காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மோடி அரசு பல ஆண்டுகளுக்குப் பின்னர் இணையச் சேவையை காஷ்மீருக்கு வழங்கியுள்ள நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்கள் விருப்பப்படி பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் ஒரு பகுதி இன்னும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பாகிஸ்தான் நிர்வாகப்பகுதிக்குள் உள்ள கோட்லி என்ற இடத்தில் காஷ்மீர் ஒற்றுமை நஆள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் “ நீங்கள் பாகிஸ்தானுடன் இருக்க விரும்பினால் அதை ஏற்போம் அல்லது சுதந்திர நாடாக தனியாக இருக்க விரும்பினால் அந்த உரிமையை பாகிஸ்தான் வழங்கும்.காஷ்மீர் மக்களுக்கும் பாகிஸ்தானுக்கு ஐநா பொது வாக்கெடுப்பு தொடர்பாக வழங்கிய வாக்குறுதியை நினைவூட்ட விரும்புகிறேன். இதே போன்று இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை ஐநா நிறைவேற்றியுள்ளது” என்று பேசினார்.
“ சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமும் நிற்கிறது. காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை என்னால் உணர முடிகிறது. நீங்கள் விரும்பியதை பெறும் வரை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் குறிக்கோள் வெகு தொலைவில் இல்லை என்று நான் கூற விரும்புகிறேன். உங்கள் நியாயமான உரிமைகளை நீங்கள் அடையும் வரை பாகிஸ்தான் உங்களுடன் துணை நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“காஷ்மீர் பிரச்சனைக்கு நியாயமான தீர்வைக் கோருவதில் இந்தியா நேர்மையை வெளிப்படுத்தினால், ஐநா சபையின் தீர்மானங்களின்படி, அமைதிக்காக இரண்டு படிகளை முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், அமைதிக்கான எங்கள் விருப்பத்தை யாரும் பலவீனம் என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். மாறாக, ஒரு வலிமைமிக்க நாடாக நாங்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அமைதியான முறையில் நிறைவேற்றவே நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.