தருமபுரி அருகே , திவ்யா என்ற பெண்ணும் இளவரசன் என்பவரும் சில காலம் காதலித்து வந்திருக்கின்றனர், குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுக்க, தாங்களாகவே திருமணம் செய்துகொண்டு சேலம் போலீசாரிடம் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
அந்தத் திருமணத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் வன்னிய சாதி வெறியர்களால் சூறையாடப்பட்டு தீவைத்துக் கொளுத்பப்பட்டுள்ளது.
உயர்சாதி வெறியர்கள் அந்த கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து அங்கிருந்து வாகனங்கள், மற்றும் பொருட்களை சேதப்படுத்தி தீ வைத்தனர். மேலும் பள்ளி குழந்தைகளின் சான்றுகள், புத்தகங்கள், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்களையும் தீ வைத்து எரித்தனர்
மனித மிருகங்கள் போன்று நடந்துகொண்ட சாதி வெறியர்கள், தாழ்த்தபட்டவர்கள் வீடுகளைத் தீவைக்க மறுபகுதியினர் அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேறாதவாறு பட்டாசுகளைச் சாரமாரியாக வீசினர். சில மணி நேரங்களுள் 300 வீடுகள் முற்றாக அழிந்து போயின். சொத்துக்கள் உயர்சாதிக் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டன,
போலிஸ் படை சம்பவம் நடந்து முடிந்த பிறகே நடவடிக்கை என விரைந்திருக்கிறது.
வன்னியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் நத்தம் காலனியைச் சூழ்ந்து கொண்டு தாக்கியதாகவும், மிரண்டுபோய் வெளியேறியவர்கள் இரவெல்லாம் கடும் குளிரில், திறந்தவெளியில் தங்க நேரந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நூற்றாண்டின் பின் தங்கிய உலக அவமானம் இந்தச் சாதி வெறியர்கள். இந்தியாவின் வல்லரசுக் கனவினுள்ளும், தமிழ் இனவாதத்தினுள்ளும் ஒளிந்திருப்பவர்கள் இவர்களே.
இழப்புக்கள் இன்னும் வெளியாகவில்லை.
சினிமா, ஊடகம், சட்டம், ஆட்சி, இந்து மத உறுப்புக்கள் ஆகியவற்றின் துணையோடு தாழ்த்தப்பட்ட மக்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் படுகொலை செய்யும் உயர்சாதி சாதி வெறியர்களுக்கு எதிராக உலகின் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் அணிதிரள வேண்டிய நிலை ஏற்படுத்தப்ப்ட வேண்டும்.