கார்ல் மார்க்ஸ் ‘ தாஸ் காபிடல்’ என்ற மகத்தான நூலை லண்டனிலிருந்துகொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலகட்டத்தில் எழுதினார். ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம். தொழிற் புரட்சியின் காரணமாக, நூற்றாண்டுக் காலமாக பிரபுத்துவ சமூக அமைப்பிலிருந்துவந்த ஐரோப்பிய சமூகக் கட்டுமானத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், பிரபுத்துவ சமூக அமைப்பின் அடிப்படையில், கொடுங்கோல் மன்னன் ட்சார் ஆட்சியிலிருந்த வேளாண்மை மிகுந்த ரஷ்யாவில், அப்பொழுது தொழில் யுகம் பிறக்கவில்லை. நூற்றாண்டு நூற்றாண்டுக் காலமாக ரஷ்ய அடித்தள சமூகம் மாற்றங்கள் ஏதுமில்லாமல் அதே நிலையில் இருந்துவந்தது.
1848ல் ‘கம்யூனிஸ்ட் பிரகடன’த்தை அறிவித்த மார்க்ஸும் ஏங்கல்ஸும் தொழிலாளர் புரட்சி, தொழில் மயமாக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில்தாம்(ரஷ்யா நீங்கலாக) ஏற்படுமென்று நம்பினர். 1871ல் பாரிஸில், தொழிலாளர்களை முதன்மையாகக் கொண்ட ‘கம்யூன் ஆட்சி’ ஏற்பட்டது. இதுவே, வருங்காலத் தொழிலாளர் ஆட்சிக்கு முன் மாதிரியாக இருக்கப் போகின்றது என்று மார்க்ஸ் கூறினார்.
ஆனால் ஃப்ரான்ஸில் கம்யூன் ஆட்சி இரண்டு மாதங்கள்தாம் இருந்தது. மிதவாதிகளுக்கும், தீவிர சோஷலிஸ்டுகளுக்குமிடையே நிலவிய கருத்து மோதல்களின் காரணமாகத் தொழிலாளர் ஆட்சி நீடிக்கவில்லை.
ஆனால், மார்க்ஸும் ஏங்கல்ஸும் கனவு கண்ட புரட்சி, தொழில் ரீதியாக மிகவும் பிற்போக்கான நிலையிலிருந்த, பிரபுத்துவ சமூக அமைப்பைக் கொண்டிருந்த ரஷ்யாவில் ஏற்பட்டது! பிரபுத்துவ சமூக அமைப்பிலிருந்து படிப்படியாகப் பரிணாமம் அடைந்து, தொழிலாளர் புரட்சி ஏற்படுவதற்கான சமூகச் சூழ்நிலை உருவாக வேண்டுமென்று
மார்க்ஸ் நம்பினார். ஆனால் இத்தகைய பரிணாமம் எதுவும் ரஷ்யாவில் ஏற்பட்டிருக்க வில்லை..
ட்சாரின் கொடுங்கோல் ஆட்சிக்குப் பிறகு லெனினும் அவரைத் தொடர்ந்து ஸ்டாலினும்
ஆட்சிக்கு வந்தார்கள். பல நூற்றாண்டுகளாக ட்சார் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சிக்குப் பழகிப்போயிருந்த ரஷ்ய மக்கள், மார்க்ஸ் வலியுறுத்திய ‘தொழிலாளரின் சர்வாதிகார’த்துக்குப் பதிலாக, ஜார்ஜிய ஸ்டாலினின் சர்வாதிகாரத்தைத்தான் அனுபவிக்க நேர்ந்தது. இதுவே கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு ஏற்பட்ட ஆரம்பத் தோல்வி.
ஓரளவு ஜனநாயகக் கொள்கைகளோடு பரிச்சியமாகியிருந்ததோடு மட்டுமல்லாமல், தொழிற் புரட்சி உருவாகியிருந்த பிரிட்டனில் கம்யூனிஸ்ட் ஆட்சி தொடங்கியிருந்தால், ஒருகால், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு வெற்றியாக இருந்திருக்கக் கூடும். சீனாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றி பெறக் காரணம், அது சோவியத் யூனியன் முன் மாதிரியைப் பின்பற்றவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, லெனின் தம் இறுதி நாட்களில் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அவர் ஆட்சிச் செயல்பாட்டு முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வர நினைத்தாகத் தெரிகிறது. அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப் பட்டிருந்த சமயத்தில், தம்மைத் தொடர்ந்து ஸ்டாலின் அதிபராக வர விரும்பியதாகத் தெரியவில்லை. ரஷ்ய வரலாற்றின் துயரம் லெனின் இறந்தது, அதைவிடப் பெரிய துயரம் ஸ்டாலின் ரஷ்ய அதிபராக அவரைத் தொடர்ந்தது. இத்தகைய சம்பவங்கள், வரலாற்றின் குரூரமான நகைச்சுவை என்று எண்ணத் தோன்றுகிறது. 1948ல் காந்திஜியும், 1968ல் தமிழ்நாட்டில் அண்ணாவும் அமரர்கள் ஆகாமலிருந்திருந்தால், இந்திய, தமிழ் நாட்டுச் சரித்திரம் வேறு மாதிரியாக(நல்ல மாதிரியாக) மாறி இருந்திருக்கக் கூடும்.
