இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தமை தொடர்பாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரியவினால் தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த கருத்துக்களை அவர் மறுத்திருக்கும் நிலையில் இன்று பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தமை தொடர்பாக விசாரணையொன்றின் அவசியம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான “த ஐலண்ட்” வார இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் இலண்டனில் ஜனாதிபதிக்கெதிரான ஆர்ப்பாட்டத்தை புலிகளே ஏற்பாடு செய்தார்கள் என்றவாறாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் பரப்புரைகளையும் மறுத்துரைத்திருந்த அவர், அதனை தமிழ் பொது மக்களே ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் அவரது கருத்துக்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு பெரும் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. கரு ஜயசூரியவை நாட்டினதும் இராணுவத்தினதும் துரோகியாக சித்தரிக்க முனைந்தது.
அத்துடன் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றையும் கொண்டுவர முனைகின்றது. இவ்வளவுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அவரது பாராளுமன்றப் பதவியை பறிக்க முடியாது என்பது வேறு விடயம்.
ஏனெனில் அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்றாலும், கரு ஜயசூரியவின் வெற்றிடத்துக்கு மீண்டும் அவரையே நியமிப்பதாக ஐ.தே.க. எழுத்து மூலமாகத் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் பாராளுமன்றம் வருவதில் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. அவ்வாறான ஒரு சந்திரிக்காவின் ஆட்சியில் அன்றைய எதிர்க்கட்சி உறுப்பினரான டொக்டர் ராஜித சேனாரத்தினவுக்கு ஏற்பட்டது.
விமானப்படைக்கு காலாவதியான மருந்துப் பொருட்கள் விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, பாராளுமன்றப் பதவி பறிக்கப்பட்ட போதும், ஐ.தே.க. மீண்டும் அவரையே நியமித்து அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டிருந்தது. அந்த வகையில் கட்சியின் பிரதித் தலைவர் தொடர்பாகவும் அதே நடைமுறையைத் தான் அக்கட்சி கடைப்பிடிக்கும் என்பது தெரிந்ததே.
ஆயினும் இந்த விடயத்தை வைத்து ஐ.தே.க.விற்கு இருக்கும் செல்வாக்கை மழுங்கடிக்க அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கரு ஜயசூரியவும் திடீர் பல்டி அடித்து தாம் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்துள்ளார்.
தனது பேட்டியைப் பிரசுரித்திருந்த “த ஐலண்ட்” பத்திரிகைக்கு அது தொடர்பான மறுப்புக் கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியிருந்தார். அந்த மறுப்புக் கடிதம் அப்பத்திரிகையின் இன்றைய பதிப்பின் இரண்டாம் பக்கத்தில் வெளியாகியிருந்தது.
அவ்வாறான பின்னணியில் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது கரு ஜயசூரியவின் பேட்டி வெளியான ஞாயிறு ஐலண்ட் மற்றும் அவரது மறுப்பறிக்கை வெளியான இன்றைய ஐலண்ட் பத்திரிகைகளை முன்வைத்து அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் விசேட ஒழுங்குப் பிரச்சினையொன்றைக் கிளப்பினார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியாகத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே அரசாங்கம் அதனை தெளிவான ஆதாரங்களுடன் மறுத்திருக்கும் நிலையில், கரு ஜயசூரியவின் கருத்துக்கள் அரசாங்கத்துக்கெதிரானவர்களுக்குப் பெரும் வாய்ப்பாகி விடும் என்று அவர் வாதிட்டார்.
இணையத்தள செய்திச் சேவைகள் காரணமாக தற்போதைக்கு அந்த விடயம் சர்வதேசம் வரை பரவி விட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், அதனை மறுப்பதாயின் அப்பத்திரிகை வெளியான ஞாயிறு அல்லது அதற்கடுத்த நாளே கரு ஜயசூரிய மறுப்பறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்படியன்றி இன்றைய தினம் வெளியாகியிருக்கும் மறுப்பறிக்கை எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய பதிலளித்து உரையாற்றிய போது பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
தானும் ஒரு காலத்தில் தனது அனைத்துப் பதவிகளையும் உதறி எறிந்து விட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அரசாங்கத்தின் கரத்தைப் பலப்படுத்த அரசுப் பக்கம் இணைந்திருந்ததை ஞாபகப்படுத்தி கரு ஜயசூரிய, போர்க்குற்றங்கள் தொடர்பாக தான் ஒரு போதும் அப்படியான கருத்துக்களை வெளியிடவே இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துரைத்தார்.
ஆயினும் அவர் தொடர்ந்து உரையாற்ற விடாமல் ஆளுந்தரப்பினர் கடும் இடைஞ்சல் கொடுத்தனர். அமைச்சர் மேர்வின் சில்வாவின் குறுக்கீடுகள் அதிகமாக இருந்தன. சபாநாயகரால் கூட சபையைக் கட்டுப்படுத்த முடியாது போனது.
அதன் காரணமாக கடுப்படைந்த சபாநாயகர் தனது உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறும் பட்சத்தில் சபையை முழு நாளும் இடைநிறுத்திவிட்டு தான் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கப் போவதாக சலிப்புடன் குறிப்பிட்டார். ஆயினும் ஆளுந்தரப்பினர் மசியவில்லை.
அதன் பின் சபை பதினைந்து நிமிடங்கள் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று வெளியாகியுள்ள ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் கரு ஜயசூரியவின் மறுப்பறிக்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயத்தை அவர் மறுத்துரைத்திருந்தாலும், இறுதிக்கட்டப் போரில் ஏராளம் சிவிலியன்கள் காயமுற்ற விடயத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பேரின வாதமும் பெளத்த சிங்கள மேலாதிக்கவாதமும் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கான சூழல் மீண்டும் உருவாகியிருப்ப்தை இவர்களின் பேச்சுக்கள் மறுபடி மறுபடி நிருபணம் செய்கின்றன. மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிலிருந்து நாடுதிரும்பிய பின்னர் உருவான இந்த சூழலுக்கு மக்கள்நலன் சாராது தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டமும் பிரதான பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளீத்து திரிவதாலோ அல்லது சுய பச்சாதாபம் கொளவதாலோ நாம் நம்மையே ஏமாற்றீக் கொள்கிறோம். இன்றூ வாழ்வதில் இருக்கும் அர்த்தம் நாளக்கு எனும் போது பயனற்றூ விடுகிறது.நமக்காகத்தானே இந்த வாழ்க்கை.