காஷ்மீர்: கருத்துச் சொல்ல அமெரிக்க மறுப்பு.

30.08.2008.
எல்லைத் தாண்டிய ஊடுறுவலால் ஜம்மு-காஷ்மீரில் அதிகரித்துவரும் பதற்றம் குறித்து கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துள்ள அமெரிக்கா, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே தங்களின் பொதுவான நிலைப்பாடு என்று கூறியுள்ளது.

வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இராபர்ட் உட்டிடம், பாகிஸ்தானில் இருந்து ஊடுவிய பயங்கரவாதிகளால் காஷ்மீரில் அப்பாவி மக்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்டதற்கு, “அது குறித்த அறிக்கை வந்தது, அப்பகுதியில் பதற்றம் ஏற்படுவது கவலையளிக்கிறது என்றாலும், தங்களுக்கிடையிலான பிரச்சனைகளை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது பொதுவான கொள்கை” என்று கூறினார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியினர் பகுதியில் மறைந்திருந்து தாக்கும் தீவிரவாதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த இராபர்ட் உட், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டம் உரிய பலனைத் தர பாகிஸ்தானின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என்று கூறினார்.