காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும், காஷ்மீரில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீரில் அமைதி திரும்ப அம்மாநில முதல்வர் ·பரூக் அப்துல்லா வைத்துள்ள கோரிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீநகர் தால் ஏரிக்கரையில் உள்ள ஹசரத்பால் மசூதியில் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த ஒரு பிரிவினர் ஊர்வலமாகச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறைக்கும், அவர்களுக்கும் மோதல் நடந்துள்ளது. அரசு அலுவலகங்கள் சிலவற்றிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்கார்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதையடுத்து காவல்துறை தடியடியும், கண்ணீர் புகைக்குண்டும் வீசியுள்ளனர். அதன்பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.