலிப்பதற்கும், முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டு வருவதற்கும், தான் கியூபாவின் ஜனாதிபதியாக தேர்ந் தெடுக்கப்படவில்லை என்று பலத்த கைதட்டலுக்கிடையே ரால் காஸ்ட்ரோ கூறினார்.
கியூபாவில் சோசலிசத்தைப் பாதுகாக்கவும், தொடரவும் முழுமைப்படுத்தவுமே ஜனாதிபதியாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டேனே அன்றி அழிப்பதற்காக அல்ல என்று ஹிலாரிக்கு ரால் பதிலடி கொடுத்தார். கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் பரஸ்பர மரியாதைகளுடன் விவாதிக்கத் தயாராயிருப்பதாகக் கூறிய ரால் கியூபாவின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைப்பற்றி விவா திக்க முடியாது என்றார்.
ஒபாமா பதவியேற்ற பின் அமெரிக்கா, சில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது உள்ளிட்ட சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும் ஐம்பதாண்டு கால வர்த்தகத் தடை தொடருகிறது என்று அவர் குறிப்பிட்டார். 1959 கியூபப் புரட்சிக்குப் பின் கியூப மண்ணில் வன்முறைகள் தொடர்ந்து நடத்தப்படும் ஒரே இடமான அமெரிக்க கடற்படை முகாம் அமைந்துள்ள குவாண்ட நாமோவை அமெரிக்கா மீண்டும் கியூபாவிடம் ஒப்படைக்க வேண்டுமென அவர் தம் உரையில் வலியுறுத்தினார்.
1990-க்குப் பின் கியூபா மோசமான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எனவே கியூப மக்கள் சேமிப்பை அதிகரிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான கடின நடவடிக்கைகளுக்கு கியூபா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக அரசு கூறியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாகக் குறையும் என்று காஸ்ட்ரோ குறிப்பிட்டார். சென்ற வாரம் வளர்ச்சி 6 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. நாட்டின் முக்கிய ஏற்றுமதி பொருளான நிக்கலின் விலை குறைவும், சுற்றுலா வருமான வீழ்ச்சியும் கியூப பொருளாதாரத்தை கடுமை யாகப் பாதித்துள்ளன.
அடுத்தடுத்து தாக்கிய மூன்று புயல்களும் கியூபாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன. சுமார் 1000 கோடி டாலர் இழப்பு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கியூபாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதமாகும்.