கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உறவுகள் காணாமல் போன குடும்பங்களுக்கு இராணுவப் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
கடந்த 05 ம் திகதி கொழும்பில் நடாத்தப்படவிருந்த காணாமல் போனோர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களிலிருந்து அவர்களின் உறவுகள் கொழும்பு நோக்கிச் சென்ற போது வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி தமது வேதனைகளை உலகிற்கு பறைசாற்றியதோடு தமக்கு நீதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இவ் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்த உறவுகளை தொலைத்தவர்களுக்கு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் வீடுகளுக்கு அருகில் சென்று அவர்களது விபரங்களை புலனாய்வாளர்கள் பதிந்து வருகின்ற செயற்பாட்டால் மிகவும் அச்சமடைந்துள்ள உறவுகள் செய்வதறியாதுள்ளனர்.
மேலும் ஒரு சில குடும்பங்களுக்கு இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாதென அச்சுறுத்தலும் நேரடியாகவே புலனாய்வாளர்களால் விடுவிக்கப்பட்டுள்ளது.