திருகோணமலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுள்ளன. ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 03.12.2010 அன்று ஆணைக்குழுவின் அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், ‘உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கே நாங்கள் இங்கு வந்துள்ளோம். 30 வருட காலமாக இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்து நிரந்தர சமாதானத்தை அடையவே முயற்சிக்கின்றோம்” எனக்குறிப்பிட்டிருக்கிறார். அதே வேளை ‘இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம். இந்த விடயம் குறித்து எமது ஆணைக்குழு விரிவான பரிந்துரையை அரசாங்கத்துக்கு முன்வைக்கும் என்பதனை உங்களுக்கு கூறுகின்றேன்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
இவ்வமர்வில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், சாட்சியங்களும் பதிவு செய்யபப்பட்டன. பெற்றுக் கொண்ட விண்ணப்பங்களைக் கொண்டு தம்மால் முடியுமான முயற்சிகளை மேற்கொண்டு, காணமல் போனவர்களை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் நடைபெற்ற ஆணைக்குழு அமர்வில் சாடசியமளித்த தியாகராஜா பரமேஸ்வரி எனும் தாயார் , கணவரை இழந்த நிலையில் மகனைக் கஷ்டப்பட்டே வளர்த்தேன். எனது மகன் நகைக்கடையில் வேலை செய்வதற்காக கொழும்பில் இருந்த வேளை 2008.07.09 அம் திகதி நடைபெற்ற சுற்றி வளைப்பில் காணமல் போய்விட்டார். எனது மகன் தொடர்பில் எந்த தகவலும் இல்லாமல் இருக்கின்றேன் எனக்கூறியதுடன், ‘காணமல் போன எனது மகன் இல்லாமல் நான் பைத்தியம் பிடித்தவள் போன்று அலைகின்றேன். எனவே நான் இறக்கும் முன்னர் எனது மகனைத் தேடித்தாருங்கள்” என சாட்சியமளித்திருக்கிறார். மெலும் பலரும் சாட்சியங்கைளப் பதிவு செய்துள்ளனர்