தேசிய அளவில் புகழ்பெற்ற தமிழர்கள் என்ற பட்டியலில் ராஜாஜி, காமராஜர் ஆகியோரைச் சேர்ப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பெயரைச் சேர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் கொண்டவர் காயிதே மில்லத்.
கண்ணியமானவர், எளிமையானவர். தேசபக்தி நிரம்பியவர். நேர்மையானவர் என்று பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரர். சென்னை மாகாண சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை, இந்திய அரசியல் நிர்ணய சபை ஆகிய இந்தியாவின் அதிமுக்கிய அவைகள் அனைத்திலும் இடம்பெற்ற தமிழர்.
முகமது அலி ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் லீக் இயங்கியபோது அதன் முக்கியத்தலைவராக இருந்தவர் காயிதே மில்லத். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம் லிக்கையும் பிரித்துவிடுவது என்று முடிவானது. அப்போது இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக காயிதே மில்லத்தும் பாகிஸ்தான் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பெயர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைவராக காயிதே மில்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுதந்தரத்துக்குப் பிறகான முதல் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடலாம் என்று காயிதே மில்லத்துக்கு அழைப்பிவிடுத்தார் நேரு. அப்போது காங்கிரஸின் சின்னத்தில் நின்றால் வெற்றி சர்வநிச்சயம். ஆனாலுல் முஸ்லிம் லீக் சுயமரியாதையுடன் இயங்கி, தனித்தன்மை காக்கும் என்று சொல்லிவிட்டார் காயிதே மில்லத்.
முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைகள் விஷயத்தில் நேர்மையுடனும் துணிவுடனும் தேர்தல் அரசியல் நோக்கங்களைப் புறக்கணித்தும் இயங்கியவர் காயிதே மில்லத்.
இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தபோது இந்திக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர் காயிதே மில்லத்.
”ஓர் உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார் காயிதே மில்லத்.
அதேபோல தேவிகுளம் பீர்மேடு விவகாரத்திலும் தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தார் காயிதே மில்லத். அந்தப் பகுதிகளில் தமிழர்களே அதிகம். தமிழ் பேசுபவர்களே அதிகம். ஆகவே, அந்தப் பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டியது என்றார்.
இத்தனைக்கும் காயிதே மில்லத்துக்கு கேரளாவில் செல்வாக்கு மிக அதிகம். தேவிகுளம், பீர்மேடு விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாகப் பேசினால் அவருடைய செல்வாக்கு பன்மடங்கு உயரும். ஆனாலும் உண்மையின் பக்கம் நின்றார் காயிதே மில்லத்.
ஒருகட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுடன் சென்றுவிட்டாலும்கூட காயிதே மில்லத்துக்கு கேரளாவில் இருந்த செல்வாக்கு மாறவில்லை. அதன் பிறகு நடந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றார் காயிதே மில்லத். இதில் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம், தேர்தல் பிரசாரத்துக்காக அவர் தனது தொகுதிப்பக்கமே செல்லவில்லை. காயிதே மில்லத்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்குக்கு அந்த வெற்றிகள் சத்திய சாட்சிகள்.
காயிதே மில்லத் எப்படித் தமிழராகவும் தமிழ்ப் பற்றாளராகவும் விளங்கினாரோ அதைப்போலவே பரிபூரண இந்தியராகவும் விளங்கினார்.
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்தபோது அதை எதிர்த்த அரசியல் தலைவர்களுள் காயிதே மில்லத் முக்கியமானவர். நமது அருமைவாய்ந்த தாயகத்தின் மீது பாகிஸ்தானியர் நடத்தும் ஆக்கிரமிப்புக்கு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கின்றேன். ஐயந்திரிபற்ற எனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். இந்தியா எங்கணும் உள்ள முஸ்லிம் மக்களும் மற்றுமுள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்திய அரசாங்கத்தின் பின்னாலும் பிரதமரின் பின்னாலும் ஒருமுகமாகவும் உறுதியாகவும் நிற்கிறார்கள் என்றார் காயிதே மில்லத்.