பெருந்தோட்டத் தொழிலாளர்களை பெருவாரியாக உள்ளடக்கிய மலையக மக்களுக்கு இன்னும் இருப்பதற்கு வீடும் இல்லை காணியும் இல்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்றுக் கொள்வதற்கான முறையான சம்பளத் திட்டமும் இல்லை. 1823ஆம் ஆண்டு இங்கு வந்து இலங்கை நாட்டிற்கு பெருந்தோட்ட பொருளாதார ரீதியாக முகவரியைக் கொடுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் முகவரி இல்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றுடன் தொடர்பு கொண்டிருந்த தொழிற்சங்கங்களோ அரசியல் கட்சிகள் எனப்படுபவையோ இவ் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்ப்பதில் வெற்றிபெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். வாக்குகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றுக் கொண்ட ஐ.தே. கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ மலையக மக்களை அடிமைகளாக கொண்டு செயற்படுகின்றனர்.
மலையக மக்களிடையே நேர்மையாக செயற்பட்ட சில தனிநபர்களையும் அமைப்புகளையும் தொடர்ந்து எமது மக்கள் தொழிலாளர் சங்கம் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக புதிய பாதையில் புதிய இலக்குகளை நோக்கி பயணம் செய்கின்றது.
இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே 01ஆம் திகதி காலை 10 மணிக்கு கஹவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள கூட்டு மே தின நிகழ்வு தொடர்பாக அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
மக்கள் தொழிலாளர் சங்கம் தொழிற்சங்க இயக்கத்தை பெயரளவில் அன்றி உண்மையாகவே தொழிலாளர்களினால் இயக்கவும் வளர்க்கவும் முடியுமென்பதை பல இடையூறுகளுக்கு மத்தியிலும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. தோட்டக் கம்பனிகளின் சூழ்ச்சிகள், தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள், அடக்குமுறைகள் சீரழிந்த தொழிற்சங்க தலைவர்களின் சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு மத்தியில் தொழிலாளர்களை அணித்திரட்டி ஆற்றல் உள்ளவர்களாக்கி தொழிற்சங்கத்தை உயிர்ப்புடன் முன்னெடுக்கிறது.
தொடர்ந்து எட்டாக்கனியாக இருந்து வரும் வீட்டு காணி உரிமைக்கான குரலை ஓங்கி ஒலிக்க செய்தது எமது கடந்த மே தின கூட்டம். அதற்காக எமது மக்கள் தொழிலாளர் சங்கம் தனியாகவும் அடிப்படை அரசியல் கொள்கை முரண்பாடுள்ள தனி நபர்களையும் அமைப்புகளையும்கூட இணக்கத்துக்கு கொண்டுவந்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுக்க பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு எனும் பொது அமைப்பை கட்டியெழுப்பியுள்ளது. அவ் அமைப்பின் தேவையை குறுங்குழுவாத அமைப்புகள் தனிநபர்களை தவிர ஏறக்குறைய அனைத்து மலையக அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
கடந்த மேதினத்தில் புத்துயிரளிக்கப்பட்ட மலையக மக்களின் காணி வீட்டு உரிமைக் கோரிக்கை கொஸ்லந்த மீரியபெத்த அவலத்துடன் மலையகத்தின் பட்டித் தொட்டில்களில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்த ஆரோக்கியமான மக்கள் நடவடிக்கைகளை பயன்படுத்திக் கொண்டு மலையக மக்களுக்கு வீடுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து மலையக மக்களின் அதிக வாக்குகளையும் பெற்றுக் கொண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். ரணில் பிரதமரானார். மைத்திரி-ரணில் அரசாங்கம் அமைந்தது. முன்னைய மஹிந்த அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடிய மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையக விவகாரங்களுக்கு அமைச்சர்களாகியுள்ளனர். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொள்ள காணிகளை வழங்குவதாக கூறுகிறது. வீடமைப்பு பற்றி எவ்வித அதிகாரமும் இல்லாத தோட்ட உட்கட்டமைப்பு அபிவிவிருத்தி அமைச்சு வீடுகளை கட்டிக் கொடுக்க அடிக்கல் நாட்டுகிறது. இவை தோட்ட லயன் அறைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கே சொந்தமாக்குவதாக லயன் அறைகளுக்கான உறுதிகள் எனக்கூறி ரணில் விக்கிரமசிங்க ஒன்றல்ல பல தடவைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஏமாற்று நடவடிக்களை நினைவுப்படுத்துவதுடன் அவ் ஏமாற்று நடவடிக்கைகளே தொடருமோ என்ற நம்பிக்கையீனமே மிஞ்சுகிறது.
