காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதே பாஜகவின் கோஷம். 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இந்த கோஷம் இந்திய அளவில் வலதுசாரிகளால் முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆறு ஆண்டுகளில் பாஜகவால் காங்கிரஸ் கட்சியை நினைத்தது போல ஒழித்துக் கட்ட முடியவில்லை.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைப்பதும் பாஜக வரவிடாமல் தடுப்பதுமே காங்கிரஸ் கட்சியின் தற்கால பணியாக இருக்கிறது. அதில் காங்கிரஸ் ஓரளவு வெற்றியும் பெற்றியிருக்கிறது. தமிழக தேர்தலைப் பொருத்தவரை திமுக என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு தேர்தலைச் சந்திக்கும் நிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது. இந்தியாவின் எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கு பாஜகவையும் அதன் கூட்டணியையும் வர விடாமல் தடுக்கும் அரசியலில் காங்கிரஸ் தன் வேலையை மூர்க்கமாக்கியிருக்கிறது. ஆனால், இப்போது தமிழகத்தில் 25 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் 2011-ஆம் ஆண்டு 63 தொகுதிகளை திமுகவிடம் பெற்றது. ஆனால் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வென்றது பெரும்பான்மை தொகுதிகளில் படு தோல்வியடைந்தது. அந்த தேர்தலில் திமுகவுக்கும் அது பின்னடைவாக இருந்தது.
பின்னர் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 41 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்தது. அதில் எட்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. பெரும்பான்மை தொகுதிகளில் தோற்றதோடு. திமுக கணிசமான தொகுதிகளில் வென்ற போதும் காங்கிரஸ் கட்சி தோற்றதால் திமுகவால் ஆட்சியமைக்க முடியாமல் போனது.
அதன் விளையாவகவே இப்போது வெறும் 25 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் 50 தொகுதிகள் வரை கேட்டது. திமுகவோ 20 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் அதற்கு மேல் கொடுக்க முடியாது என்றது. உண்மையில் திமுக காங்கிரஸ் கட்சியுடனான தன் கூட்டணியை முறித்துக் கொள்ளும் நிலையில் இருந்தது. டெல்லியில் உள்ள தலைமை தலையிட்டுதான் பாஜவை கட்டுபப்டுத்த நமக்கு திமுகவின் உதவி தேவைப்படும் எனவே அவர்கள் கொடுக்கும் தொகுதியை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல பின்னரே திமுக கொடுத்த தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுக் கொண்டது.
இப்போது காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இரண்டு தேசியக் கட்சிகளில் காங்கிரஸ் தமிழகத்தில் செல்வாக்கு உள்ள கட்சி.ஆனால் கடந்த பல தேர்தல்களில் அது தோற்று தேய்ந்து வந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவே அதற்கு யிரூட்டினார்.
இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் 20 தொகுதிகளாவது வென்றால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வு. இல்லை என்றால் இந்த தேர்தலுடன் காங்கிரஸ் தனிமைப்படும் சூழல் உருவாகும்.