25.12.2008.
கியூபப் புரட்சியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை நாடு முழுவதும் எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் கொண்டாடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகளுக்கு அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க கண்டத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுடர் விட்டு ஜொலிக்கும் நட்சத்திரமாகத் திகழும் சோசலிச கியூபாவில், மகத்தான மக்கள் தலைவர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி நடைபெற்று 2009 ஜனவரி 1-ம் தேதியுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தினத்தில்தான் கியூபாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த பாடிஸ்டாவின் ஆட்சியை பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கொரில்லாப் படை தூக்கி எறிந்தது. மேற்கத்திய உலகில் நடைபெற்ற முதல் சோசலிச புரட்சி இதுவே ஆகும். அன்று முதல் அமெரிக்க ஏகாதிபத்தியம், கியூபாவிலிருந்து வெறும்
90 மைல் தொலைவில் மட்டுமே அமைந்திருக்கிற அமெரிக்க ஏகாதிபத்தியம், கியூபாவில் சோசலிச ஆட்சி முறையை தகர்க்க மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து தீரத்துடன் போராடி வருகிற அதே நேரத்தில், கியூபப் புரட்சியானது சின்னஞ்சிறு கியூப தேசத்தில் எழுத்தறிவு, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
இந்தப் புரட்சி அடிமை முறைக்கு முடிவு கட்டியது. இனவெறி ஒதுக்கலுக்கு முடிவு கட்டியது. ஆப்பிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் சோசலிச கியூபா சர்வதேச அளவிலும் மிக முக்கிய பங்காற்றியது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கியூபப் புரட்சியின் சாதனைகளை கொண்டாடும் விதத்தில், கியூபப் புரட்சியின் 50-ம் ஆண்டு விழாவை நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள செய்தியில், 2009 ஜனவரி 1-ம்தேதி கியூபப் புரட்சியின்
50-ம் ஆண்டு துவங்குவதையொட்டி, ஜனவரி 1 முதல் 15 வரை கியூபப் புரட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை நினைவு கூரும் விதத்தில், கட்சியின் சார்பில் நாடு முழுவதும் சிறப்பு கருத்தரங்கங்கள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணிப் படையாக நிற்கும் சோசலிச கியூபாவிற்கு நமது ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி ஜனவரி 4 அன்று வெளிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’, கியூப புரட்சியின் 50-ம் ஆண்டு சிறப்பிதழாக வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது
(ஐஎன்என்)