அதனால் ஜனாதிபதி, பிரதமர், மலையக அமைச்சர்கள் போன்றவர்களின் வாக்குறுதிகளுக்கு அப்பால் மலையக மக்களின் காணி வீட்டுரிமை என்ற கனவு மெய்பட தொடர்ந்து போராடுவோம் என 2015ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினத்தில் மக்கள் தொழிலாளர் சங்கம் அறைகூவல் விடுக்கிறது. காலத்திற்கு காலம் நியாயமான சம்பள உயர்வை உறுதி செய்யும் சம்பளத்திட்டத்துடனான கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்தி போராடுவோம்.
கூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் நடைமுறையில் இருக்கும் பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தத்தின் சில ஏற்பாடுகள் சட்டத்திற்கு முரணானவை என்பதையும் கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கும் சட்டபூர்வமான தொழிலாளர்களின் உரிமைகளையும் மீறுவதாக பெருந்தோட்ட கம்பனிகள் நடந்து கொள்வதையும் தோலுரித்துக் காட்டி (தொழில் ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பாக முறைபாடு செய்யப்பட்டுள்ளது) தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவசியமான நடவடிக்கைகளில் மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது.
இந்த தொடக்கத்துடன் கூட்டு ஒப்பந்தமும் சம்பள உயர்வும் எல்லா மட்டங்களிலும் பேசப்படும் விடயமாகியுள்ளது. தொழிலாளர்கள் சார்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வாய்ப்பை பெற்றுள்ள தொழிற்சங்கங்கள் ஒருமுகமாக தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளன. தற்போது அரசாங்கத்துடன் இல்லாத தொழிற்சங்கங்களுக்கும் அரசுடன் இணைந்திருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. எனினும் இம்முரண்பாடுகள் தொழிலாளர்களுக்கு நன்மை பயப்பதாக மாறுபடும் என்று நம்பிக்கை கொண்டிருக்க முடியாது.
நியாயமான சம்பள உயர்வை உறுதி செய்து கொண்டு தொழில் உரிமைகளை மீள உறுதி செய்து கொள்ளவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது எமது கடமையும் பொறுப்புமாகும்.
அத்துடன் ஏனைய தொழிலாளர்களினதும் அடக்கப்படும் தேசிய இனங்களினதும் மக்கள் பிரிவினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதில் நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நாம் செயற்பட வேண்டும். அவர்களுக்கு எமது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். அதனூடாக நாடளவிலும் சர்வதே ரீதியிலும் எமது விடுதலைக்கு எதிரான முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிய முடியும்.
இவ்வாறான தொடர் நடவடிக்கைகளினூடாக நாம் எமது உழைப்பிற்கான உரிய இடத்தை நிலை நாட்டிக்கொள்ள இந்த 2015ஆம் ஆண்டு மே தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.
இம் மே தினத்தை மக்கள் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் பண்பாட்டுக் கழகம் உட்பட பல அமைப்புகளும் இந்நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களினதும் அடக்கப்படும் தேசிய இனங்களினதும் ஒடுக்கப்படும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன் அதனடிப்படையில் காவத்தையில் மே முதலாம் திகதி கூட்டு மே தின நிகழ்வாக நடத்தப்படுகிறது. இக்கூட்டு மேதினத்திற்கு அனைத்து உழைக்கும் மக்களையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம்.