பிரதமரின் அரசு இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேல், காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான பிருதிவிராஜ் சவாண், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சைபுதீன் சோஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. இரண்டு நாள்களுக்கு முன் பிரதமரைச் சந்தித்த காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, மாநிலத்தில் கொந்தளிப்பான நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர “”பாதுகாப்புப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம்” திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரினார். காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் முப்படைகளின் தளபதிகளும் பிரதமரை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை கலந்தனர். பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை கூட்டியிருக்கிறார். வெள்ளிக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. மாநில முதலமைச்சர் கேட்கிறார் என்பதற்காக பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களைத் தரும் சட்டத்தைத் திரும்பப் பெறக்கூடாது, அப்படிச் செய்தால் நம்முடைய ராணுவத்தால்தான் பிரச்னை, மக்களிடம் அவர்கள் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள் என்று நாமே ஒப்புக்கொள்வதைப் போலாகிவிடும் என்று பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி வாதிட்டாராம். அத்துடன், எல்லைக்கு அப்பாலிருந்து தூண்டிவிடப்படும் பிரிவினைவாதத்தால் மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இச் சட்டத்தைத் திரும்பப் பெற்றால் பயங்கரவாதிகள் தங்கியிருக்கும் இடம் என்று சந்தேகிக்கப்படும் பகுதிகளைச் சோதனையிட முடியாது, யாரையும் அழைத்துச் சென்று விசாரிக்க முடியாது, மறைவிடங்களைத் தாக்கி அழிக்க முடியாது, ஆயுதங்களைக் கைப்பற்ற முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டதாம். “காஷ்மீரில் கடந்த 3 மாதங்களாகத் தொடரும் கல் எறி சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீஸôர் எடுக்கும் நடவடிக்கைகளால் பிரச்னை வளர்கிறதே தவிர தீரவில்லை; எனவே முதல்வர் ஓமர் அப்துல்லாவின் ஆலோசனைப்படி அரசியல் தீர்வுக்கும் வாய்ப்பு தந்து பார்க்கலாம்‘ என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை கூறினாராம். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றால் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளுக்கு மண்டியிட்டதைப் போலாகிவிடும், அதையே மத்திய அரசின் பலவீனமாகக் கருதுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று குலாம் நபி ஆசாதும் சைபுதீன் சோஸýம் எச்சரித்தார்களாம். பாஜக, வி.எச்.பி., பாந்தர்ஸ் கட்சி: பாதுகாப்புப் படைக்கு தரப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை விலக்கிக் கொள்ளக்கூடாது, காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அல்லது சிறப்பு அந்தஸ்து தருவதை மாநில மக்களில் 99% பேர் ஆதரிக்காத நிலையில் பிரிவினைவாதிகளுக்காக அரசு பணியக்கூடாது என்று மாநில பாரதிய ஜனதா, விசுவ ஹிந்து பரிஷத், பீம்சிங் தலைமையிலான பாந்தர்ஸ் கட்சி ஆகியவை கருத்து தெரிவித்துள்ளன. இதுதான் டில்லியில் இருக்கும் ஒட்டுண்ணி அரசியல் கட்சிகளின் காஷ்மீர் பற்றிய நிலை. உண்மையில் காஷ்மீர் மக்கள்டம் . பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறீர்களா? இந்தியாவுடன் இருக்க விரும்புகிறீர்களா? அல்லது சுதந்திர காஷ்மீராக விரும்புகிறீர்களா? என்றொரு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றால் 99% காஷ்மீரிகள் சுதந்திர காஷ்மீரையே விரும்புவார்கள் என்னும் நிலையில் அப்படி ஒரு வாக்கெடுப்புக்கு அனுமதிக்காக இந்தியா காஷ்மீரிகளின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சர்வதேச அளவில் சித்தரிக்கிறது.