கடந்த 29.07.2011 இரவு 7.30 மணியளவில் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் ஆயுத தாரிகளான இரண்டு குண்டர்களால் திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தலையில் படுகாயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்- போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒரு மிருகத்தனமான தாக்குதல் மட்டுமன்றி உதயன் நாளிதழ் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும். அத்துடன் ஒரு ஊடகவியலாளர் மீதான தாக்குதல் என்பது முழு ஊடகத்துறை மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலேயாகும். இத்தகைய தாக்குதலை எமது புதிய- ஜனநாயக மாக்சிய- லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை வடக்கில் ஜனநாயகம், இயல்பு வாழ்வு, கருத்துச் சுதந்திரம் எந்த அளவிற்கு இருந்து வருகிறது என்பதை அளவிடுவதற்கு இத்தாக்குதலும் இதுபோன்ற ஏனைய தாக்குதல்களும் உரிய அளவுகோல்கள் என்றே கூற முடியும்.
இவ்வாறு உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து புதிய- ஜனநாயக மாக்சிய லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில், உதயன் நாளிதழ் மீதும் அதன் பணிமனை, அதன் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகவே காணப்படுகிறது. அண்மையில் அதன் ஊடகவியலாளர் செ.கவிதரன் வழி மறித்துத் தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இப்போது செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டு படுகாயத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார். உதயன் நாளிதழ் வெளியிடும் கருத்துக்கள் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஷநூறுமலர்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்| என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு உரிய ஜனநாயக அடிப்படையாகும். கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களை முன்வைப்பதே ஊடகச் சுதந்திரமாகும். அதனை மறுத்து வன்முறையிலும் அராஜகத்திலும் இறங்குவது ஊடக சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என்பனவற்றை மறுத்து மக்கள் விரோத நிலைப்பாட்டை முன்னெடுப்பதாகவே இருக்க முடியும். இன்றைய சூழலில் இத்தாக்குதலுக்கு நீதியான விசாரணையும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதும் சாத்தியம் அற்ற ஒன்று என்றே நாம் காண்கின்றோம். ஏனெனில் இதுவரை கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, ஊடகவியலாளர்களுக்கு நீதி நியாயம் கிடைக்காத சூழலே நிலவுகின்றன. எனவே மக்கள் மன்றமே உண்மைகளைக் கண்டறிய முற்பட வேண்டும் என்பதே நாம் கூறக் கூடியதொன்றாகும்.
சி.கா. செந்திவேல்.
பொதுச் செயலாளர்.