மனிதாபிமானத்தை அஸ்திவாரமாகக் கொண்ட மார்க்ஸியத்தின் பேரில் ஆண்ட ஆட்சியாளர்கள், மார்க்ஸையும் மனிதாபிமானத்தையும் மறந்ததுதான் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குக் காரணம். நான் வார்ஸாவிலிருந்தபோது (போலந்து) பல்கலைக்கழகத் தாழ்வாரங்களில் பிரபலமாகியிருந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு: ‘ போலந்து ராணுவ ஆட்சியாளர் , கார்ல் மார்க்ஸிடம், தொலைக்காட்சியில் தோன்றி தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறும்படி சொல்லுகிறார். மார்க்ஸ், தமக்கு ஒரு நிமிஷம் போதுமென்று கூறிவிட்டு, தொலைக்காட்சியில் தோன்றிக் கூறுகிறார்:’ உலகத் தொழிலாளர்களே,
என்னை மன்னியுங்கள்’ .
மார்க்ஸியத்தில் எந்தத் தவறுமில்லை. அதைச் செயல்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, தொழிலாளர் சர்வாதிகாரத்துக்குப் பதிலாகத் தன்னலத்துக்காகத் தனிப்பட்டவர்களின் சர்வாதிகாரத்தை முன் நிறுத்திய ஆட்சியாளர்களின் கொடுமைக்கு மார்க்ஸியம் பொறுப்பாகமுடியுமா? மார்க்ஸ் அவர் காலம் வரை நடந்த சரித்திர நிகழ்வுகளை வைத்துக் கொண்டு தம் கோட்பாடுகளை வரையறுத்தார். இருபதாம் நூற்றாண்டில் முதலாளித்துவ அடையாளம், காலனி ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு புதிய கோலம் கொண்டது. அமெரிக்காவில் ராணுவ-தொழில்துறை(military-industrial complex) கூட்டுறவின் புதிய உறவில், கம்யூனிஸ எதிர்ப்பு, பொருளாதாரச் சந்தை- ஏகாதிபத்யம் உருவாவதற்குக் காரணமாகியது.. உலக மயமாக்குதல் என்பதின் பேரில், அமெரிக்க நுகர் பொருள்கள் (கொக்ககோலா, மாக்டொனல்ட் முதலியன) அமெரிக்காவின் கலாசார ஆக்ரமிப்பின் குறியீடுகள் ஆயின.
மார்க்ஸ், முதலாளித்துவத்தின் இந்தப் புதிய அவதாரங்களை எதிர்பார்த்திருக்க முடியாது என்றாலும், தனிமனிதப் பேராசையின் பெரும் விளைவாகிய முதலாளித்துவம் அது எந்த வடிவத்தில் இருந்தாலும், அதன் அபரிமிதமான வளர்ச்சி வீக்கத்தில் வெடித்து அழியாமலிருக்க முடியாது என்று கூறியிருப்பது, இன்றைய அமெரிக்க நிகழ்வுகளினால் நிரூபணமாகிவருகிறது. அப்படியிருக்கும்போது, மன்மோகன்சிங், சிதம்பரம், அலூவாலியா போன்ற நம் பொருளாதார மேதைகள், அமெரிக்க முன்மாதிரியாகிய பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட மாட்டோமென்று கூறிக் கொண்டிருப்பது வெட்கக் கேடு. வால் ஸ்ட்ரீட் தோல்வியில், ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப் பட்டிருக்கும் அளவுக்கு நாம் பாதிக்கப் படவில்லை என்பதற்கு முக்கிய காரணம், நம் தேசிய வங்கிகள் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இன்னும் இருந்து வருவதுதான்.
நன்றி : உயிர்மை
முதலாளித்துவத்தின் வீழ்ச்சியெபது வெறுமனே வால் ஸ்றீரின் விழ்ச்சியல்ல. தவிர இந்திரா பார்த்த சாரதிக்கு ஏகாதிபத்திய உற்பத்தி முறைகள் பற்றியோ மூலதனம் பற்றியோ எந்த அடிப்படை அறிவும் தேடலும் இருப்பதாகத் தெரியவில்லை. மார்க்சியத்தைக் கேலி செய்து வெறுப்பு எழுத்துக்களைக் கக்கிய மேற்குலக முதலாளித்துவப் பத்திரிகைகளே இன்று மார்க்சியத்தை நிராகரித்து மக்களிடம் செல்லமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்ட சூழ்னிலையில் இந்திரா பார்த்தசாரதியின் இக்கட்டுரை விசனத்திற்குரியது.
இந்திரா பார்த்தசாரதியிடம் யார்? மாக்ஸியத்தை எதிர்பார்த்தார்கள்??
அது சர்வதேசதொழிலாளர்கட்சிக்குரியது. அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்கட்சிகளுக்குரியது
பலவித தவறுகள் இருந்தும்கூடா.அவை விமர்சனத்திற்குரியவே அல்லாமல் வேறு ஒன்றும்மில்லை. வேறுவார்த்தைகளில் சொன்னால் “தனித்தனியாக நடைபோடுவோம் ஒன்றாகப் போரிடுவோம்” ( போராட்டம் என்றால் ஆயுதம் வெடிகுண்டு என அர்த்தம் கொள்ளக்கூடாது )